ஆசிரியர் விடையளிக்கிறார்

4 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

கேள்வி 1: திருநெல்வேலி – திராவிடர் கழக திறந்தவெளி மாநாட்டிற்கு (19.8.2026) நீதிமன்றம் சென்று அனுமதி பெறப்பட்டுள்ளதே – கழக நிகழ்ச்சிகளுக்குத் த.வெ.க. அரசால் தொடர்ந்து தடை விதிக்கப்படுவது ஏன்? எதைக் காட்டுகிறது?

– கு.மணவாளன், பாடியநல்லூர்

பதில் 1: தமிழ்நாடு த.வெ.க. அரசின் தெளிவற்ற குழப்ப அரசியல் முடிவுகளின் வெளிப்பாடு! உண்மையில் இம் முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்பது போன்ற கேள்விகளுக்கு இடமளிக்கும் ஆட்சியின் தவறான அணுகுமுறை – இப்போக்கில் மாற்றம் ஏற்பட வேண்டும். இதுபோன்ற பல முடிவுகள் – அரசின் நிலை மக்கள் நலன் சார்ந்ததாக இல்லாததைக் காட்டுகிறது. இனியாவது தவிர்க்கப்பட வேண்டும்.

• • •

கேள்வி 2: “இந்தியத் தேர்தல் அமைப்பில் உள்ள குறைபாடுகள்” என்று பெரும் விவாதங்கள் நடக்கின்ற நிலையில் – “வாக்காளர் அடையாள அட்டையுடன் கூடிய தேர்தல் முறை இது. அமெரிக்காவில் இதனை நடைமுறைப்படுத்த விரும்புகிறேன்” என அமெரிக்க அதிபர் டிரமப் பாராட்டுத் தெரிவித்துள்ளாரே?

– க.மதிசெழியன், காஞ்சி.

பதில் 2: டிரம்ப் ஒரு விசித்திர மனிதர் – அவரது மேம்போக்கான பல நிலைப்பாடுகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. அவ்வளவுதான்!

• • •

கேள்வி 3: கும்பகோணத்தில், பெரியார் மாளிகையில் ‘பெரியார் பேசுகிறார்’ என்ற தலைப்பில், வாரம் தோறும் மிகச் சிறப்பாக நடந்து வந்த இந்தக் கூட்டத்தில் நாங்கள் எல்லாம் கலந்து கொண்ட நிலையில் தற்போது சில மாதங்களாக இந்தக் கூட்டம் தடைப்பட்டுள்ளதே… அதை மீண்டும் நடத்துவதற்குத் தாங்கள் குடந்தை கழகப் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்குவீர்களா?

– மு.அய்யூப்கான், மேலக்காவேரி, கும்பகோணம்

பதில் 3: தங்கள் கேள்விக்கு ஆக்கரீதியிலான மகிழத்தக்க பதில் செயல் மூலம் விரைவில் கிடைக்கும்.

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

• • •

கேள்வி 4: தற்போது 30 வயதிற்குட்பட்ட இளையோரிடம் (Gen-Z – ஜென்ஸீ தலைமுறை) பிற மொழிகளைத் தடையின்றி கலப்பின்றிப் பேசும், எழுதும் திறன் உள்ளது. “நீங்கள் தாய்மொழித் தமிழைப் பயன்படுத்துவதில் உங்களின் செயல்பாடுகள் வேதனை அடையச் செய்கிறதே” என நமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினால், அதற்கு அவர்கள், “மழலையர் வகுப்பு முதல் உயர்கல்வி வரை எங்கள் விருப்பத்திலா ஆங்கில வழியில் சேர்த்து படிக்க வைத்தீர்கள்? உங்கள் பெருமைக்காகத்தானே! இப்போது எங்களிடம் குறை கண்டறிவது எந்த வகையில் நியாயம்?” என எதிர்வினை ஆற்றுகிறார்களே?

– மன்னை சித்து, மன்னார்குடி-1

பதில் 4: நியாயமான கேள்வி – பெற்றோர்களுக்கு! தாயை ‘மம்மி’; தந்தையை ‘டாடி’ என்பதைக் கேட்டு குழந்தைகளைப் பாராட்டி மகிழ்ந்தவர்களுக்கு இக்கேள்வி நியாயமானதுதானே!

• • •

கேள்வி 5: த.வெ.க. அரசு பொறுப்பேற்று 100  நாள்களை நிறைவு செய்துள்ளது (17.8.2026) பற்றித் தாங்கள் கூற விரும்புவது என்ன?

– ச.அன்வர்பாஷா, பெரம்பூர்

பதில் 5: இவ்வரசு கற்றுக்கொள்ள வேண்டியவை அநேகம். சகிப்புத் தன்மையை மேம்படுத்துவதும் அவசியம். ஜனநாயக உணர்வைப் பெருக்கிக் கொள்ளும் அணுகுமுறைக்கு இனிமேலாவது தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசரம், அவசியமுமாகும். ‘100 நாள் தடுமாற்றங்கள்’  ‘தடமாற்றங்கள்’ தவிர்க்கப்பட வேண்டும்.

• • •

கேள்வி 6: இந்தியாவின் வடகிழக்கு இரயில்வேக்களுக்கு பெயர்களை கோகோ கோலா, பிரைட் எக்ஸ்பிரஸ் எனப் பெயரிடும் முறை ஏற்புடையதா?

– இரா.முல்லைக்கோ, பெங்களூர்

பதில் 6: இரயில்வே அமைச்சகம் – அமைச்சர்தான் இதற்குப் பதில் கூற வேண்டும்.

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர் ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

• • •

கேள்வி 7: சட்டமன்ற உறுப்பினர்களுக்கு காரும், வாகனப்படி ரூ.75 ஆயிரமும், உதவியாளருக்கு ரூ.25 ஆயிரம் எனவும் த.வெ.க. அரசு தற்போது அறிவித்துள்ளது பற்றி…?

– மு.சிகாமணி, திருச்சி-6

பதில் 7: வாகனம் இல்லாதவருக்கு வாகனம் தரலாம். வாகனம் உள்ளவர்களுக்குப் பெட்ரோல் செலவுக்குத் தரலாம்.வசதியுள்ளவர்களுக்குக் கூட இப்படி வாங்கத் தேவையில்லை. அரசுக்கு வாகனங்களைப் பராமரிப்பதிலும் ஒரு கூடுதல் சுமை. (MLA- வாகனங்கள் ஆனாலும், அது அரசு உடைமைதான் என்பதால் பல சிக்கல்கள் ஏற்படக் கூடும்.

• • •

கேள்வி 8: தந்தை பெரியாரோடு தாங்கள் இருந்தபோது, பெரியார் மறைவுக்குப் பின்னால் தாங்கள்தான் திராவிடர் கழகத் தலைவராக பொறுப்பேற்கும் நிலை வரும் என்பது தங்களுக்குத் தெரியுமா?

– மு.அய்யூப்கான், மேலக்காவேரி. கும்பகோணம்

பதில் 8: அய்யா இருக்கும்போது என்னைப் பொதுச் செயலாளராக ஆக்கியதுதான் எனக்கு அய்யா தந்த பொறுப்பு – பிறகு அம்மா அவர்கள் கழகப் பொறுப்பேற்றப் பின்பு என் தலையில் ஏற்றிய சுமை. பொறுப்புகள் நான் எதிர்பாராதவைதான்! கூடுதல் சுமை.

• • •

கேள்வி 9: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நிறைவையொட்டி மக்களவை உறுப்பினர்களுக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்தினைப் புறக்கணித்த காங்கிரஸ், அதே வேளையில் மாநிலங்களவைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அளித்த தேநீர் விருந்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனரே? ஒரு கண்ணில் வெண்ணெய், மறுகண்ணில் சுண்ணாம்பா?

– மன்னை சித்து, மன்னார்குடி-1

பதில் 9: “முன்னே பார்த்தால் நாயக்கர் குதிரை – பின்னே பார்த்தால் இராவுத்தர் குதிரை” என்று சாட்சி சொன்ன கதைதான் நினைவுக்கு வருகிறது.

• • •

கேள்வி 10: ஒரு வழக்கு சார்ந்த கட்சிக்காரரின் (மனுதாரர்) அனுமதியின்றி, வழக்குரைஞர் சமரசம் என்பதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது – எந்த வகையில் பயனளிக்கும்?

– செ.அகிலன், எழும்பூர்

பதில் 10: உச்சநீதிமன்றம் கூறியுள்ளபடி வழக்குப் போடச் சொன்னவருக்குத் தெரியாமல் சமரசமா… நியாயமில்லை! மனுதாரர் அனுமதி தேவை.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *