பண்டைய இந்தியாவில் இருந்த பல்கலைக் கழகங்கள் உலகளவில் கல்விச் சிறப்பிற்குப் பெயர் பெற்றவையாக விளங்கின. தட்சசீலம், நாளந்தா, காஞ்சி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய கல்வி மய்யங்கள் ஜாதி, வர்ணம், இனம் மற்றும் தேச எல்லைகளைக் கடந்து உலகெங்கிலும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு இலவசமாகவும் சமமாகவும் அறிவை அள்ளி வழங்கின.
வர்ணமுறைக்கு எதிரான சமத்துவக் கல்வி
பண்டைய வர்ணமுறையானது குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டுமே கல்வியை உரிமையாக்கியது. ஆனால், தட்சசீலம், நாளந்தா மற்றும் தமிழகத்தின் காஞ்சி, நாகப்பட்டினம் போன்ற பல்கலைக்கழகங்கள் சமூகப் பின்னணி பாராமல் கல்வி கற்கும் உரிமையை அனைவருக்கும் வழங்கின.
தத்துவம், மருத்துவம், வானியல், தர்க்கம் மற்றும் போர்க்கலைகள் என அனைத்து அறிவியல்களையும் போதித்தன.
சீனா, திபெத், கொரியா, மத்திய ஆசியா போன்ற பகுதிகளிலிருந்து மாணவர்கள் இங்கு வந்து பயின்றனர்.
இத்தகைய சமத்துவ அணுகுமுறை, வர்ணமுறையின் கட்டமைப்புக்கும் அதன் மூலம் உருவான சமூகப் பாகுபாடுகளுக்கும் மிகப்பெரிய சவாலாகவும் எதிர்ப்பாகவும் அமைந்தது.
அழிவு மற்றும் அடையாள இழப்பு
கல்வி உலகளாவியதாக மாறியதையும், வர்ணமுறையை உடைத்து அனைவரும் அறிவு பெறும் சூழல் உருவானதையும் சகித்துக் கொள்ள முடியாத வர்ணாசிரமவாதிகளாலும், படையெடுப்பாளர்களாலும் இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க மய்யங்கள் இலக்காக்கப்பட்டன.
நாளந்தா, தட்சசீலம் போன்ற பல்கலைக்கழகங்கள் கொடூரமாகத் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. அங்கு இருந்த லட்சக்கணக்கான அரிய ஓலைச்சுவடிகளும் நூல்களும் மாதக்கணக்கில் எரிந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

அடையாளத்தை இழந்த
காஞ்சியும், நாகப்பட்டினமும்!
தென்னிந்தியாவின் சிறந்த கல்வி மய்யங்களாகத் திகழ்ந்த காஞ்சிக் கடிகையும் (பல்கலைக்கழகம்) நாகப்பட்டினப் பௌத்த விகாரையும் தாக்குதல்களினாலும் அரசியல் மாற்றங்களினாலும் தங்களின் ஒட்டுமொத்தப் பெருமையையும் இழந்தன.

அனைவருக்குமான கல்வியை வழங்கி, வர்ணமுறையின் முடக்கத்தை உடைத்தெறிந்த காரணத்தினால் இந்த உலகப்புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டன. இதன் விளைவாக, இந்தியத் துணைக்கண்டம் தனக்கே உரித்தான மாபெரும் அறிவுச் செல்வத்தையும், தொன்மையான அடையாளத்தையும் இழந்து நிற்கிறது. இருப்பினும், அந்த பல்கலைக்கழகங்கள் விதைத்த சமத்துவக் கல்வி சிந்தனை இன்றளவும் வரலாற்றுப் பக்கங்களில் அழியாச் சுடராக ஒளிர்ந்துகொண்டிருக்கிறது/
