மதுரை மாநாட்டில் கழகத் தலைவர் பார்ப்பனர்களின் சூழ்ச்சியை அம்பலப்படுத்தி உரை!

6 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

1946இல் மதுரையில் நடைபெற்ற காலித்தனத்திற்கு
வைத்தியநாத அய்யர் என்ற ஒரு பார்ப்பனரின் மூளையும், பணமும், ஆத்திரமும்தான் அஸ்திவாரம்!

மதுரை, ஆக. 22  1946 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ‘‘கருப்புச் சட்டைப் படை’’ மாநாட்டில் நடைபெற்ற காலித்தனத்துக்கு வைத்தியநாத அய்யர் என்ற ஒரு பார்ப்பனரின் மூளையும், பணமும், ஆத்திரமும்தான் காரணம் என்பதையும், இந்தச் சூழ்ச்சியை முதலில் வெளியிட்டவர் அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி தான் என்பதையும் மதுரையில் நடைபெற்ற, ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா’’ வில், கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அம்பலப்படுத்தி உரையாற்றினார்.

‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா – திறந்தவெளி மாநாடு’’

மதுரை மாநகர் – புறநகர் மாவட்டக் கழகம் சார்பில், ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா திறந்தவெளி மாநாடு’’ நேற்று (21.08.2026) மாலை 5 மணிக்கு மதுரை ஓபுளா படித்துறை அருகில் நடைபெற்றது. சுயமரியாதைச் சுடரொளிகளான கு.துரைராஜ், பே.தேவசகாயம், அன்னத்தாயம்மாள், வழக்குரைஞர்கள் சி.மகேந்திரன், மு.சித்தார்த்தன் ஆகியோர் நினைவாக மாநாட்டு மேடை அமைக்கப்பட்டு இருந்தது. தலைமைச் செயற்குழு உறுப்பினர் மதுரை செல்வம் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் இயக்கப் புத்தகங்களை அறிமுகப்படுத்தியும், நிகழ்வில் இணைப்புரை வழங்கியும் உரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு, முன்னாள் மாவட்டச் செயலாளர் க.அழகர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணை பொதுச் செயலாளர் இராம.வைரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். தொடர்ந்து கழகச் சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் மாநாட்டின் நோக்கத்தை விவரித்து உரையாற்றினார். அடுத்து தி.மு.க. உயர்மட்ட செயல் திட்டக்குழு உறுப்பினர் பொன்.முத்துராமலிங்கம் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் எடிசன் ராஜா, மாவட்டத் தலைவர் முருகானந்தம், தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச் செயலாளர் வி.சி.வில்வம், வழக்குரைஞரணி மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் கணேசன், மாவட்டக் காப்பாளர் முனியசாமி, புறநகர் மாவட்ட தலைவர் எரிமலை, புறநகர் மாவட்டச் செயலாளர் முத்துக் கருப்பன், மாநில மகளிரணி அமைப்பாளர் பாக்யலட்சுமி, மதுரை சுப.பெரியார் பித்தன் ஆகியோர் முன்னிலை வகித்த சிறப்பித்தனர்.

கருஞ்சட்டை தோழர்களுக்கு
கழகத் தலைவர் சிறப்பு!

தொடர்ந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. அதேபோல சிறப்பு அழைப்பா ளர்களுக்கும், மாநாட்டுக்காக உழைத்த கருஞ்சட்டை தோழர்களுக்கும் கழகத் தலைவர் சிறப்பு செய்தார். உள்ளூர் பெருமக்களும் கழகத் தலைவருக்கு ஒன்றன் பின் ஒன்றாக சிறப்பு செய்தனர். பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன (பல்கலைக்கழகம்) மாணவர்கள் சூரியன், நிலவமுதன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக,‘‘கிராமிய கலைமணி மதுரை கே.பி.தங்கவேல் குழு’’வினரின் பறையாட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ‘‘மந்திரமா? தந்திரமா?’’ என்னும் தலைப்பில், மூடநம்பிக்கை ஒழிப்பு  மற்றும் அறிவியல் விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியை, திண்டுக்கல் ஈட்டி கணேசன் நகைச்சுவை கலந்து வழங்கினார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்தவெளி மாநாட்டு நிகழ்விடத்திற்கு 7.15 மணிக்கு வருகை தந்தார். அப்போது, கிராமிய கலைமணி கே.பி.தங்க வேல் பறையாட்ட குழுவினர், பறையிசை முழங்க, மாநாட்டு மேடைக்கு கழகத் தலைவர் வருகை தந்த வாகனத்தை ஊர்வலமாக அழைத்து வந்தனர். வைகை நதிக்கரையோரம் ஓபுளா படித்துறையின் பக்கவாட்டுச் சாலையான, முனிசாலையில் தான் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வைகைக் கரையிலிருந்து மாநாட்டுக்குச் செல்லும் சாலை நெடுகிலும், கழகக் கொடிகள் சாலையின் இருபுறமும் பறந்து அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தன. மாநாட்டை விளம்பரப்படுத்தும் வண்ணமாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில், அந்தப் பகுதி எங்கும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு இருந்தன. நிறைவாக, 8.15 மணிக்கு, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாநாட்டின் தலைமை உரையை வழங்கினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

அவர் தமது உரையில், சுயமரியாதைச் சுட ரொளிகளான கு.துரைராஜ், பே.தேவசகாயம், அன்ன தாயம்மாள், வழக்குரைஞர்கள் சி.மகேந்திரன், மு.சித்தார்த்தன் ஆகியோரின் அருமை, பெருமைகளை நினைவூட்டி பேசினார். தொடர்ந்து, ‘‘இன்றைய கூட்டம் அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், 1946 இல் நடைபெற்ற கருப்புச் சட்டைப் படை மாநாடு அப்படி நடைபெறவில்லை. பெரியார் எதிர்நீச்சல் அடித்துத்தான் வெற்றி பெற்றார்’’ என்று கூறிவிட்டு, ‘‘பெரியார் என்றாலே எதிர்நீச்சல் தான்! எதிர்நீச்சல் என்றாலே பெரியார் தான்!’’ என்று கூறியதும், மக்கள் அதை ஏற்பதைப்போல, பலமாக கைகளைத் தட்டினர். தொடர்ந்து, ‘‘இன்றைக்கும் எதிர்ப்பு இருக்கிறது. எதிர்ப்பு இருக்க வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். ஏனென்றால், எதிர்ப்பிலேயே வளர்ந்தது தான் இந்த இயக்கம்! எங்களுக்கு தனி மனிதர்கள் ஒருபோதும் எதிரிகள் கிடையாது’’ என்றும், ‘‘ஒரு இயக்கத்தை உருவாக்குவதற்கு திராவிடர் கழகம் எல்லா வகையிலும் ஒரு பாடமாகும்’’ என்றும், திராவிடர் கழகத்தின் சிறப்பை விவரித்து விட்டு, ‘‘திராவிடர் இயக்கத்தை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது’’ என்று, அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.

மேலும் அவர், 1946 இல், மதுரையில் நடந்த, கருப்புச் சட்டைப் படை மாநாடு குறித்து ‘குடிஅரசு’ இதழில் வந்த செய்தியை வாசித்துக் காட்டினார். அதில், ‘11.05.1946 காலை 8.15 மணிக்கு, திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் வண்டியில் மாநாட்டுத் தலைவர் பெரியார், திறப்பாளர் சி.என்.அண்ணாதுரை, எஸ்.ஆர்.காந்தி அம்மையார், ஆ.திராவிடமணி முதலியோர் வந்தனர்’ என்றும், ‘ரயில்வே பிளாட்பாரத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தலைவர்களை வரவேற்றனர்’ என்றும், ‘ஸ்டேஷனுக்கு வெளியே மங்கம்மாள் சத்திரத்துக்கு எதிரில் 20 ஆயிரம் கருப்புச் சட்டை தொண்டர்கள் வட்டமாக அணிவகுத்து நின்றனர்’ என்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடந்து முடிந்த சம்பவங்களை வாசித்துக் காட்டினார். அன்றைக்கு மாநாட்டுப் பந்தல் கொளுத்தப்பட்ட சம்பவத்தின் பின்னணி குறித்தும் ‘குடிஅரசு’ இதழில் வெளிவந்த செய்தியை வாசித்துக் காட்டினார். அதில், ‘‘கருப்புச் சட்டைப் படை மாநாட்டில் நடைபெற்ற காலித்தனத்துக்கு, வைத்தியநாத அய்யர் என்ற ஒரு பார்ப்பனரின் மூளையும், பணமும், ஆத்திரமும்தான் காரணம்’’ என்றும், ‘‘இந்த சூழ்ச்சியை முதலில் வெளியிட்டவர் அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி தான்’’ என்றும் வாசித்துக் காட்டி, பார்ப்பனர்களின் சூழ்ச்சியை அம்பலப்படுத்தினார். அதைத்தொடர்ந்து EWS பற்றி குறிப்பிட வந்தவர், ‘‘பசியேப்பக்காரனுக்குத் தான் விருந்து தேவை. புளியேப்பக்காரனுக்கு மருந்து தான் தேவை. அந்த புளியேப்பக்காரனுக்கும் விருந்து தருவது போல் தான் இந்த EWS’’ என்று, மக்க ளுக்கு விளங்கும்படியாக உவமித்துப் பேசினார். தொடர்ந்து, நீட் தேர்வின் கொடுமைகளையும், அதற்கு பின்னணியில் இருப்பது மனுஸ்மிருதிதான் என்றும், அந்த மனுஸ்மிருதியின் வேர் குறித்து, அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய, ‘இந்து மதம் எங்கே போகிறது?’ என்ற  புத்தகத்தில் இருப்பதையும் வாசித்துக் காட்டி உண்மையை உணர வைத்து, ‘‘இதையெல்லாம் எதற்காக செய்கிறோம்? எங்களுக்காக அல்ல! உங்களுக்காக! உங்கள் பிள்ளைகளுக்காக! உங்கள் பிள்ளைகளின் வருங்கால கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக!’’ என்று கூறி, தமது உரையை நிறைவு செய்தார். நிறைவாக, மாவட்ட இளைஞரணித் தலைவர் எ.செல்வப் பெரியார் நன்றி கூறி, நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

பங்கேற்றோர்

மாவட்டத் துணைத் தலைவர் இரா.திருப்பதி, மாவட்ட துணைத் தலைவர் பவுன்ராஜ், மாவட்டத் துணைச் செயலாளர்கள் சிவா, தனுஷ்கோடி, பொதுக்குழு உறுப்பினர் சுப்பையா, தனசேகரன், கண்ணன், வேல்துரை, மோதிலால், முரளி, பாண்டி ஆகியோர் மாநாடு சிறக்க உழைத்தவர்கள் ஆவர். நிகழ்ச்சிக்கு தி.மு.க., திராவிட இயக்க தமிழர் பேரவை மற்றும் பொதுமக்கள், மதுரை ராக்குத் தங்கம், நாகராணி, அல்லி ராணி, புஷ்பராணி, மோதிலால், சிறைத்துறை கலையரசன், அவரது இணையர், ஆசிரியர் இராமசாமி உள்ளிட்ட, திராவிடர் கழக அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு, மாநாடு சிறக்கச் செய்தனர்.

திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *