காத்மண்ட். ஆக. 29- நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 579 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்த நிலையில், திபெத் எல்லைப் பகுதியில் பனிச்சரிவால் உருவான ஏரியின் நீர்மட்டம் உயர்ந்த நிலையில் நேற்று (28.8.2026) இரண்டாவது முறையாக திடீர் வெள்ளம் ஏற்படலாம் என்று சீனா எச்சரித்ததால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டன. நேபாளத்தில் ரசுவா மற்றும் மத்திய நேபாளத்தின் பிற பகுதிகளில் ஏற்பட்ட மிகப்பெரிய திடீர் வெள்ளம் நூற்றுக்கணக்கானோரின் உயிரை பறித்தது.
மேலும் (28.8.2026) குடியிருப்புகள், சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்மின் நிலையக் கட்டமைப்புக்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ள நிலையில், தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் மூன்றாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.2931 நேபாள ராணுவ வீரர்கள் உட்பட மொத்தம் 7451 பாதுகாப்பு பணியாளர்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை அடையவும், உயிர்பிழைத்தவர்களை வெளியேற்றவும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
நேற்று (28.8.2026) மேலும் சில சடலங்கள் மீட்கப்பட்டதை அடுத்து திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 579 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 8 மாவட்டங்களில் இருந்து இந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. திடீர் வெள்ளம் ஏற்பட்ட அதே இடத்தில் சேறு கலந்த நீரின் அளவு அதிகரித்துள்ளதாகவும் எனவே அப்பகுதியில் மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தேசிய பேரிடர் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குப்பைகள் குவிந்து தற்காலிக அணை போன்ற அமைப்பு உருவாகி உள்ளது.
நேபாள -சீன எல்லைக்கு அருகில் புதிய தடுப்பு அணை உருவானத்தை அடுத்து போட்டேகோஷி ஆற்றின் கீழ் பகுதிகளில் புதிய வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என்று நீரியல் மற்றும் வானிலை ஆய்வுத்துறை நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் ஏற்கனவே 2மில்லியன் கன மீட்டர் தண்ணீர் தேங்கி உள்ளதாகவும், தொடர்ந்து பெய்யும் மழையால் அடுத்த மூன்று நாட்களில் ஏரிக்கு வரும் நீரின் அளவு சுமார் 3 மில்லியன் கனமீட்டர்அதிகரிக்கக்கூடும் என சீன அதிகாரிகள் நேபாளத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால் அந்த தற்காலிக அணையின் தடுப்பு உடையக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அவ்வாறு உடைந்தால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும். வெள்ள நீர் கீழ்நோக்கி பாய்ந்து சீனா -நேபாள எல்லையில் உள்ள கிரிரோங் துறைமுகம் மற்றும் பிற கீழ்மட்டப் பகுதிகளில் கூடுதல் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய அபாயம் உள்ளது. இதனைத்தொடர்ந்து தடுப்பு ஏரி மற்றும் மழைப்பொழிவை கண்காணிக்கவும் முன்னறிவிப்பு மற்றும் அபாய மதிப்பீட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.
அவ்வாறு அணையின் தடுப்பு உடையாமலும் நீர் வெளியேற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது. எனினும் முன்னெச்சரிக்கையாக தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களும், பல்வேறு காரணங்களுக்காக போட்டேகோஷி மற்றும் திரிசூலி பகுதிகளில் தங்கி இருப்பவர்களும் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், மீட்பு பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டது. ஆனால், வெள்ளம் வருவது தாமதமானதால் ஒரு சில பகுதிகளில் நேற்று இரவு முதல் மீட்புப்பணிகள் எச்சரிக்கையுடன் தொடங்கப்பட்டது. மீட்பு பணிகள் திபெத் பகுதியில் உள்ள ஒரு அணை மீண்டும் உடைந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து நேபாள காவல்துறையும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
திபெத்தில் 558 பேர் மாயம்
திபெத்- நேபாள எல்லையில் உள்ள பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அய்ந்தாக உயர்ந்துள்ளதாக திபெத்தின் அவசரகால மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. மேலும் 558 பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களில் 260 பேர் வெளிநாட்டினர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
ஒரு மாத ஊதியம் நன்கொடை
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு குறித்து நேற்று பிரதமர் பாலேந்திர ஷா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பிரதமர் மற்றும் அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களும் தனது ஒரு மாத ஊதியத்தை பேரிடர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது.
எல்லைத்தாண்டிய வர்த்தகம் பாதிப்பு
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்தினால் நேபாளம் -இந்தியா இடையிலான எல்லை தாண்டிய வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தின் காரணமாக சாலைகள் சேதமடைந்ததாலும், வெள்ளநீரில் மூழ்கியதாலும் உத்தரப்பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் வழியாக காத்மண்ட் மற்றும் நேபாளத்தின் பிற பகுதிகளுக்கு செல்லும் சரக்கு வாகனங்களின் போக்குவரத்தானது பாதிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் நுழையக் காத்திருக்கும் லாரிகளால் மகாராஜ்கஞ்சில் உள்ள சோனாலி எல்லையின் இந்தியப் பகுதியில் சுமார் 16கி.மீ. தூரத்திற்கு சரக்கு வாகனங்கள் காத்து கிடக்கின்றன. நேபாளத்தில் சாலை தொடர்பு விரைவில் சீரமைக்கப்படாவிட்டால் நிலைமை மோசமடையக்கூடும்.
நேபாளத்தில் இருந்து இந்தியப் பகுதிக்குள் அடித்துவரப்பட்டதாக கருதப்படும் 7 உடல்கள் உத்தரப்பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. உடல்கள் மிகவும் சிதைந்த நிலையில் காணப்பட்டதால் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்கு பிறகு காணாமல் போனவர்களின் பட்டியலில் இவர்கள் உள்ளனரா என்பதை கண்டறியவும் அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும் அதிகாரிகள் நேபாள நிர்வாகத்துடன் தொடர்பில் உள்ளனர்.
பனிப்பாறை சரிந்ததே பேரிடருக்கு காரணம்
சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘இந்த பேரிடருக்கான காரணம் குறித்து சீன மற்றும் நேபாள நிபுணர்களின் பகுப்பாய்வின்படி நேபாளத்தில் உள்ள உயரமான மலைப்பகுதியில் பனிப்பாறை சரிந்ததே இந்த பேரிடரைத் தூண்டியிருக்கலாம்.
பனிப்பாறை சரிவு மற்றும் அதனால் ஏற்பட்ட குப்பைகள் கலந்த வெள்ளப்பெருக்கு ஆகியவை தான் இந்த பேரிடருக்கான காரணமாகும். பனி மற்றும் பாறைகள் சரிந்து கொண்டே ஆற்றில் விழுந்ததால் அதன் ஓட்டம் தற்காலிகமாக தடைபட்டது. பின்னர் அந்த இயற்கை தடுப்பு உடைந்து பெரும் அளவிலான வெள்ளநீர் கீழ்நோக்கி பாய்ந்து ஆறுகளில் கலந்தது” என்றார்.
பீகாரில் வெள்ள அபாயம்
நேபாளத்தில் இருந்து பெருக்கெடுத்துவரும் வெள்ளத்தால் கங்கை, கண்டக், கோசி, பர்ஹி கண்டக் மற்றும் காக்ரா உள்ளிட்ட ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகின்றது. இதனால் பீகாரின் பல மாவட்டங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
