இமயமலையில் நிகழ்ந்த திடீர் பனிச் சரிவின் காரணமாக நேபாள நாட்டின் வடக்கு எல்லையில் உள்ள ரசுவா மாவட்டத்தில் உள்ள போட்டே கோஷி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மனிதர்களும், வீடுகளும், கட்டடங்களும், பாலங்களும் அடித்துச் செல்லப்படும் காட்சிகளைக் கண்ட எவருக்கும் கண்ணீர் வராமலிருக்க முடியாது. இப் பேரிடரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இது வரை 160 என மதிப்பிடப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் எண்ணிக்கையோ 800-க்கும் மேல் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர்களுக்கு என்ன ஆயிற்று என்ற கவலை எல்லாப் புறமும் சூழ்ந்துள்ளது.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அஞ்சப்படுகிறது. தஞ்சையிலிருந்து சென்ற வர்களின் இதுவரை விவரம் கிடைத்துள்ள 20 பேர் தவிர, எஞ்சியவர்களின் நிலையும் கேள்விக் குறியாகி உள்ளது. சுற்றுலா சென்று ஆபத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைப் பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்க்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத் துயரில் உயிரிழந்தோர் அனைவருக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் நமது இரங்கலையும், அவர்களை இழந்துள்ள குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
27.08.2026
