தமிழ்நாட்டின் ‘சார்லி சாப்ளின்’ என்று அழைக்கப்பட்ட கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தமிழ்த் திரையுலகின் நகைச்சுவை மன்னராக வெற்றிவாகை சூடியவர்.
நகைச்சுவையை திகட்டாத கருத்துகளால் வழங்கி, மக்களைச் சிரிக்க வைத்ததோடு, சிந்திக்க வைக்கவும் செய்தார். சீர்திருத்த கருத்துகளை துணிச்சலோடு எடுத்துக்கூறிய அற்புத கலைஞர்.
என்.எஸ்.கே. என சுருக்கமாக அழைக்கப்படும் என்.எஸ்.கிருஷ்ணன் 29-11-1908இல் நாகர்கோவில் ஒழுகினசேரியில் பிறந்தார். கிருஷ்ணன் தந்தையார் பெயர் சுடலையாண்டி – தாயார் இசக்கியம்மாள் ஆகியோர் ஆவார்கள்.
தந்தை பெரியார் மீதுள்ள பற்று
1947 – ஆகஸ்ட் 15 முதல் சுதந்திர நாள் என்பதற்காக கலைவாணரைச் சென்னை வானொலி நிலையம் அழைத்திருந்தது. நிகழ்ச்சி சம்பந்தப்பட்டவற்றை வானொலிக்கு முன்னதாகவே எழுதிக் கொடுத்து விட்டார் என்.எஸ்.கே. நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்களின் வரிசையில் தந்தை பெரியார் அவர்களின் பெயரும் இடம்பெற்றிருந்தது. வானொலி நிலையத்தார் அதனை நீக்கி விட்டனர். (“எல்லாம் அவாள் மயம் ஆயிற்றே!”).
கலைவாணருக்கோ வந்ததே சினம்! தந்தை பெரியார் அவர்களின் பெயர் இடம் பெறாவிட்டால், என் நிகழ்ச்சியும் இடம் பெறாது என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டார். இதனைச் சற்றும் எதிர்பாராத வானொலி நிறுவனத்தார் மறுபடியும் தந்தை பெரியார் அவர்களின் பெயரையும் இணைத்து நிகழ்ச்சியை நடத்திட ஏற்பாடு செய்தனர்.
கலைவாணர் சிலையைத் திறந்து வைத்து பேசுகையில் அறிஞர் அண்ணா உரையாற்றுகையில்,
‘‘கலைவாணர் அவர்கள் கலையுலகத்திற்கு மட்டுமல்லாமல், சமூகத்திற்குத் தம்முடைய தொண்டுகளைச் செய்யவேண்டும், அதற்கு இந்தக்கலை, ஒரு வழிகாட்டியாக அமைய வேண்டும் என்ற முறையில் கலைத்துறையைத் தேர்ந்தெடுத்தார்கள். அவருடைய சிறந்த உழைப்பு, அவருக்கு மட்டுமல்லாமல் கலைத்துறைக்கே நகைச்சுவைப் பாத்திரத்திற்கே ஒரு தனி இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. நகைச்சுவைப் பாத்திரமென்றால் ஒட்டப்பட்ட மீசை திடீரென்று கீழே விழும். அது நகைச்சுவை பாத்திரம். நடக்கின்றபொழுது இடறிக் கீழே விழுவார்கள்; அது நகைச்சுவைப் பாத்திரம். இப்படியிருந்ததை மாற்றி, நகைச்சுவைப் பாத்திரமென்பது, சிந்தித்துப் பார்த்து சிரித்து நற்பயனைப் பெறத்தக்க ஒரு பாத்திரம் என்று மாற்றி அமைத்துக் காட்டியவர் நகைச்சுவை மன்னர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள்.
1950 இல் பாரிஜாதம் என்ற படம் வெளிவந்தது.
மிகவும் ‘புனிதமான’ பூவான பாரிஜாதத்தை முன்வைத்து பாமா – ருக்மணி இடையே நாரதர் கலகம் மூட்டிவிடுவது தான் இந்தப் பாரிஜாதக் கதை.
இதில் வரும் ஒரு பாடலை என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் இணைந்து பாடினர்.’’
பாரிஜாத பூவு நம்ம
பசிதனை தீர்த்திடுமா – இதை
பக்குவமா பாதுகாத்தா
பட்டினி வந்திடுமா… சொல்லு…(பாரிஜாத)
நாட்டுக்கு தேவையான நெல்மரம் – கொண்டு வந்த
நம்பியை சுத்தி வந்து கும்மியடிப்போம்
கூட்டமாக உழைத்து வாட்டமில்லாமல் இன்பம்
கூடவே பாட்டு பாடி கும்மியடிப்போம்…
ஏரை எடுத்து பூமி
உழுகப் போறேன் பெண்ணே
கொஞ்சம் நேரம் பொறுத்தே
கஞ்சியும் கொண்டே வாரேன் மச்சான்
உழுது வெதச்சு தண்ணியும்
பாய்ச்சி காவலும் இருப்பேன்
பக்கம் உக்காந்து கிட்டு
வெத்தலை மடிச்சு வாயில கொடுப்பேன்
– இப்படி ஆணும், பெண்ணும் உழவுக்கு என்னென்ன செய்வோம் என்பதை பட்டியலிட்டு கடைசியில்,
பட்டினியுள்ள குடும்பங்களுக்கு
பகிர்ந்து கொடுப்பேன்…
சோத்து பஞ்சம் வராம செஞ்சுட்டே
யோசனை சரிதான் மச்சான்…
என்று முடியும்.
தெய்வீகத் தன்மை கொண்டது என்று புளுகப்பட்ட பாரிஜாதத்தால் எந்தப் பயனும் இல்லை, மக்கள் பசி போக்கும் உழவும் தொழிலும் தான் உன்னதமானது என்பதை இந்தப் பாடலில் கலைவாணர் எடுத்துரைத்திருப்பார். பக்திப் படம் ஒன்றில் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல “பகுத்தறிவுச் சிந்தனை” விதைகளை நகைச்சுவையாய் விதைத்திருப்பார் கலைவாணர் அவர்கள்.
1957 ஆம் ஆண்டு ஆகஸ்டு 30 ஆம் தேதி உடல்நல குறைவால் தனது 49 ஆவது வயதிலேயே மறைவுற்றார்.
தமிழ்நாடு அரசு சென்னையில் உள்ள அரசு அரங்கத்துக்கு “கலைவாணர் அரங்கம்” என்று பெயர் சூட்டி அவருக்குப் புகழும் பெருமையும் சேர்த்துள்ளது.
அவருடைய பகுத்தறிவுச் சிந்தனைகளை இந்நினைவு நாளில் நன்றியுணர்வுடன் நினைவுக் கூர்கிறோம்!
