பெட்ரோல் – டீசல் விலை உயர்வு வன்மையான கண்டனத்திற்குரியது!!

 ‘‘ஜூம்லாக்களை’’ வாரி வாரி விட்டு, பதவிக்கு வந்து, வாக்களித்த மக்கள் மீது பல்முனைத் தாக்குதலை நடத்துவது ஏற்கத்தக்கதா?
கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, விலையைக் குறைத்து, மக்களை என்றைக்காவது மகிழச் செய்தது உண்டா?
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை

‘‘ஜூம்லாக்களை’’ வாரி வாரி விட்டு, பதவிக்கு வந்து, வாக்களித்த மக்கள் மீது பல்முனைத் தாக்குதலை நடத்துவது ஏற்கத்தக்கதா? கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, விலையைக் குறைத்து, மக்களை என்றைக்காவது மகிழச் செய்தது உண்டா? பெட்ரோல் – டீசல் விலை உயர்வு வன்மையான கண்டனத்திற்குரியது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

பிரதமர் மோடி தலைமையில் அமைந்துள்ள ஒன்றிய பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். அரசு – ஏழை, எளிய விவசாயிகளின் நலனுக்கு எதிரான ஓர் அரசுதான் என்பது நாளொரு மேனியும், பொழுதொரு வண்ண மும் தெளிவாகி வருகின்றது.

மேற்காசியாவில் நடைபெறும் (இது ஒரு திணிக்கப்பட்ட போர் என்ற உண்மை ஒருபுறம் இருந்தாலும்) போரின் காரணமாக அதற்குச் சிறிதும் சம்பந்தப்படாத, உலகின் பற்பல நாடுகளும், மக்களும் கடும் விலை கொடுத்து சொல்லொணாத் துயரத்தை நாளும் சந்தித்து வேதனைப்படும் நிலையே தொடர்கிறது.

5 மாநில தேர்தல்கள் முடிவடையும்வரை காத்திருந்து,  பெட்ரோல் – டீசல் விலை உயர்த்தப்பட்டதால், மக்களின் அன்றாட வாழ்க்கை – வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்ட பரிதாப நிலை நடைமுறைக் காட்சியாகிவிட்டது!

சாதாரண நடுத்தர, இடை நடுத்தர மக்களும், அடிமட்டத் தொழிலாளர்களும், விவசாயிகள் பலரும் பயன்படுத்தும் இரு சக்கர வாகனப் பயணம், அதுபோலவே விவசாயிகள் தங்களது விவசாயத்திற்காக இயந்திரக் கருவிகளைப் பயன்படுத்தும் நிலையில், பெட்ரோல், டீசல் விலையேற்றம் மூன்று ரூபாய்க்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒன்றிய பா.ஜ.க. அரசின்
இசைவு பெற்றே
விலை உயர்த்தி உள்ளனர்!

எண்ணெய் முதலாளிகள் ஒன்றிய பா.ஜ.க. அரசின் இசைவு பெற்றே விலை உயர்த்தி உள்ளனர் என்பது உலகறிந்த உண்மை!

பெட்ரோல் – டீசல் விலை உயர்வு என்பது வாகன ஓட்டிகளை மட்டும் பாதிக்கக் கூடிய ஒன்று அல்ல!

சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் அதனால் பாதிப்படைவர். குறிப்பாக, யூரியா உரம் குறைப்பு ஒருபுறம்; மறுபுறம் டிராக்டர் மற்றும் வேளாண் அறுவடை போன்ற பல பணிகளுக்கு இப்போது நவீன விஞ்ஞான முறையைப் பயன்படுத்துகின்றனர் விவசாயிகள் என்பதால், அவர்களை வெகு வாகப் பாதிக்காதா?

‘‘விலைவாசி உயர்வைத் தடுப்போம், கட்டுக்குள் வைப்போம்’’ என்று கூறித்தான், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி பதவிக்கு வந்தது!

‘‘ஜூம்லாக்களை’’ வாரி வாரி விட்டு,
பதவிக்கு வந்தனர்!

அதுமட்டுமா? விவசாயிகளின் விலை பொருள்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் (Minimum Support Price) செய்து, அவர்களது வருமானத்தை இரட்டிப்பாக்கித் தருவோம் என்றெல்லாம் ‘‘ஜூம்லாக்களை’’ வாரி வாரி விட்டு, பதவிக்கு வந்து, இப்போது வாக்களித்த மக்கள் மீது இப்படி நெருப்பை அள்ளிக் கொட்டுவதுபோல, பல்முனைத் தாக்குதலை நடத்துவது ஏற்கத்தக்கதா?

வீட்டிற்கு வாங்கும் காய்கறிகள் பயன்பாட்டையும் பாதிக்கும் இந்த பெட்ரோல் – டீசல் விலை உயர்வு!

இதோடு நிற்கப் போவதில்லை.

அமெரிக்க டாலருக்கு நிகராக
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு!

அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 96 ரூபாயைத் தாண்டி வரலாற்றுச் சரிவைக் கண்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார நிலையை கீழிறக்கத்திற்குக் கொண்டு செல்லுகிறது.

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக, கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான விலையேற்றத்தால், பெட்ரோல் – டீசல் விலையேற்றம் தவிர்க்க முடியாதது என்று விளக்கம் தரும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, முன்பு கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, விலையைக் குறைத்து, மக்களை என்றைக்காவது மகிழ்ச் செய்தது உண்டா?

அப்போது சேர்த்துள்ள நிதியை, சாமானிய மக்களுக்குச் சலுகை விலையில் கிடைக்கும் விதமாக இப்போது தரலாமே!

பி.எம்.கேர்ஸ் – பிரதமர் நிதி என்பதன்மூலம், இதுபோன்ற இடர்காலத்தில் உதவி, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் கவலையைத் தடுக்கலாமே!

‘‘மனமிருந்தால் மார்க்கமுண்டு!’’

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு காட்டப்பட்ட கடன்  தள்ளுபடி  பெருந்தொகை களோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இத்தகைய உதவித்தொகை (Subsidy) எம்மாத்திரம்?

சிங்கப்பூர் போன்ற வளர்ந்த நாடுகள் தங்களின் குடிமக்களுக்குப் பொருளாதார நெருக்கடி காலங்களில் நேரடியாக வங்கிக் கணக்கில் உதவிப் பணம் செலுத்தும் முறையை (Direct Cash Handouts/Payouts) வெற்றிகரமாகச் செயல்படுத்துகின்றன. இது ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசு அறியாததா?

எனவே, பெட்ரோல் – டீசல் விலை உயர்வு வன்மையான கண்டனத்திற்குரியது.

அதைவிடக் கொடுமை, ஒன்றிய பா.ஜ.க. அரசு, மக்களுக்கு உதவிட வராமல், அருளுபதேசம் செய்கிறது!

இதுதான் ‘சப்கா சாத், சப்கா விகாசா?’

வெட்கம்! வேதனை!!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

 

சென்னை   

17.5.2026 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *