சென்னை, ஆக. 29- தெருநாய் பிரச்சினையைத் தடுக்க எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு இறுதிக் கெடு விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.
தெருநாய்களிடம் இருந்து பொது மக்களை பாதுகாப்பது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதி பதிகள் அடங்கிய அமர்வு, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலை யங்கள் போன்ற பொது இடங்களில் இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக பிடிக்கப்பட்டு, நாய்களை மீண்டும் அதே பகுதி களில் விடாமல், பராமரிப்பு மய்யங் களுக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
அனைத்து மாவட்டங்களிலும் போதுமான இனப்பெருக்க கட்டுப்பாட்டு மய்யங்களை ஏற்படுத்த வேண்டும், தடுப்பூசி மய்யங்களில் போதுமான கால்நடை மருத்துவர்கள், ஊழியர்களை நியமிக்க வேண்டும், கல்வி நிறு வனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவுகளை அமல் படுத்தும் வகையில், அனைத்து உயர் நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்து, கண்காணிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த உத்தரவின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசார ணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அரசுகளுக்கும், ஒன்றிய அரசுக்கும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் கடந்த முறையும் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்துக்கு இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது எனத் தெரி வித்தனர்.
பின்னர், அறிக்கை சமர்ப்பிக்க ஒன்றிய அரசுக்கு இரண்டு வாரங்கள் இறுதிக் கெடு வழங்கிய நீதிபதிகள், மேற்கொண்டு எந்த அவகாசமும் வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து, விசா ரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
