நேபாள வெள்ளத்தில் இருந்து 21 தமிழர்கள் மீட்பு சென்னை வருகை

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி/சென்னை, ஆக. 29- நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்ட கும்பகோணத்தைச் சேர்ந்த 21 பேர் நேற்று  (28.8.2026) சென்னை வந்தடைந்தனர். முன்னதாக டில்லியில் அவர்களை அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் உள்ளிட்ட 4 அமைச்சர்கள் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

திபெத் எல்லையில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் ஏரி உடைப்பால் நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் 26.8.2026 அன்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதில் சிக்கியுள்ள இந்தியர்களை அந்நாட்டு அதிகாரிகள் மூலம் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வெள்ளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியுள்ளனர். இதையடுத்து முதலமைச்சர் ஜோசப் விஜய், மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கவும், டில்லியில் முகாமிட்டு பணிகளைக் கண்காணிக்கவும் சிறப்பு அமைச்சர்கள் குழுவை நியமித்தார்.

அதன்படி டில்லியில் முகாமிட்டுள்ள ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், வினோத் மற்றும் தென்னரசு ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் குழு, மீட்புப் பணிகளைத் தொடர்ந்து முடுக்கி விட்டுள்ளது.

டில்லியில் உள்ள ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுடன் அமைச்சர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கும்பகோணத்தில் இருந்து சுற்றுலா மய்யம் மூலம் நேபாள “கைலாஷ் யாத்திரை” சென்ற 57 பேரில் 21 பேர், வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து நேற்று முன்தினம் (27.8.2026) ராணுவ உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தொடர்ந்து அவர்கள் விமானம் மூலம் காத்மாண்டு வழியாக டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமான நிலையத்தில் வரவேற்றார். அவருடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் உடனிருந்தார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், வினோத், தென்னரசு ஆகியோர் விமான நிலையத்துக்கு சென்று மீட்கப்பட்ட தமிழர்களை வரவேற்று, டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர்.

அவர்களிடம் நலம் விசாரித்து, அவர்களுக்கு தேவையான உடனடி மருத்துவ உதவிகள், உணவு போன்றவற்றை ஏற்பாடு செய்ததுடன், தமிழ்நாட்டுக்கு புறப்பட தேவையான விமானம் மற்றும் ரயில் பயண சீட்டுகளை வழங்கவும் ஏற்பாடு செய்தனர். அதன்படி, அவர்கள் விமானம் மூலம் நேற்று இரவு டில்லியில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தடைந்தனர்.

இதுதொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மீட்கப்பட்ட 21 தமிழர்களின் உடல் நிலை சீராக உள்ளது.

மீதமுள்ளவர்களை எப்படியாவது தொடர்பு கொள்ள முடியுமா என்று கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறோம். தற்போதைய நிலவரப்படி 400 பேர் தமிழ்நாட்டில் இருந்து சென்றிருக்கலாம். நேபாளத்தில் நிலவும் பேரிடர் சூழலில் சிக்கியுள்ள ஒவ்வொரு தமிழரையும் பாதுகாப்பாகத் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரும் வரை இந்த மீட்பு நடவடிக்கைகள் ஓயாது. பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *