வீடெங்கும், வீதியெங்கும் நாடெங்கும் பூத்துக் குலுங்கட்டும்! குலுங்கட்டும்!! கவிஞர் கலி. பூங்குன்றன்

5 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

தோழர்களே!

தந்தை பெரியார் ஒரு மானுட சகாப்தம். அவர் தமிழ்நாட்டில் தோன்றாதிருந்தால், நம்மின மக்களின் கெதி என்ன?

இந்த 2026லும் வருணாசிரம தர்மத்தை வலியுறுத்தும் வக்கிரப் புத்தி உள்ளவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்!

தமிழ் மண்ணில் கோயில்களைக் கட்டியவர்கள் தமிழ் மன்னர்கள். ஒவ்வொரு செங்கல்லாகக் குழைத்துக் கொடுத்தவன் தமிழன்!

ஒவ்வொரு  தட்டு மண்னையும் சுமந்து கொடுத்தவள் தமிழ்ச்சியே! ஒரே ஒரு பார்ப்பான், பார்ப்பாத்தி கோயிலை உருவாக்குவதில் அளித்த பங்களிப்புதான் என்ன?

இன்னும் சொல்லப் போனால் கோயில் கருவறையில் வைக்கப்பட்டு இருக்கும் சாமி சிலையை செதுக்கியவனும் தமிழனே!

கும்பாபிஷேகம் என்று சொல்லி கோபுரத்தின் உச்சியில் ‘ஜலத்தையும் பாலையும் ஊற்றி, யாருக்கும் புரியாத ஒரு செத்த மொழியில்  முணுமுணுக்கும் மந்திரங்களை சொன்னவுடன், அந்தக் கணத்திலேயே ஒட்டு மொத்தக் கோயிலும் சோம்பேறிப் பார்ப்பனர்களுக்கு ஏக போகமானதே – ஏன், எப்படி என்று யாராவது சிந்தித்துதுண்டா?

ஆனால், ஒட்டு மொத்தக் கோயிலையும் உருவாக்கிய தமிழன் சூத்திரனாகி விட்டான்; கோயில் கருவறைக்குள் சென்று தமிழன் தன் தாய் மொழியில் அர்ச்சனையை செய்யும் உரிமை இல்லாதிருக்கிறானே, எப்படி?

கடவுள் தான் எல்லோரையும் படைத்தான் என்று ஒரு பக்கத்தில் சரடு விட்டு, இன்னொரு பக்கத்தில் ‘‘கடவுள் முகத்தில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் சத்திரியன், இடுப்பில் பிறந்தவன் வைசியன், காலில் பிறந்தவன் சூத்திரன்’’ என்று எழுதி வைத்தவர்கள் யார்? பார்ப்பனர்கள்தானே!

கடவுள் எல்லோருக்கும் தந்தையென்றால், பிறப்பின் அடிப்படையில் இந்தப் பேதா பேதம் ஏன், ஏன் என்று கேட்டவர் யார்? போர்க் கொடி தூக்கியவர் யார்?

இந்த நாட்டுப் பெரும்பான்மை மக்களை ‘‘சூத்திரர்கள்’’ என்று சொன்னதோடு நின்று விடாமல், சூத்திரன் என்றால் ‘வேசி மகன்’ என்று விளக்கம் கொடுத்து எழுதி வைத்த மனுதர்மவாதிகளின் சிண்டைப் பிடித்துக் குலுக்கி, சீறிய சிங்கமென கர்ச்சித்தவர் யார்?

இதைவிட இன்னொரு கொடுமையும் உண்டு – தாழ்த்தப்பட்ட  இந்த மண்ணுக்குரிய மக்களை அவர்ணஸ்தர்கள் என்று சொல்லி, தீண்டத்தகாதவர்கள் என்றும் கூறி ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் யார், யார்?

‘‘பிர்மா முகத்தில் பிறந்தவர்கள் நாங்கள் தான் இவற்றை எல்லாம் செய்தோம்’’ என்று முரசு கொட்டும் முப்புரிகள் தானே!

இந்த இழிநிலைகளை எல்லாம் எங்கெங்கும் எடுத்துக் கூறி, முழக்கமிட்டு, நமக்கெல்லாம் தன்மான உணர்ச்சியை ஊட்டியவர் யார்?

இதற்காக சுயமரியாதை இயக்கம் கண்டவர் யார்? போர்க் கோலம் கொண்டு புரட்சிப் போராட்டக் களங்களைக் கண்டவர் யார்?

பெரியார்! பெரியார்!! தந்தை பெரியார் தானே!!!

‘‘பார்ப்பனர்களைத் தவிர மற்ற ‘சூத்திர’, ‘பஞ்சம’ மக்கள் படிக்கக் கூடாது!’’ என்று சாத்திரம் எழுதி வைத்த சழக்கர்களை எதிர்த்து சண்டமாருதம் செய்தவர் யார்?

தமிழ்நாட்டில் மட்டுமல்ல; வைக்கம் வரை சென்று வருணாசிர வக்கிரப்புத்தி தீட்சதர்களை எதிர்த்து நின்று போர்க்களத்தில் தீட்சதர்களை மண்ணைக் கவ்வச் செய்தவர் யார்? வைக்கம் வீரர் தந்தை பெரியார் தானே!

தொண்ணூற்று அய்ந்து வயதிலும் தொண்டுப் பழமாக உழைத்து உழைத்து, நம்மை எல்லாம்  முதுகெலும்புள்ள மனிதர்களாக ஆக்கியவரும் அவர் தானே!

நம்மை எல்லாம் பெற்றெடுத்த பெண்களை, தாய் மார்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்றும், அப்படிக் கீதையில் சொன்னவர் பகவான் கிருஷ்ணன் என்று கூறும் கயமைக் கட்டுக் கதைகளை நார் நாராகக் கிழித்து எறிந்தவர்… எரித்தவர் யார்?

தந்தை பெரியார் தானே!

ஆம், இன்று நம் வீட்டுப் பிள்ளைகளும் படிக்கிறார்கள், அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகள் ஆகும் அளவுக்குத் தோளில் தூக்கி உயர்த்தியவர் அந்த உலகத் தலைவர் பெரியார் தானே!

ஆம், இன்று அவர் ‘உலகத் தலைவர்’ ஆகி விட்டார். அவர்தம் சீலத்தை உலக நாடுகளுக்கெல்லாம் கொண்டு செல்ல அமைப்புகள் தோன்றி விட்டன.

‘மண்டைச்சுரப்பை உலகு தொழும்!’ என்று தந்தை பெரியார்பற்றி புரட்சிக் கவிஞர் பாடினாரே – இன்று நிஜத்தில்   காண்கிறோமா இல்லையா?

அந்த மகத்தான வரலாற்றுத் தலைவர் தந்தை பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர் 17.

தந்தை பெரியாரின் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் செப்டம்பர் 17இல் வர இருக்கிறது?

எந்த ஆண்டையும் விட இவ்வாண்டு முன்னிலும் எழுச்சியாக நடைபெறட்டும்! நடைபெறட்டும்!!

அப்பொழுதுதான் அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு எகிறிக் குதி்க்கும் குடுமியுசத்தின் கொட்டம் அடங்கும்!

அரும்பாடுபட்டு நிலை நிறுத்திய சமூகநீதிக்குச் சவக்குழி வெட்டும் சவுண்டிகளின் செயல்பாடுகள் ஒரு சித்தாந்தமாக உருவெடுத்திருக்கிறது.

அதனை ஆணிவேர் வரை சென்று சிதிலம் அடையச் செய்ய வேண்டாமா?

‘‘ஆம், செய்வோம்!’’ என்று காட்ட இவ்வாண்டு செப்டம்பர் 17 கிடுகிடுக்கட்டும்.

நன்றி உள்ளவன்தான் மனிதன்; அது இல்லாதவன் புழு பூச்சிக்குச் சமம் என்றார் தந்தை பெரியார்.

நாம் நன்றியுள்ளவர்கள்   என்பதைக் காட்டுவோம் – நிலைநாட்டுவோம்!

அதே நேரத்தில் நன்றி எதிர்பாராத தொண்டு எம் தொண்டு என்பார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

இப்படியொரு மனிதகுலத்தின் மங்கா ஒளியைக் கண்டதுண்டா?

வீடுதோறும் விழாக் கோலமாக விளங்கட்டும்… பிள்ளைகள் எல்லாம் புத்தாடை அணிந்து பூரிக்கட்டும்!

ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்துக் கூறுங்கள். இனிப்புகளை வழங்குவீர்!  குடும்ப விருந்துகளை நடத்துவீர்! கழகக் கொடிகளை ஏற்றுவீர்! ஏற்றுவீர்!! தந்தை பெரியார் சிலைகளை அலங்கரித்து மாலைகள் சூட்டுவீர்!

‘‘தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை அவர் போட்டுத் தந்த பாதையில், எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல் வென்று முடிப்போம்’’ என்ற சூளுரையைப் புதுப்பித்துக் கொள்வோம்!

தந்தை பெரியார் பட ஊர்வலங்களை ஆங்காங்கே நடத்துவீர்! நடத்துவீர்!!

மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, இசைப்போட்டி, விளையாட்டுப் போட்டிகளை நடத்துவீர்! பரிசுகளை வழங்குவீர்!

‘எந்தாண்டும் இல்லாமல் இந்தாண்டில் எத்தகைய ஈடில்லா எழுச்சி’ என்று இன எதிரிகள் ஏற இறங்கப் பார்க்கட்டும்.

மூக்கின் மேல் விரலை வைத்துப் பொதுமக்களும் பார்க்கட்டும்.

இளைஞர்கள் ஈரோட்டுத் தந்தையின் திசை நோக்கி ஈர்க்கப்படட்டும்!

இதில் கட்சி இல்லை – பேதமில்லை – இது ஒட்டு மொத்தமான இனத்தின் பெருவிழா!

முழங்கட்டும் முரசு! புன்முறுவல் பூத்துப் புதியதோர் தமிழ் நாடாகக் காட்சியளிக்கட்டும்! காட்சியளிக்கட்டும்!

நன்றித் திருவிழாவாக ஒளிக்கட்டும்! ஒலிக்கட்டும்!!

வாழ்க பெரியார்!

வெல்க திராவிடம்!!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *