சென்னை, ஆக.27 நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஒன்றிய அரசும் மாநில அரசும் விரைந்து செயல்பட வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது சமூக ஊடகப் பதிவில், “நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்த செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன. பல்வேறு மனித உயிர்கள் பலியாகியிருக்கும் சூழலில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் அங்கு சிக்கியிருக்கின்றனர். ஒன்றிய அரசும் மாநில அரசும் விரைந்து செயல்பட்டு, நமது மக்கள் பத்திரமாகத் தாய்நாடு திரும்ப வேண்டுமென்று விழைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “சாலைகள், பாலங்கள் சேத மடைந்து, தகவல் தொடர்பு முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சிக்கியுள்ள மக்களைக் கண்டறிந்து மீட்கவும், அவர்களைப் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வரவும் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியத் தூதரகம் மற்றும் மீட்புக் குழுவினரை நான் வலியுறுத்துகிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு
அவசர உதவி எண்
தமிழ்நாடு அரசு அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் வகையில், தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலத்துறை 24 மணி நேரமும் செயல்படும் உதவி மய்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இருந்து 1800 309 3793 என்ற எண்ணிலும், வெளிநாடுகளில் இருந்து +91 80 6900 9900 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் மூலமும் தொடர்பு கொள்ளலாம். மேலும் +91 80 6900 9901 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பியும் உதவி பெறலாம். தமிழ்நாடு அரசின் உதவி மய்யத்தின் வாட்ஸ்அப் எண் 9289516712 ஆகும்.
இந்திய தூதரகம்
இதேபோன்று, நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்திய குடிமக்கள் தொடர்பான உதவி மற்றும் தகவல்களுக்கு, +977 985 131 6807 மற்றும் +977 970 910 7500 ஆகிய அவசரக்கால எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, பேரிடரை தொடர்ந்து தேசம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என கேட்டு கொண்டார். தயவு செய்து பொறுமையாக இருங்கள். உங்களுடைய மீட்பு, சிகிச்சை, உணவு மற்றும் புகலிடத்திற்கு அரசு முழு பொறுப்பேற்கிறது. இதுபோன்ற பேரிடர் தருணத்தில் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.
