அன்புள்ள தோழர்களே!
சிறையிலிருந்து சமீப காலத்தில் விடுதலை அடைந்த என்னை வாசகசாலைக்கு அழைப்பதற்காக இந்தக் கொடியேற்று விழா ஆற்றும் பணிமூலம் அழைத்ததற்காக நான் மிகவும் பெருமை அடைகிறேன். அதற்காக வாசக சாலையினர்க்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீதிக்கட்சியின் கொடி இன்று 20 வருடங்களாக உயர்த்தப்பட்டு வருகிறது. அந்தக் கொடி இன்று உச்சஸ்தானத்திலிருந்து வருகிறது. நீதிக்கட்சி ஏற்பட்ட பின் என்ன நன்மை ஏற்பட்டிருக்கிறதென்பதை அக்கட்சி ஏற்படாததற்கு முன் பலவித கஷ்டங்களை அடைந்து வந்த மக்களைக் கேட்டால் நன்கு தெரியும்.
ஏனெனில், அக்கட்சி ஏற்பட்டதினால், நம்மவர்களுக்குப் பல கஷ்டங்கள் ஒழிந்து விட்டதால், இப்போது பலருக்குக் கஷ்டம் இன்னதென்றே தெரியாது, நன்மை அடைந்து வரும் இந்தக் காலத்திலுள்ள மக்களுக்கு அக்கட்சியினால் ஏற்பட்ட நன்மைகள் தெரியா.
நீதிக்கட்சி ஏற்பட்ட பின் நாட்டில் புதுமையாகச் சமத்துவம், சுதந்திரம், புரட்சி, சமநீதி ஆகியவைகள் ஓர் அளவுக்கு ஏற்பட்டிருக்கின்றன. அக்கட்சியினால் யாருக்குத் தீமை ஏற்பட்டிருக்கிறதென்றால், பல வருடங்களாக உயர்ந்த நிலைமையிலிருந்தும், ஏகபோகமாக அனுபவித்தும் வந்த ஒரு கூட்டத்தாருக்குத்தான். இந்தக் கொடியின்கீழ் நாம் உழைப்போமானால் அதன் பலனை விரைவில் நாமடையலாம்.
10, 15 வருடங்களாக அரசாட்சியிலிருந்து வந்த நமது கட்சியினரைப் பாமர மக்கள் மிக வெறுக்கும்படி நமது எதிரிகள் பல இழிவான பிரசாரம் செய்து, பல பொருத்தமற்ற குற்றங்களைச் சுமத்தி பதவி ஏற்றார்கள். ஆனால் இன்று அவர்கள் எந்தப் பாமர மக்களிடம் பொய்ப் பிரசாரம் செய்து எந்தக் குற்றங்களைச் சுமத்தி பதவியேற்றார்களோ, அதே பாமர மக்கள் இன்று பதவியிலிருப்பவர்கள் மீது வெறுப்புக் காட்டுகிறார்கள்.
நமது கட்சி தோல்வி அடைந்ததற்குப் பலர் வருத்தப்படுகிறார்கள். நான் கூறுகிறேன் நமது கட்சி தோற்றது நன்மைக்குத்தான் என்று. ஏனெனில், எப்பொழுது பார்த்தாலும் குற்றங்கள் சுமத்திப் பாமர மக்களை ஏமாற்றி வந்த கூட்டத்தார், இன்று பதவிக்கு வந்ததும் எந்த மக்களிடம் ஏமாற்றி ஓட்டுப் பெற்றுப் பதவிக்கு வந்தார்களோ அவர்களே, “இவர்களுக்கு ஓட்டளித்து ஏமாந்தோம்” என்று வருந்தும்படியான நிலைமை ஏற்பட்டுவிட்டது. இதனால் நாம் வெற்றிக்கொடி நாட்டிவிட்டோம் என்றே நான் கூறுகிறேன்.
நமது கட்சியார் பதவியிலிருந்தபோது எந்தெந்த வரிகளைக் கண்டித்தார்களோ, அந்த வரிகளையெல்லாம் இன்று மக்கள் தலையில் சுமத்தி வருகிறார்கள்.
இவைகளையெல்லாம் நாம் நமது மக்கள் உணரப் பிரசாரம் செய்ய வேண்டுமென்று கூறி நீதிக்கட்சியின் கொடியை உங்கள் முன் ஏற்றி வைக்கிறேன்.
(28.05.1939 அன்று ஈரோடு சுயமரியாதை வாசக சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜஸ்டிஸ் கொடியைப் பறக்கவிட்டு பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு)
குடிஅரசு – சொற்பொழிவு – 04.06.1939
