சென்னை மாநகரம் தற்போது வெப்பத்தின் பிடியில் அகப்பட்டுக் கொண்டுள்ளது. இதனால் மக்கள் வாட்டி வதைக்கப்படுகின்றனர். இதிலிருந்து மீளுவதற்கு என்ன வழி என்று பல திட்டங்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.
புதிய திட்டங்கள்
பசுமை குன்றிப் போன இப் பெருநக ரினை மீண்டும் பசுமைப் படர்ந்த மாநகராக்குவது வெப்பத்தின் தாக்கத்தை குறைப்பதற்கு ஓரளவு ஏதுவாய் அமையும் என்று சென்னை மாநகராட்சி புதிய திட்டங்களை வகுத்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் இதுபற்றிப் பல்வேறு தகவல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் 3 இலட்சத்துக்கும் மேற் பட்ட மரங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாகக் கூட இருந்து வந்தன. நெடுஞ்சாலை அமைப்புப் பணிகள், போக்குவரத்து வசதிகள் பெருக்கம், சாலை விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ஆகியவற்றுக்காக இந்த மரங்கள் அகற்றப்பட்டாக வேண்டியதொரு நெருக்கடி. மெட்ரோ ரயில் திட்டம் என்ற ஒன்றிற்காக மட்டும், மாதவரம், பூவிருந்த வல்லி நெடுஞ்சாலைப் பகுதியில் 8,000 மரங்கள் அகற்றப்பட்டதாகக் கூறுகின்றனர்.
எவ்வளவு மக்கள் வசிக்கின்றனர்?
சென்னையில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அரசு, தனியார் துறைகளில் பணியாற்றும் வெளி மாநில, மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 50 இலட்சம் பேராம். சென்னையின் 16 இலட்சத்துக்கும் அதிகமான கட்டடங்களில் உள்ள 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் 79.12 இலட்சம் மக்கள் வசித்து வருகின்றனராம்!
சென்னையில் நிறைந்திருந்த பனை மரங்கள்தான் எத்தனை? எத்தனை? இலட்சக்கணக்கில் இருக்கும். வேப்ப மரம், புளிய மரம், புரசை மரம், வாழை மரம், மாமரம், பலா மரம் எனப் பலப்பல மரங்கள் நிறைந்திருந்த நிலை இன்று அடியோடு மாறிவிட்டது. புரசை மரங்கள் ஆயிரக் கணக்கில் பல்கிப் பெருகியிருந்த பகுதியாதலின் – இன்றைய புரசைவாக்கம் அப் பெயர் பெற்றதாம். காடுகள் சூழ்ந்த பகுதியாதலால் மயிலாப்பூர் கூட காட்டுக் கோயில் என்ற அழைக்கப்பட்டதாகக் குறிப்பிடுகின்றனர்.
வெப்பத் தாக்கத்தால் பள்ளிக் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுவதால், சென்னையின் 50 மாநகராட்சிப் பள்ளிகளில் குளிர் கூரை வண்ணம் பூசுகின்ற திட்டம் செயற்படுத்தப்பட உள்ளது.
7.50 இலட்சம் மரங்கள்
வருகின்ற ஓரிரு ஆண்டுகளில் 7.50 இலட்சம் மரங்கள் உருவாக்கப்பட உள்ள தாகவும், வனத்துறையினரிடமிருந்து பெற்று வந்த மரக் கன்றுகளைத் தற்போது மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக உற்பத்தி செய்துள்ளது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியிலுள்ள 993 பூங்காக்கள், வெட்ட வெளிகளில் தற்போது நடப்பட்டுள்ள மரங்களையும் சேர்த்து 21,125 மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளதாம். சென்னை மாவட்ட வனத்துறையில் 2 இலட்சம் மரக் கன்றுகள் கேட்கப்பட்டு, அத் துறையினர் தந்துள்ள 50 ஆயிரம் மரக் கன்றுகளையும் கூட நட்டு முடித்துள்ளனர்.
சென்னையின் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம், மரக் கன்றுகளை நட்டு வளர்க்கும் போதும், வீடுகள்தோறும் மரம் மட்டுமல்லாது பூச்செடிகள், காய்கறிச் செடிகள் உள்ளிட்ட தாவர வளங்களை அக்கறையோடும், அன்போடும் வளர்க்கும் போதும் தாவர வகைகள் நமக்கு நன்றி செலுத்தத் தவறுமா?
மீறினால் அபராதம்
சென்னை மாநகராட்சியில் 2022ஆம் ஆண்டில் மரம் அகற்றம் குறித்து புதிய வழிமுறைகளும், விதிகளும் காணப் பட்டுள்ளன. அதன்படி உரிய அனுமதி பெறாது மரம் வெட்டப்பட்டுள்ள போது அபராதத் தொகை 1 இலட்சம் செலுத்தப்பட வேண்டும்.
மரங்களின் வேர்ப் பகுதியில் கான்கிரீட் அமைத்தல், மரங்களை வெட்டுதல், அலங்கார விளக்குகளை மரங்களில் அமைத்தல், விளம்பரப் பலகைகளை அமைத்தல், கிளைகளை ஒடித்து வீசியெறிதல் ஆகியனவற்றுக்கு ரூ.15 ஆயிரம் அபராதத் தொகை செலுத்தப்பட வேண்டும்.
என்ன பயன்?
இவ்வளவு கடுமையானத் தண்டனைத் தருகின்ற சட்டங்கள் இருந்தும், என்ன பயன்? மரங்களைப் பகிரங்கமாகவும், திருட்டுத்தனமாகவும் வெட்டிக் கடத்தல் வேலை செய்கின்றனரே! சாலை நடுவில் அமைக்கப்பட்டுள்ள – வரிசையாக வைக்கப் பட்டுள்ள பூஞ்செடித் தொட்டிகளை வீசியடித்து விட்டுச் செல்கின்றனர்.
இதுபோன்ற மக்களின் இன்னபிற செய்கைகளால் பயன் என்ன ஏற்படும்? சென்னை எப்படி பசுமை நகராக ஆக முடியும்! அனைவரும் சிந்திப்போமாக!
