ஏட்டை மறுத்து நின்றாரை
எதிர்த்தே வென்ற கூட்டமிது!
பாட்டைப் படிக்கத் தடுத்தோரைப்
பதுங்கச் செய்த கூட்டமிது!!
தீட்டைச் சொல்லி மறுத்தோரைத்
திகைக்கச் செய்த கூட்டமிது!
நீட்டை விரட்டி ஒழிப்பதற்கு
நீண்ட போரைத் தொடர்கிறது!!
நாட்டைக் கெடுக்க நினைப்பாரை
நடுங்கச் செய்யும் கூட்டமிது!
கேட்டை விளைக்கத் தேர்வென்றால்
கேள்வி கேட்கும் கூட்டமிது!
ஓட்டுக் கேட்டே நிற்காமல்
உரிமை முழக்கும் கூட்டமிது!!
நீட்டை விரட்டி ஒழிப்பதற்கு
நீண்ட போரைத் தொடர்கிறது!!
ஆட்டம் காட்டி நம்முரிமை
அழிக்கத் துடிக்கும் கூட்டத்தின்
நோட்டம் கண்டே விழித்தெழுந்து
நொறுக்கும் பெரியார் கூட்டமிது!
வேட்டு குண்டு ஏந்தாத
வீர மணியார் கூட்டமிது!!
நீட்டை விரட்டி ஒழிப்பதற்கு
நீண்ட போரைத் தொடர்கிறது!!
– பாவலர் சுப.முருகானந்தம்
மாநிலச் செயலாளர்,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு.
