18 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை பாழடித்து விட்டு, மாம்பழக் கதை சொல்லும் மோடி!-பாணன்

6 Min Read

கடந்த பல ஆண்டுகளாக ‘பரிக்ஷா பே சர்ச்சா’ (தேர்விற்கான கலந்தாய்வு) என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடி பள்ளி மாணவர்களை அழைத்து, பல மணி நேரம் தேர்வு பயத்தைப் போக்குவது குறித்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

நாட்டின் பிரதமராகப் பல்வேறு வேலைச் சுமைகளுக்கு இடையே அவர் மாணவர்களுடன் உரையாடுவது பாராட்டுக்குரிய ஒன்றாகப் பார்க்கப் பட்டாலும், தற்போது நாடு முழுவதும் எழுந்துள்ள தீவிரமான தேர்வுக் குளறுபடிகளுக்கு எதிராக அவர் உடனடியாகவும், கடுமையான முறையிலும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்பதே மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நாட்டின் பிரச்சினைகளைப் பேச மறந்த மோடி!

ஆனால், அண்மைய ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் அவர் நாட்டின் தற்போதைய முதன்மைப் பிரச்சினைகளைப் பேசாமல், மாம்பழ வகைகள் குறித்தும், எந்தெந்த மாநிலங்களில் என்னென்ன மாம்பழங்கள் கிடைக்கும் என்பது குறித்தும் விரிவாகப் பேசினார். குறிப்பாக, வாரணாசியின் ‘லங்கடா’ மாம்பழம் பற்றிப் பேசுகையில், அது மாற்றுத்திறனாளிகளுக்குப் பெருமை சேர்க்கும் என்று குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி கண்ணியமற்ற சொல்லை உச்சரிக்கலாமா?

உண்மையில், ‘லங்கடா’ என்ற சொல் கால்கள் வளைந்த அல்லது சரியாக நடக்க முடியாத நபர்களைக் குறிக்கும் ஒரு கேலிச்சொல்லாகும் (வசவுச்சொல்). வாரணாசி மாம்பழத்திற்கு அந்தப் பெயர் வந்ததற்குக் காரணம் — அது வெளியே பச்சையாகவும், கெட்டியான தோலுடனும் இருந்தாலும், உள்ளே பழுத்த சுவைமிகுந்த மாங்கனியாக இருக்கும். ‘வெளியே ஒன்று, உள்ளே ஒன்று’ என்ற பொருளைக் குறிக்கவே அதற்கு அப்பெயர் வைக்கப்பட்டது. கண்ணியம் கருதிப் பொதுவெளியில் அனைவரும் தவிர்க்கும் ஒரு சொல்லைப் பிரதமர் மீண்டும் பயன்படுத்தியதும், தேர்வு முறைகேடுகள் போன்ற தற்போதைய எரியும் பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப மாம்பழங்கள் குறித்து விரிவாகப் பேசியதும் பரவலான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

கட்டுரை, ஞாயிறு மலர்

தொடரும் வினாத்தாள் கசிவுகளும், சீர்திருத்தமின்மையும்!

பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், இந்தியாவின் மிக முக்கியமான பல தேர்வு முறைகளை நேர்மையானதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்ற முடியாதபோது, அதைப் பற்றிப் பேசுவது எந்தப் பயனையும் தராது. தேர்வு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்கள் பலமுறை வெளிவந்துள்ளன. இதற்காகப் பலமுறை மாணவர்கள் வீதிக்கு வந்து போராடினார்கள்; காவல்துறையினரின் தடியடிகளையும் வாங்கினார்கள். இருந்தபோதிலும், தேர்வு முறையில் எந்தவொரு உருப்படியான சீர்திருத்தமும் இதுவரை ஏற்படவில்லை.

கல்வி முறையின் மோசடிகளை அம்பலப்படுத்திய இளம் மாணவர்கள்!

அரசாங்கத்தின் மற்றும் தேர்வு வாரியங்களின் போதாமைகளை நாட்டின் இளம் மாணவர்களே நேரடி யாக ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளனர்:

கட்டுரை, ஞாயிறு மலர்

  • நிஸர்க் அதிகாரி (19 வயது): ஒரு திறமையான ‘எத்திகல் ஹேக்கர்’ (Ethical Hacker) ஆவார். தொலைக் காட்சிகளில் தனது முகத்தைக் காட்டாமல், சிபிஎஸ்இ (CBSE) அமைப்பின் இணையப் பாதுகாப்புப் குறைபாடுகளைத் தோலுரித்துக் காட்டியுள்ளார்.
  • சார்த்தக் சித்தாந்த்: சிபிஎஸ்இ-யின் டெண்டர் (ஒப்பந்தப் புள்ளி) வரலாற்றை முழுமையாக ஆய்வு செய்து வெளிக்கொண்டு வந்தார்.
  • வேதாந்த் சிறீவஸ்தவா (17 வயது): தனக்கு வழங்கப்பட்ட இயற்பியல் விடைத்தாள் தன்னுடையது அல்ல என்பதை எக்ஸ் (X) தளத்தில் ஆதாரத்துடன் நிரூபித்தார். அதன் பிறகே சிபிஎஸ்இ தனது தவறை ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று.
  • சித்தார்த் ராய்லன் & அனில் தீர்த் பர்மார்: இவ்விருவரும் கூட மாணவர்கள்தான். சிபிஎஸ்இ அமைப்பின் முறைகேடுகள் குறித்துப் பல முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

கல்வி அமைப்பின் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் கல்வி அமைச்சர் முதல் சிபிஎஸ்இ தலைவர் வரை அனைவரும் இந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்றுப் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தியாவின் 13 ஆண்டுகால பிரதமரின் ஆட்சியில், 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் களால் ஒரு கல்வி வாரியத்தின் முறைகேடுகள் அம்பலப்படுத்தப்படுவது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

மாணவர்களுக்கு எதிரான அவதூறுகளும், நிர்வாகத்தின் மறுப்பும்!

முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்த மாணவர்களைப் பாராட்டி, ஊக்குவிப்பதற்குப் பதிலாக, அவர்களை ‘தேசவிரோதிகள்’, ‘பாகிஸ்தானியர்கள்’, மற்றும் ‘வெளிநாட்டு ஏஜெண்டுகள்’ என்று சமூக ஊடகங்களில் சில அமைப்புகள் வதந்திகளைப் பரப்பி அச்சுறுத்த முயன்றன. ஆனால், மாணவர்கள் இதைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் கடந்து சென்று, தங்களின் கருத்துகளைக் கூறவும், தவறைத் தட்டிக்கேட்கவும் யாருக்கு வேண்டுமானாலும் உரிமை உண்டு என்பதை நிரூபித்துள்ளனர்.

கட்டுரை, ஞாயிறு மலர்

ஒரு சிக்கலைத் தீர்க்க விரும்பினால், முதலில் அந்தச் சிக்கல் இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து, இந்தியாவின் எதிர்காலமான மாணவர்களையே குற்றவாளிகளாகச் சித்தரிப்பது துயரமானது.

சிபிஎஸ்இ டெண்டர் முறைகேடுகளும், ‘கோயம்ப்ட் எடுடெக்’ நிறுவனமும்!

ராஞ்சியைச் சேர்ந்த 18 வயதான சார்த்தக் சித்தாந்த், சிபிஎஸ்இ டெண்டரின் ஒவ்வொரு விதிகளையும் அலசி ஆராய்ந்துள்ளார். ஏற்கெனவே கருப்புப் பட்டியலில் (Blacklist) இருந்த ‘கோயம்ப்ட் எடுடெக்’ (Coempt Edutech) என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கிடைப்பதற்காக, சிபிஎஸ்இ அமைப்பு வெவ்வேறு டெண்டர்களில் தங்களின் நிபந்தனைகளை ஓராண்டிற்குள் மாற்றி யமைத்ததைச் சார்த்தக் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆரம்பகால டெண்டரில், 2021 முதல் 2023 வரையிலான நிதியாண்டில் 50 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. இந்த நிபந்தனையின்படி கோயம்ப்ட் எடுடெக் நிறுவனத்தால் டெண்டரைப் பெற்றிருக்க முடியாது. ஆனால், அந்நிறுவனத்திற்குச் சாதகமாக விதிகள் தளர்த்தப்பட்டன. 18 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மதிப்பெண் மென்பொருள் வழங்கும் பொறுப்பு, தகுதியற்ற ஒரு நிறுவனத்திற்கு ஏன் வழங்கப்பட்டது என்ற கேள்விக்கு அரசிடம் முறையான பதில் இல்லை.

இணையப் பாதுகாப்பு குறைபாடுகளும்,
தரவு கசிவும்!

சிபிஎஸ்இயின் ஓஎஸ்எம் (OSM – Onscreen Marking) போர்ட்டலில் உள்ள குறைபாடுகளை நிஸர்க் அதிகாரி கண்டறிந்தார். இந்த ‘ஆன்மார்க்’ (OnMark) தளத்தை உருவாக்கியது ‘கோயம்ப்ட் எடுடெக்’ நிறுவனம் ஆகும். நிஸர்க் அதிகாரி மற்றும் சித்தாந்த் ஆகியோரின் ஹேக்கிங் ஆய்வுகளின்படி:

  • சிபிஎஸ்இ மாணவர்களின் ஆவணங்கள், ஒளிப்படங்கள் மற்றும் தரவுகளைச் சேமித்து வைத்திருந்த ‘கிளவுட் ஸ்டோரேஜ்’ (Cloud Storage) பாதுகாப்பற்ற முறையில் இருந்தன. அதை யார் வேண்டுமானாலும் எளிதாக அணுக முடியும்.
  • எந்தவொரு மாணவர் அல்லது ஆசிரியரின் விவரங்களையும் வெளியில் இருந்து மாற்றியமைக்க முடியும். தேர்ச்சி பெற்றவரைத் தோல்வியடையச் செய்யவும், யாரை வேண்டுமானாலும் முதலிடம் பெற வைக்கவும் கூடிய மோசமான பாதுகாப்புப் பிழைகள் அதில் இருந்தன.

இவர்கள் இதனை டிவிட்டரில் ஆதாரங்களுடன் வெளியிட்ட பிறகுதான், சிபிஎஸ்இ இந்த வாதங்கள் உண்மை என்று ஒப்புக்கொண்டது.

விடைத்தாள் நகல் மறுமதிப்பீட்டில்
நடந்த குளறுபடிகள்!

சுமார் 4 லட்சம் மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகலைக் கேட்கவும், மறுமதிப்பீடு செய்யவும் விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம் மறுமதிப்பீட்டுக் கட்டணமாகப் பெருந்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. டிவிட்டரில் சிவராஜ் மேத்தா என்ற மாணவர், தனக்கு வழங்கப்பட்ட விடைத்தாளில் உள்ள கையெழுத்து தன்னுடையது அல்ல என்று பதிவிட்டுள்ளார்.

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழின் அறிக்கையின்படி, சிபிஎஸ்இ இதுவரை மங்கலாக உள்ள 5,000 விடைத்தாள் நகல்களைக் கண்டறிந்துள்ளது. மேலும், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து வேறு மாணவர்களின் விடைத்தாள்களைப் பெற்ற 23 மாணவர்களை அடையாளம் கண்டுள்ளது. இது விண்ணப்பித்தவர்களில் கண்டறியப்பட்டவை மட்டுமே; விண்ணப்பிக்காத மாணவர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியே!

அலட்சியமான ஸ்கேனிங் பணியும், மாணவர்களின் எதிர்காலமும்!

18 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணியை வெறும் 15 ஊழியர்கள் மட்டுமே செய்துள்ளனர். மேலும், விடைத்தாள்கள் கைப்பேசிகள் மூலம் மிக அலட்சியமாக ஸ்கேன் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களுக்குக் கிடைத்த நகல்களைப் பகிர்ந்தபோது, பக்கத்தில் ஒயர்கள், ஸ்டேப்ளர், பேனா போன்றவை காணப்படுவதும், சில இடங்களில் காகிதம் மடிந்திருப்பதும் கைப்பேசி ஸ்கேனிங்கை உறுதிப்படுத்தியுள்ளன.

மறுபுறம், சிபிஎஸ்இ  விடைத்தாள் முறைகேட்டில் விரக்தியடைந்த சீகரைச் சேர்ந்த பிரதீப் மேக்வால் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்ட துயரமும் நிகழ்ந்துள்ளது.

கான்பூரில் பி.எட் தேர்வு எழுதச் சென்ற மாணவர்கள் சாக்கடையில் விழுந்தனர். சியுஇடி தேர்வில் சர்வர் கோளாறு காரணமாகத் தேர்வு நடத்த முடியவில்லை.

ஒட்டுமொத்த இந்தியாவின் நிகழ்காலத்தையும் பாழாக்கி விட்டு வளமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் மாணவர்களின் வாழ்க்கையிலும் விளை யாடும் மோடி அரசு ஒரு சில தொழிலதிபர்களுக்காக இன்னும் என்ன என்ன செய்யக் காத்திருக்கிறது?  மாணவர்கள் எதிர்காலமோ அச்சமூட்டும் விதமாகவே உள்ளது?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *