திருப்பூர், ஆக. 22- தமிழ்நாட்டில் தற்போது நடைபெறுவது தவெகவின் ஆட்சி அல்ல, அதிகார வர்க்கத்தின் ஆட்சிதான் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது: தோற்றத்தில் தவெக ஆட்சி நடைபெறுவது போல் தெரியலாம். ஆனால், உள்ளடக்கத்தில் அதிகார வர்க்கத்தின் ஆட்சிதான் நடக்கிறது.
அந்த அதிகார வர்க்கத்தை இயக்குவது சங்கிகளின் கருத்தோட்டங்களே ஆகும். இதன் காரணமாகவே கம்யூனிச சிந்தனை கொண்ட மாணவர்களைக் குறிவைத்து இந்த அரசு கணக் கெடுத்து வருகிறது.
ஆட்சியாளர்களில் இருவகை உண்டு அதிகாரிகளை ஆட்சியாளர்கள் இயக்குவது ஆட்சியாளர்களை அதிகாரிகள் இயக்குவது. இதில் தவெக அமைச்சரவை இரண்டாவது வகையைச் சேர்ந்தது.
கம்யூனிஸ்ட் மாணவர்களைக் குறிவைத்து பட்டியலிட்ட விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் இதுவரை வாயே திறக்காதது ஏன்? அவர் இனியும் அமைதி காக்காமல் உடனடியாக விளக்கமளிக்க வேண்டும்.
செங்கொடியைக் கண்டு அஞ்சும் ஏகாதிபத்தியங்கள் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி முதல் தமிழ்நாட்டு அதிகாரிகள் வரை அனைவரும் அச்சப்படுவது மார்க்சிய தத்துவஞானத்தைக் தாங்கி நிற்கும் கம்யூனிஸ்டுகளைக் கண்டுதான். கார்ப்பரேட்டுகளும், அந்நிய நேரடி முதலீடுகளும், ஏகாதிபத்தியங்களும் அஞ்சி நடுங்குவது தொழிலாளி-விவசாய வர்க்க ஒற்றுமையின் சின்னமான செங்கொடியைக் கண்டுதான் என்று கூறினார்.
முகநூலில் ‘மூடு மந்திர மிரட்டல்’ குறித்துக் கேள்வி முன்னதாக, தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்த கே.சுப்பராயன், சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஆற்றிய உரையைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்பதிவில், “என் டேபிளில் 3 பைல்கள் இருக்கின்றன, அதைத் திறக்கிற மாதிரி வச்சுக்காதீங்க என முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் கூறியுள்ளது ஒருவகையான மிரட்டல். யாரைப் பார்த்து இதைச் சொல்கிறார் என்று தெரியவில்லை.
ஒரு முதலமைச்சர் வகிக்கும் பொறுப்பிற்கு இது பெருமை சேர்க்காது. ‘எனக்கு எதிராகப் பேசினால் பைலை திறப்பேன், பேசாவிட்டால் திறக்க மாட்டேன்’ என அச்சுறுத்தும் தகவல்கள் அந்த பைலுக்குள் இருக்கிறதா? முதலமைச்சரே, மூடு மந்திரம் போட்டு மிரட்டாமல் அந்த பைல்களைத் திறங்கள்; அதில் உள்ளவற்றை நாடும் மக்களும் அறிந்துகொள்ளட்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
