விருதை,செப்.1 விருத்தாச்சலத்தில் நடைபெற்ற, ‘‘பெரியார் கொள்கைக் குடும்பங்களின் ஒன்றுகூடல்” நிகழ்வில், கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு, ‘‘சிலம்பை எடு! சினிமாவை விடு! எதிர்ப்பில்தான் கொள்கை உரம் பெறும்! ஆண்களுக்கு சமையல் கலை பயிற்சி முகாம் நடத்துங்கள்! இருபாலரும் முழு உடல் பரிசோதனை செய்யுங்கள்!’’ என்பன உள்ளிட்ட வாழ்வியல் சிந்தனைகள் தந்து வழிகாட்டும் உரை வழங்கினார்.
“பெரியார் கொள்கைக் குடும்பங்களின் ஒன்று கூடல்”
விருத்தாச்சலம் கழக மாவட்டம் சார்பில், “பெரியார் கொள்கைக் குடும்பங்களின் ஒன்று கூடல்” நிகழ்வு, 30.08.2026 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, விருத்தாச்சலம் ஆலிச்சிக்குடி சாலையில் (சேலம் புறவழிச்சாலை) எஸ்.ஏ.எஸ். சிற்றரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மாவட்டத் தலைவர் த.சீ.இளந்திரையன், மாவட்டச் செயலாளர் ப.வெற்றிச்செல்வன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். முன்னதாக, திண்டுக்கல் ஈட்டி கணேசனின், ”மந்திரமா? தந்திரமா?” அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றியும், ஒருங்கி ணைப்பு செய்தும் சிறப்பித்தார். மேலும், கழகக் காப்பாளர் அரங்க.பன்னீர்செல்வம், தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச் செயலாளர் வி.சி.வில்வம், மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி ஆகியோரும் ஒருங்கி ணைப்பாளர்களாக இருந்து நிகழ்ச்சியை சிறக்கச் செய்தனர்.
நிகழ்ச்சியில் ஒன்றாக நடைபெற்ற கருத்தரங்கில் பெரியவர்கள் முதல் பெரியார் பிஞ்சுகள் வரை கலந்து கொண்டு உரைகளை வழங்கினர். பெரியவர்கள், குழந்தைகள் என தனித்தனியாக விளையாட்டுகள் நடைபெற்றன. நிகழ்வு குழந்தைகள் அரங்கம், மகளிர் அரங்கம், வேர்களுக்கு விழுதுகள் பாராட்டு அரங்கம் என்று பகுக்கப்பட்டு நடைபெற்றன. அதன் அடிப்படையில், பெரியார் பிஞ்சுகளின் ஆடல், பாடல், தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக சிலம்பம், கராத்தே போன்ற தற்காப்புக் கலைகளைப் பெரியார் பிஞ்சுகள் செய்துகாட்டி அனைவரையும் அசத்தினர். அதைத் தொடர்ந்து, கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் வாழ்த்துரை வழங்கினார். அடுத்து, பெரியார் பெருந்தொண்டர்கள் அ.இளங்கோவன், வை.இளவரசன், அ.பன்னீர்செல்வம், தங்க மாணிக்கம் ஆகியோருக்கு கழகத் தலைவர் நினைவுப்பரிசு வழங்கி அவர்களை சிறப்பித்தார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
நிறைவாக, கழகத் தலைவர் நிகழ்ச்சிக்குத் தலைமை யேற்று உரையாற்றினார். அவர் தமது உரையில் கைப்பேசியின் செயல்பாட்டைக் குறைத்துக்கொண்டு, வீட்டில் ஒருவருடன் ஒருவர் கலந்து பேசுங்கள் என்றும், சிக்கனமாக வாழவேண்டும் என்றும், கூடுமானவரை கடன் வாங்காமலும், அப்படியே வாங்கினாலும் நேர்மையாக செலுத்த வேண்டும் என்றும் அதற்கு எளிமையாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், குழந்தைகள் பிறந்தால் அவர்கள் பெயரில் ஒரு சேமிப்புக் கணக்குத் தொடங்கி அதை பராமரித்து வரவேண்டும் என்றும், ஆண்களுக்கு சமையல் கலை பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும் என்றும், எதிர்ப்பு வந்தால்தான் நமது கொள்கை உரம் பெறும் என்றும், பெரியார் உடற்பயிற்சி அகம் தொடங்கி நடத்த வேண்டும் என்றும், ‘‘சினிமாவை விடு – சிலம்பத்தை எடு’’ என்று அன்றைய காலகட்டத்தில் நாங்கள் சொல்லிக்கொண்டிருந்ததை தொடர்ந்து கடைப்பிடித்திருந்தால் இன்றைய சூழல் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும், குறிப்பிட்ட நேரத்திற்கு உணவுண்டு, குறிப்பிட்ட நேரம் உறங்கும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட கால இடைவெளியில் முழு உடல் பரிசோதனையை இருபாலரும் மேற்கொள்ள வேண்டும் என்றும், பெரியார் பிஞ்சு பழகுமுகாம் ஆங்காங்கே நடத்த வேண்டும் என்றும், அதற்கு முன்பாக பெரியார் பிஞ்சு இதழ் சந்தா செலுத்தி குழந்தைகளைப் படிக்கச் செய்ய வேண்டும் என்றும் தமது உரை மொத்தத்தையும் வாழ்வியல் உரையாகவே வார்த்துத் தந்தார். இறுதியாக, தோழர்கள் ஆண்கள், பெண்கள், தனித்தனி குடும்பங்களாகக் கழகத் தலைவர் அவர்களுடன் ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர்.
பங்கேற்றோர்
நிகழ்வில், செந்தாழினி, வெற்றிமகிழன், வெற்றிமாறன், பொழிலன், கபிலன், மணியம்மை, சித்தார்த், விடுதலை நிலவன், பெரியார் செல்வி, இளவரசன், அறிவுச்செல்வி, பாரி, கவின், தமிழ்ச்செல்வி, இளங்கனி, விசமதி, செம்மொழி, தமிழ்நிலவன், கவுதமன், கவின் நிலா, யாழ்மொழி, இளமதி, தமிழரசி, சிறீதர், பெரியார் செல்வம், தீரன், தீச்சிதா, இசைநிலா, கவிமித்ரன், அமுதவள்ளி, அருணா, வெண்மதி, அஸ்ஸா ஹம்தானா, அபுபக்கர், சித்திக், மகிழன் இராமநாதன், எழிலன் பூரணச்சந்திரன், மிருதுளாசிறீ, ஆத்விக் உள்ளிட்ட பெரியார் பிஞ்சுகள் கலந்துகொண்டனர். அதே போல, விழாக்குழு வினராக பி.பழனிச்சாமி, செ.சிலம்பரசன், கா.குமரேசன், ந.பசுபதி, சி.சுப்பிரமணியன், கி.பாலமுருகன், செ.கா.இராசேந்திரன், த.தமிழ்ச்செல்வன், மு.முகமது பஷீர், சே.பெரியார் மணி, வெங்கட இராசா, சு.தமிழ்ச்செல்வன், ம.இளங்கோவன், ஆ.அறிவுச்சுடர், ந.சுப்பிரமணியன், ஆ,செந்தில், சு.காரல்மார்க்ஸ், இ.ஆனந்த், இராசசேகர், நா.பாவேந்தர் விரும்பி ஆகியோர் ஒத்துழைப்பில் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது. கழகத் தலைவர் நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பாளர்கள் அனைவருக்கும் பயனாடை அணிவித்து மரியாதை செய்தார். பெரியார் பிஞ்சுகளுக்கும், இருபால் தோழர்களுக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களால் இயக்கப் புத்தகங்கள் நினைவுப்பரிசுகளாக வழங்கப்பட்டன. புலால் உணவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
