சட்டப் பேரவை நிகழ்வுகளை நேரலை செய்வதில் மாற்றுத் திட்டம் பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தகவல்

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக. 28- நீக்கப்பட்ட பகுதிகள் இல்லாமல் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்புவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் திமுக கொறடா எ.வ வேலு பேசும்போது, “சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுவதும் நேரலை செய்யப்படுவதால், அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுகின்ற பகுதிகளை பத்திரிகைகள் போடாவிட்டாலும், சமூக வலைதளங்களில் பரவுகின்றன. இதனால் அவையின் மாண்பு போகிறது.

உரிமை மீறல் குழு அமைப்பதற்கு முன்பாக அவையில் நீங்கள் இதை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏற்கெனவே 2 உரிமை மீறல் புகார்கள் அளித்துள்ளேன். அதை இப்போதே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சொல் வதையே மதிக்கவில்லை என்றால் யார் சொன்னால் மதிப்பார்கள்?” என்றார்.

இதற்கு பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் பதிலளித்து பேசுகையில், “உறுப்பினர் கூறுவது ஆய்வில் எடுத்துக் கொள்ளப்படும். இன்னொரு கருத்தும் வந்துள்ளது. இங்கிலாந்து, அமெரிக்காவில் நீக்கப்பட்ட அம்சங்கள் வெளியே வராமல் பேரவை நிகழ்வுகள் ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது.

அதேபோல், தமிழ்நாட்டிலும் நீக்கப்பட்ட பகுதிகள் இல்லாமல் நேரலை வழங்குவதற்காக ஆய்வு நடத்தப் படுகிறது. இந்த விவகாரத்தில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

29 சமூகநீதி பள்ளி விடுதிகள்
கல்லூரி விடுதிகளாக தரம் உயர்த்தப்படும்

அமைச்சர் சம்பத் குமார் தகவல்

சென்னை, ஆக. 28- சட்டப்பேரவையில் பிற்படுத் தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் வே.சம்பத் குமார் பேசியதாவது: பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சென்னை, செங்கல்பட்டு உள்பட 14 இடங்களில் வாடகைக் கட்டடங்களில் இயங்கிவரும் 14 கல்லூரி மாணவ-மாணவிகள் சமூகநீதி விடுதிகளுக்கு சொந்த கட்டடங்கள் கட்டப்படும். ரூ.25.76 கோடி செலவில் 960 சமூகநீதி விடுதிகளுக்கு இன்வெர்ட்டர், ஃபிரிட்ஜ் மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகள் வழங்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் 29 சமூகநீதி பள்ளி விடுதிகள், கல்லூரி விடுதிகளாக தரம் உயர்த்தப்பட்டு உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு போதிய விடுதிவசதிகள் ஏற்படுத்தி தரப்படும். 517 சமூகநீதி விடுதிகளில் தங்கி பயிலும் 28 ஆயிரம் மாணவிகளுக்கு தற்காப்புக்கலை பயிற்சிக்குத் தேவையான சீருடைகள், பயிற்சி பொருட்கள் ரூ.2.52 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும். சென்னையில் ரூ.54 லட்சம் செலவில் புதிய சமூகநீதி கல்லூரி மாணவிகள் விடுதி தொடங்கப்படும். இதில் 100 பேர் தங்கி படிக்கலாம்.

நலவாரியம் அமைக்கப்படும்: மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக ரூ.3 கோடி செலவில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் அமைக்கப்படும். இதில் உறுப்பினர்களாகப் பதிவு செய்வோருக்கு பிற தொழிலாளர் நல வாரியங்களில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளைப் போன்று உதவிகள் வழங்கப் படும்.

‘சூப்பர் கிளின், சூப்பர் கேம்பஸ்’ திட்டம் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள கள்ளர் சீரமைப்புஉயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படுத் தப்படும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

தேர்தலில் குழந்தைகளை பயன்படுத்தி பிரச்சாரம் செய்யலாமா?

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை, ஆக. 28- தேர்தல் பிரச்சாரத்துக்கு குழந்தைகளைப் பயன்படுத்தியதற்காக தனது வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியாது எனக் கூறி, தனக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி ஜோசப் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை என்று வைத்துக் கொண்டாலும், அந்த காரணத்துக்காக தனது தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க முடியாது.

தேர்தல் தொடர்புடைய நடவடிக்கைகளில் குழந்தைகளைப் பயன்படுத்த அரசியல் கட்சிகளுக்கு தடை விதித்து, கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டதா? என்பதை தேர்தல் வழக்கு தாக்கல் செய்தவர்கள் நிரூபிக்கவில்லை.

தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிப்பதற்கான காரணமாக கருத முடியாது.

மேலும், தேர்தல் செலவு கணக்கையும், வெளி நாடுகளில் இருந்து நிதி உதவி பெற்றதையும் மறைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. யார் செலவு செய்தார்கள், எப்போது பணம் செலுத்தப்பட்டது என்பது போன்ற விவரங்கள் எதுவும் தேர்தல் வழக்குகளில் கூறப்படவில்லை.

வழிபாட்டுத் தலங்களில் பிரச்சாரம் செய்ததாக கூறிய குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரங்கள் இல்லை என்றும் விஜய் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *