ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: அரசியலிலும், சமுதாய வாழ்க்கையிலும், பல ஆண்டு அனுபவம் உள்ள தாங்கள் Gen-Z-உடன் பயணிக்க முடிகிறதா? Gen-Z தலைமுறை இளைஞர்கள் Social Media-வில் மூழ்கி இருக்கிறார்கள். அவர்களை அதிலிருந்து விடுவித்து நல்ல சமுதாயக் குடிமகனாக மாற்ற கழகத்தின் சார்பில் தங்களது நடவடிக்கைகள் / தயாரிப்புகள் என்ன என்று கூறுங்கள்?

– க.வெற்றிமாறன், திருச்சி

பதில் 1: அந்த Gen-Z தலைமுறையினருடன் நாம் பயணித்துத்தான் ஆக வேண்டும்; அதில் ஒரு தனி மகிழ்ச்சியும் இருக்கிறது. அதே நேரத்தில், அவர்களை அறிவுப் பாதைக்கு அழைத்து வர நாம் முயற்சி செய்ய வேண்டும்.மின்னணு சாதனங்களில் (Social Media) அதிக ஈடுபாடு கொண்டுள்ள இளைஞர்களை நல்வழிப்படுத்தும் பாதை மிகவும் நுட்பமானது. அவர்களை அவர்களின் போக்கிலேயே விட்டு, அதே சமயம் மிகவும் பக்குவமாகக் கையாள வேண்டும். மருத்துவர்கள் மிகுந்த கவனத்துடன் செய்யும் மூளை அறுவை சிகிச்சையையும், இருதய அறுவை சிகிச்சையையும் போல, இந்த விஷயத்திலும் நிதானத்துடனும், பக்குவத் துடனும் செயல்பட்டுத் தீர்வு காண்பது இன்றைய காலத்தின் கட்டாயமும், அவசரமும் ஆகும்!

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 2: தேசிய கல்விக் கொள்கையில் ஒளிந்திருக்கும் அரசியல் சவால்களை ஆசிரியர்கள் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும்?

– தா.அன்புக்கரசன், திருவண்ணாமலை

பதில் 2: மேனாள் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் எழுதிய “மதயானை” நூலைப் படியுங்கள். தெளிவாக விளங்கும்!

கேள்வி 3: அய்யா, ‘வீரமணி’ என்ற பெயர் பெறக் காரணம் என்ன?

– வா.கயல், மதுரை

பதில் 3: எனது கொள்கை ஆசான் ஆ.திராவிடமணி தமிழ்ப்பற்று காரணமாக, சாரங்க பாணியாகிய (வீட்டுப் பெயர்) என்னை, வீரமணியாக்கி பெயர் மாற்றம் செய்தார்! ஆ.சுப்ரமணியம் என்ற அவரது பெயரை ஆ.திராவிடமணி எனவும் மாற்றிக் கொண்டார்! இப்படியே இந்த மாற்றம் ஏற்பட்டது.

கேள்வி 4: “ஸநாதனம்” என்பதன் முழு விளக்கத்தைத் தருமாறு பணிவுடன் வேண்டுகிறேன்?

– மா.அரசு, திருத்தணி

பதில் 4: ‘ஸநாதனம் அறிவோம்’ என்ற தலைப்பில் ஆதாரபூர்வமாக ஆய்வாளர் ‘செ.தினகரஞான குருசாமி’ அவர்களது (இரண்டு பாகங்கள்) நூலைப் படித்தால் தெளிவாக உங்களுக்கு அதுபற்றிய முழு கோணத்தையும் அறிய முடியும்.

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 5: உங்கள் இளம் வயது முதல் இன்று வரை அயராது மேடைகளிலும், எழுத்துலகிலும், போராட்டக் களங்களிலும் இயங்கி வருகிறீர்கள். இத்தனை ஆண்டு காலப் பொது வாழ்வில் உங்களைச் சோர்வடையாமல், சுறுசுறுப்புடன், புன்னகையுடன் இயங்க வைக்கும் அந்தப் “பெரியாரிய ஆற்றல் (அ) உன்னத வாழ்வியல்” ரகசியம் என்ன?

– கி.யுவகாளி, காஞ்சி

பதில் 5: ‘பெரியார் தந்த புத்தியே’ என்னை வழி நடத்துவதால், அதிர்ச்சியோ, தோல்வியோ, ஈடற்ற இழப்புகளோ ஏற்படும்போதுகூட பதற்றமோ, சலிப்போ பாதிப்பின்றி என் பணி தொடரும் பக்குவம் எனக்கு கிடைப்பதால்!

கேள்வி 6: திராவிடம், பெண்ணியம், சுயமரியாதை, மூடநம்பிக்கைகளைப் பற்றி குடும்பத்தினர் மற்றும் பொது இடங்களில் பேசும்பொழுதோ அல்லது செயல்படுத்தும்பொழுதோ மற்றவர்களின் எதிர்ப்புகளையும், கருத்துகளையும் கையாள்வது எப்படி?

– க.சந்திரசேகரன், வியாசர்பாடி

பதில் 6: அவர்களை ஆத்திரப்படுத்தாமல், பக்குவத்தோடு – கடும் சொற்களைக் கைவிட்டு, நிதானம் தவறாமலும் விவாதிக்க வேண்டிய முறையைப் பயன்படுத்த வேண்டும்!

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 7: இன்றைய அரசியல் சூழ்நிலை இளைஞர்களை மேம்படுத்துமா? அல்லது வீழ்த்துமா?

– அ.சாக்கியன், செங்கை

பதில் 7: இன்றைய அரசியல் சூழல் இளைஞர்களை மேம்படுத்துவதை விட, வீழ்த்தவே செய்கிறது. அவர்களை வீழ்ச்சியிலிருந்து தடுத்து, வாழ்த்தி, நல்வழி காட்ட வேண்டியது அவசியம். இளை ஞர்களின் வாழ்வில் ஒரு நேர்மறையான திருப்பத்தை ஏற்படுத்தி, அவர்களை மேம்படுத்த வேண்டுமெனில், நாம் திடமான சிந்தனையோடும், பக்குவத்தோடும் தொடர்ச்சியாகச் செயலாற்ற வேண்டும்.

கேள்வி 8: எதிர்காலத்தில் எந்த ஒரு தொழில் நுட்பத்தாலும் ஈடு செய்ய முடியாத வகையில், ஓர் ஆசிரியரிடம் இருக்க வேண்டிய உன்னதமான தனித்துவப் பண்பு எது?

– கு.வேம்புலி, திருவள்ளூர்

பதில் 8: சுய சிந்தனையும், பொதுநலக் கண்ணோட்டமும்.

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 9: ஒரு ஜனநாயக வகுப்பறையினை ஆசிரியர்கள் எவ்வாறு உருவாக்க இயலும்?

– வெ.காவியா, கரூர்

பதில் 9: ஆரோக்கியமான அறிவுசார் விவாதங்கள் மூலம் ஆசிரியர்கள் ஒரு ஜனநாயக வகுப்பறையை உருவாக்க இயலும். இத்தகைய வகுப்பறையில் “தனது வாதமே வெற்றி பெற வேண்டும்” என்ற பிடிவாதம் இருக்கக் கூடாது. மாறாக, மாற்றுத் திறனாய்வுக் கருத்துகளை மதிக்கும் மனப்பக்குவமும், பிறரின் கருத்துகளைக் கேட்டறியும் சகிப்புத்தன்மையும், கூட்டு கற்றல் முனைப்பும் மட்டுமே மாணவர்களிடம் வளர்க்கப்பட வேண்டும்.

கேள்வி 10: “பெரியார் யாரையும் சாமி கும்பிட வேண்டாம் என்று கூறவே இல்லை” என்கிறார்கள் பலர். இதனைப் பற்றியசிறு விளக்கம் அளியுங்கள்?

– தீ.வசந்தி, சென்னை

பதில் 10: தந்தை பெரியார் மேடைப் பேச்சில் பலதரப்பட்ட மக்களுக்கு அவர்களின் பக்குவம் புரிந்து கூறும் வகையில் இப்படிப்பட்ட புரிதல்களையும் பிரயோகப்படுத்தியுள்ளார்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *