வேத நூல்கள் பெண்களை எவ்வாறு சித்திரிக்கின்றன?-பாணன்

6 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, மகாராட்டிர மாநிலம் புனேவில் நடைபெற்ற ‘சத்ரோன் கி கூஞ்ச்’ (மாணவர்களின் குரல்) நிகழ்வில் பேசினார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சமூகக் கட்டுப்பாடுகள் குறித்து அங்கு உரையாற்றிய ராகுல் காந்தி, “பெண்கள் சிறுவயதில் தந்தையின் கீழும், திருமணத் திற்குப் பின்பு கணவனின் கீழும், கணவனின் மறைவுக்குப் பின்பு மகனின் கீழும் இருக்க வேண்டும் என்ற மனுஸ்மிருதியின் சிந்தனை வெட்கக்கேடானது.  இந்த ஆணாதிக்கச் சிந்தனையே பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கிறது” என்று சாடினார்.

இதற்குப் பதிலடியாக உத்தரப்பிரதேச ரேபரேலியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், ராகுல் காந்தி இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரத்தை அவமதிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

“மனுஸ்மிருதி மற்றும் மனுவைப் பற்றி தவறாகப் பேசுவதற்குப் பதிலாக ராகுல் காந்தி அதர்வனவேதம், சதபத பிராமணம் மற்றும் மத்சய புராணத்தைப் படிக்க வேண்டும். அதில் மனுவின் பங்களிப்பும், இந்தியக் காலக்கணிப்பு முறையும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது” என்றும்  சாமியார் ஆதித்யநாத்  கூறினார்.

சாமியார் ஆதித்யநாத்  எடுத்துக்காட்டாகக் கூறிய அதர்வண வேதம், சதபத பிரமாணம், மத்சய புராணம் பெண்களை எவ்வாறு இழிவுபடுத்திக் கூறுகின்றன?  இதோ சான்றுகள்:

அதர்வண வேதம்

அதர்வண வேதத்தில் பெண்களுக்கு எதிரானதாக ஸ்லோகங்கள் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன!

கட்டுரை, ஞாயிறு மலர்

தங்களின் இச்சைக்கு இணங்காத பெண்கள், தனக்குப் போட்டியாளராக இருக்கும் செல்வந்தர் வீட்டுப்பெண்களை இழிவுபடுத்த  அபிச்சாரா, ஸ்திரிகர்மனி  போன்ற மந்திரம் அல்லது சூத்ர சடங்குகள் உள்ளன.

இன்றும் மூத்திரச்சந்துகளில் உள்ள சுவர்களில் ஒட்டி இருக்கும் சுவரொட்டிகளில் “காதல் தோல்வியா?, திருமணத்தடையா? பித்ருக்களின் சாபமா? பில்லி சூனியமா? பெண்களை வசியம் செய்யவேண்டுமா? பாபா வங்காளி உங்களுக்காக இருக்கிறார். அவரை அணுகினால் அனைத்தும் நடக்கும். இல்லையென்றால் பைசா வாபஸ்” போன்ற மோசடிகளின் முன்னோடியே அதர்வண வேதம்.

இதில் பிறக்கும் குழந்தையை ஆணாக மாற்றும் மந்திரங்களும் உண்டாம்!

சமஸ்கிருத ஸ்லோகத்தின் தமிழாக்கம்:

  1. அதர்வவேதம் 1.14 – பெண்ணுக்கு நல்லது நடக்காமை / திருமணமாகாமல் இருக்கச் செய்யும் மந்திரம்(போட்டியாளர் மீது அல்லது தன்னை விரும்பாத பெண் மீது பயன்படுத்தப்படுகிறது)

1: “அவளுடைய பாக்கியத்தையும், ஒளியையும் நான் எடுத்துக்கொண்டேன், மரத்திலிருந்து மாலையைப் பறிப்பது போல. மலை போல அகன்ற அடித்தளத்துடன் அவள் நீண்ட காலம் தன் பெற்றோர் வீட்டில் அமரட்டும். அவளை வேறு யாரும் அடையக் கூடாமல் இந்திரன் பார்த்துக்கொள்வான்”

2: “இந்தப் பெண் உனக்கு மனைவியாக ஆகட்டும், (அதுவரை) அவள் தன் தாய், சகோதரன் அல்லது தந்தை வீட்டில் நிலையாக இருக்கட்டும். ”

3: (திருமணத்தை அல்லது மணமகனை விரும்பாத) “இந்தப் பெண் வீட்டின் கதவுபோல் இருக்கட்டும், யம ராஜாவே; அவளை உனக்கு ஒப்படைக்கிறோம். அவள் உறவினர்களுடன் நீண்ட காலம் அமரட்டும்,  தலைமுடி நரைத்து முடிகள் அனைத்தும் உதிரும் வரை.”

4: (முனிவர்கள்) “அசித, கஸ்யப, கய ஆகியோரின் மந்திரத்தால் உன் அழகை அலங்கோலமாக்குகிறேன். பெட்டியில் மறைத்து வைக்கும் பொருளின் மதிப்பு தெரியாதது போல் இனி உன் அழகு ஊருக்குத் தெரியாது.

கட்டுரை, ஞாயிறு மலர்

இது ஒரு  பெண்ணை மனதளவில் அச்சுறுத்தி அவளுக்கு திருமணமாகாமல் பெற்றோர் வீட்டில் வாழச் செய்யும் சாபம். கவுசிக சூத்திரத்தில் இது பெண்ணின் மனதளவில் உறுதித்தன்மையை இழக்கும் தன்மையை உண்டாக்கப் பயன்படுத்தப்படுகிறது.

5 அதர்வண வேதம் 7.35/36 – (பெண்ணை மலடாக்கும் மந்திரம்”)

2: “உனக்கு உள்ள நூறு நரம்புகளும், ஆயிரம் குழாய்களும் – அவற்றின் திறப்புகளை எல்லாம் நான் கல்லால் மூடிவிட்டேன்.”

6: “உன் கருப்பையின் மேற்பகுதியை கீழ்பகுதியாக ஆக்குகிறேன்; உனக்கு சந்ததி இருக்காது, பிறப்பும் இருக்காது; உன்னை மலடாக  சந்ததியில்லாதவளாக ஆக்குகிறேன்.

ஆண் ஒருவன் மனைவியை தவிர்த்து வேறு ஒருத்தியுடன் செல்வதைத் தடுக்கும் மனைவியை மலடாக்கும் மந்திரம். கருப்பை நரம்புகளை அடைத்து சந்ததி இல்லாமல் செய்யும் சாபம்.

மேலே கூறிய ஸ்லோகங்கள் அதர்வண வேதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழாக்கம் செய்யப் பட்டவை இதன் மூல சமஸ்கிருத ஸ்லோகமும் ஆங்கில மொழி பெயர்ப்பு நூலில் உள்ளது

மத்சய புராணம்

 குப்தர்கள் காலத்தில் புத்தரின்  ‘ஜா தக்’ (வழிப்போக்கு) கதைகளில் வரும் உருவங்களை அவதாரங்களாக மாற்றும் போது மீனவதாரம் என்ற ஒன்றையும் உருவாக்கினார்கள்

அந்த அவதாரத்தின் மகிமையைக் கூறும் நூல் மத்சய புராணம். அதிலும்  பெரும்பாலான  அத்தியாயங்களில் பெண்களைப் பற்றிய எதிர்மறையான ஸ்லோகங்களாக இடம்பெற்றுள்ளன.

அத்தகைய சில முக்கிய ஸ்லோகங்களின் விளக்கங்கள்:

(அத்தியாயம் 188.47)  ஸ்லோகம்/சொல்லாடல்: பெண்களைக் குறிக்க “கிருஹபஞ்சரகோகிலா”  என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

விளக்கம்: இதன் பொருள் “வீட்டுக்கூண்டில் அடைக்கப்பட்ட குயில்” என்பதாகும். பெண்கள் தன்னிச் சையாக வெளியில் செல்லவோ, சுதந்திரமாகச் செயல்படவோ கூடாது என்றும்; அவர்கள் எப்போதும் குடும்பக் கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே இயங்க வேண்டும் என்றும் இந்த ஸ்லோகம் வலியுறுத்துகிறது.

(அத்தியாயம் 154)ஸ்லோகம்)

பெண்கள் வேதக் கல்வியைப் பெறுவதற்கும் அல்லது சுயாதீனமாக மாபெரும் வைதிக யாகங்களை நடத்துவதற்கும் தகுதியற்றவர்கள்.

பெண்கள் இயல்பிலேயே சபல புத்தியும், மனஉறுதியற்ற தன்மையும் கொண்டவர்கள் என்பதால் அவர்களுக்கு வேத மந்திரங்களைக் கற்கும் அதிகாரம் இல்லை.

(அத்தியாயம் 154 / பார்வதி-மேனா உரையாடல்)  ஸ்லோகம்: பெண் குழந்தையின் பிறப்பு குடும்பத்திற்குத் துயரத்தையும் கவலையையும் தருகிறது.

“பெண் குழந்தை பிறப்பது அவள் வளர்ந்து திருமணத்திற்குச் செல்லும் வரை பெற்றோருக்கு அச்சத்தையும் துன்பத்தையுமே தருகிறாள்; எனவே யாரும் பெண் குழந்தை பிறப்பதை விரும்புவதில்லை.”

பெண்களின் மனம் நிலையற்றது, அவர்கள் எளிதில் சலனப்படக்கூடியவர்கள் மற்றும் ஆண்களின் வழிகாட்டுதல் இன்றி தன்னிச்சையாக இயங்க முடியாதவர்கள்.

பெண்களைக் காமத்தின் வடிவமாகவும், ஆண்களின் தவத்தைக் கலைக்கும் தடைகளாகவும் கதைகளின் வழியே புராணங்கள் சித்தரிக்கின்றன.

பெண்களை எப்போதும் தந்தை, கணவன் அல்லது மகனின் பாதுகாப்பிலேயே வைக்க வேண்டும் என்ற மனுஸ்மிருதியின் கருத்தையே மத்சய புராணமும் பிரதிபலிக்கிறது.

சதபத பிராமணம் என்பது யஜுர்வேதத்துடன் இணைந்த ஒரு முக்கியமான நூல்

இது யாகங்கள், சடங்குகள், அவற்றின் பலன்களையும் புராணக் கதைகள் ஆகியவற்றையும் விரிவாக விளக்குகிறது. சதபத பிராமணத்தில் பெண்கள் தொடர்பான சில குறிப்புகள்:

சதபத பிராமணம் முதன்மை யாக யாகச் சடங்குகளை விளக்கும் நூல்.  இதில் பெண்கள் குறித்துப் பல ஸ்லோகங்கள் உள்ளன. அதன் மொழியாக்கம்:

1.ஸ்லோகம் (14.1.1.31)அதிகாலைச் சூரிய ஒளியைப் பெண், சூத்திரன், நாய், கருப்புப் பறவை (காகம்) ஆகியவை பார்க்கக் கூடாது என்று கூறப்படுகிறது. பார்த்தால் அந்த நாள் பாவம், இருள், பொய் ஆகியவற்றால் நிறைந்ததாக ஆகும்

  1. ஊர்வசி–புரூரவஸ் கதை (ஸ்லோகம் XI.5.1.9 – “புரூரவஸே, அஞ்சிஓடாதே! கொடூர ஓநாய்கள் உன்னைத் தின்ன விடாதே! பெண்களிடம் உண்மையான நட்பு இல்லை; அவர்களின் இதயங்கள் ஓநாய்களின் இதயங்கள்.”

ரிக்வேதத்தில் உள்ள இந்தப் பாடல், தேவலோகப் பெண் ஊர்வசி பூமியில் தங்கிய பின்னர் மேலோகம் செல்லும் போது மன்னரான புரூரவஸே என்பவருக்கு சொல்லப்படுகிறது.

அசுவமேத யாகம் தொடர்பான குறிப்பு (XIII.2.2.4)

அசுவமேத யாகம் என்பது பெண்களை ஆண்களுக்கு அடிபணிந்தவர்களாகச் சித்தரிக்கும் சடங்கு ஆகும். பெண்களின் உரிமை பறிக்கப்பட்டு ஆண்களை அண்டி வாழவேண்டும் என்று வலியுறுத்துகிறது. யாகத்தின் நோக்கம் அரசனின் அதிகாரத்தையும் சமூக ஒழுங்கையும் உறுதிப்படுத்துவதாகும்.

  1. (IV.4.2.13) (இந்திரன்)“மின்னலைக் கையில் எடுத்து பெண்களின் ஆளுமைக் குணமான ஆண் தன்மையைப் பொசுக்கி விட்டார். அதனால் அவர்கள் ஆண்களைப் போன்று ஆள முடியாமலும், சொத்துப் பங்கைப் பெற முடியாமலும் இருக்கின்றனர். அதேபோல் இப்போதும் யாகத்தில் ஊற்றப்படும் நெய்யால் மனைவிகளை ஆண்மை (ஆளுமை பலம்) இழக்கச் செய்கிறான்.”

அதாவது பெண்களுக்குச் சுயாதீனம் இல்லை, சொத்து உரிமை இல்லை என்ற கருத்தை இது போன்ற சடங்குகளின் மூலம் நிறுவுகிறது.  இந்தப் பகுதிகள் சதபத பிராமணத்தின் சடங்கு விளக்கங்களிலும் புராணக் கதைகளிலும் காணப்படும்.

இவையெல்லாம்தான் பெண்களின் பெருமையைப் பேசுகின்றனவா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *