ஆகஸ்ட் 29 அன்று, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மேடிசன் ஸ்கொயர் கார்டனில், ‘வசுதெய்வ குடும்பக’ (உலகமெல்லாம் ஒரே குடும்பம்) என்ற சமஸ்கிருதச் சொற்றொடரைத் தலைப்பாக்கி, ஆயிரக்கணக்கான இந்திய-அமெரிக்கர்களிடம் ஒற்றுமை, குடிமைப் பொறுப்புணர்வு மற்றும் உலகளாவிய நல்லிணக்கம் குறித்துப் பேசவிருக்கிறாராம்! உங்களுக்கு ஏதேனும் பழமொழி நினைவுக்கு வரலாம்.
‘உலகம் ஒரு குடும்பம்’ என்ற வாய்வீச்சில் எப்போதேனும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு உடன்பாடு இருந்ததுண்டா? இவர்கள் தூக்கிப் பிடித்துக் கொண்டாடும் ஹிந்து மதம் என்றைக்காவது ஹிந்து மதத்தில் இருப்பவர்களையாவது ஒரே குடும்பமாகக் கருதியிருக்கிறதா? ஹிந்து மதத்தைப் பின்பற்றுபவர்களையே நான்கு வர்ணமாகப் பிரித்து, அதற்கும் அடுத்து யாரும் தொடக் கூடாதவர்கள் என்றொரு பிரிவை வைத்து, அடுக்கு அடுக்காக ஜாதிகளை உருவாக்கி, அவற்றைப் பாதுகாக்க என்றே வேதங்கள், இதிகாசங்கள், சுருதிகள், ஸ்மிருதிகள், புராணங்கள், சாஸ்திரங்கள், ஆகமங்கள், கோயில்கள், திருவிழாக்கள், பழக்கவழக்கங்கள், பண்டிகைகள் என்று அதை நிலைநிறுத்தப் பெரும் ஏற்பாடு செய்து பாகுபாட்டையே தங்கள் மதத்தின் அடிப்படையாக வைத்திருப்பவர்கள், வெகு மக்களைப் படிக்கவிடாமல் செய்வதற்காக அன்றைக்குத் தீண்டாமையைப் பயன்படுத்தியவர்கள், இன்று சமூகநீதியை ஒழிக்கச் சூழ்ச்சி செய்பவர்கள் தான் உலகம் ஒரு குடும்பம் என்று பேசப் போகிறார்களாம்.
ஆரம்ப காலத்திலேயே அமெரிக்காவுக்குப் போய் ஆக்கிரமித்துக் கொண்ட அக்கிரகார வாசிகளிடம் 1977-ஆம் ஆண்டு ‘இஸ்கான்’ நிறுவனர் ஸ்ரீல பிரபுபாதா பேசியது என்ன? “சூத்திரர்கள் எப்போதும் அடக்கி வைக்கப்பட வேண்டியவர்கள். அவர்களைச் சுதந்திரமாக விடக் கூடாது. அமெரிக்காவில் எப்படி கருப்பின மக்கள் அடிமைகளாக வைக்கப்பட்டுள்ளார்களோ, அப்படி சூத்திரர்களும் வைக்கப்பட வேண்டும். அவர்களுக்கு போதுமான உணவு, உடை கொடுக்கலாம். வேறெதுவும் கொடுக்கக் கூடாது. சம உரிமை கொடுத்தால் அவர்கள் தொல்லை செய்வார்கள், அச்சமூட்டும் நிலைக்கு ஆளாக்குவார்கள்” என்று இதோபதேசம் செய்தாரே! அந்த நிலைப்பாட்டில் மாறிவிட்டார்களா? அந்த நிலைப்பாடு தவறு என்று ஆர்.எஸ்.எஸ். சார்பில் அறிவித்திருக்கிறார்களா? அமெரிக்காவிலிருந்த அடிமை முறையையும் ஆதரித்து, அதே போல அடிமை முறை ‘சூத்திரர்களிடம்’ பேணப்பட வேண்டும் என்று பேசிய இஸ்கான் தானே அமெரிக்காவில் திறக்கப்பட்ட மிகப்பெரிய ஹிந்து வணிகமனை. அதை எதிர்த்துப் பேசுவாரா மோகன் பாகவத்?
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கூட, அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பப் பகுதியான சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஜாதி ஆதிக்கத்துடன் நடந்துகொண்டவர்கள் மீது வழக்கு தொடுத்து, இன்றைக்கு ஜாதி ஆதிக்கத்துக்கு எதிரான போரை அமெரிக்காவிலும் நடந்த வேண்டிய சூழலை உருவாக்கியிருக்கிறார்களே… அதைப் பற்றி அங்கே பேசுவாரா ஆர்.எஸ்.எஸ். தலைவர்?
இவர்களது ‘உலகக் குடும்பத்தில்’ பிற மதத்தவர்க்கு இடம் உண்டா? கிறிஸ்தவர்களுக்கு, இஸ்லாமியர்களுக்கு இருக்கும் உரிமைகளைப் பறிக்க எத்தனையெத்தனை மறைமுகத் திட்டங்கள், சட்டங்கள்! கிறிஸ்துவ நாட்டில் போய் பேசப் போகிறார் என்பதால், அங்கே போய் எல்லோருக்கும் சமத்துவம் பேசப் போகிறாராம். ஆர்.எஸ்.எஸ். எப்படிப்பட்ட அமைப்பு என்று அமெரிக்காவில் இருப்போருக்குத் தெரியாதா?
“ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பேச்சு எதையெல்லாம் மறைக்க முற்படுமோ, அந்த உண்மைகளை ஆவணப்படுத்துவதிலேயே கடந்த பத்தாண்டுகளின் பெரும்பகுதியை நான் செலவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார் டிரம்ப் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட ஆணையராகவும், ‘பன்னாட்டு மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின்’ தலைவராகவும் பணியாற்றிய நடெய்ன் மேன்சா என்ற பெண்மணி.
தற்போது ‘பன்னாட்டு மதச் சுதந்திரம்’ தொடர்பான வட்டமேஜை அமைப்பின் இணைத் தலைவராகவும் இருக்கும் அவர், “பாகவத்தின் உரைக்கு அவையோர் கைதட்டும் முன், அவரிடம் ஒரு நேரடிக் கேள்வி கேட்கப்பட வேண்டும்: உலகம் முழுவதும் மதச் சுதந்திரச் சூழலை மதிப்பிடுவதற்காகவே அமெரிக்க நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட, இரு கட்சிகளின் பிரதிநிதித்துவம் கொண்ட அந்த மத்திய அமைப்போடு அவர் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறாரா?” என்று வெளிப்படையாகக் கேள்வி எழுப்பியிருக்கிறாரே, பதில்வருமா ஆர்.எஸ்.எஸ். கூடாரத்திலிருந்து? அல்லது அமெரிக்காவில் அவர்களின் கிளை அலுவலகமாகச் செயல்படும் ஹெச்.எஸ்.எஸ்.சிலிருந்து?
மதச் சுதந்திரத்தை மிகக் கடுமையாக மீறும் செயல்களில் ஈடுபடுவதாலும், அத்தகைய மீறல்களை அனுமதிப்பதாலும் இந்தியாவை, உலகின் மிக மோசமான மதச் சுதந்திர மீறல் நாடுகள் இடம்பெறும் வகைப்பாடான “குறிப்பிட்ட கவலைக்குரிய நாடாக” (CPC) வகைப்படுத்த வேண்டும் என்று பன்னாட்டு மதச் சுதந்திரத்திற்கான அமைப்பு, தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக அமெரிக்க வெளியுறவுத் துறைக்குப் பரிந்துரைத்து வருகிறதே, இந்த மோசமான நிலைக்குக் காரணம் யார்? சாட்சாத் மோகன் பாகவத் தலைமை தாங்கும் ஆர்.எஸ்.எஸ்.சும் சங்பரிவாரும் தானே!
இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம், ஆர்.எஸ்.எஸ்.சுக்கு எதிரான அமைப்புகளின் கருத்துகள் அல்லவே! அவை விசாரணைகள், ஆய்வுகள் மற்றும் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், தலித்துகள் மற்றும் பலரிடமிருந்து பெறப்பட்ட நேரடிச் சாட்சியங்களின் அடிப்படையில் அமைந்தவை; இவர்கள் அனைவரும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்துகொண்டு, மதச் சுதந்திரம் சீரழிந்து வருவதை ஒரே மாதிரியாக விவரித்துள்ளனர் என்று மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளாரே அந்த அம்மையார்.
தெற்காசியாவின் மதமாற்றத் தடைச் சட்டங்கள் குறித்த ஆய்வில், பார்ப்பதற்கு நடுநிலையானதாகத் தோன்றும் இந்தியாவின் சட்டங்கள், இந்தியாவின் பெரும்பான்மை மதத்திலிருந்து வெளியேற விரும்பும் மதச் சிறுபான்மையினருக்கு எதிராகவே அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன என்பது கண்டறியப்பட்டதே! குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவந்து, அதை நாடு தழுவிய குடிமக்கள் பதிவேட்டுடன் (NRC) இணைக்கும்போது, லட்சக்கணக்கான இந்திய முஸ்லிம்கள் குடியுரிமையற்றவர்களாக மாறும் அபாயம் உள்ளது என்பது கண்டறியப்பட் டுள்ளதே! இன்னும் அடுக்கடுக்காக உண்மைகளை அம்பலப்படுத்தினவே அந்த அறிக்கைகள்!
இப்போது வேக வேகமாக ஆர்.எஸ்.எஸ். தலைவர், அமெரிக்காவில் போய் அமைதி அவதாரம் எடுப்பதற்கு என்ன காரணம்?
முந்தைய ஆண்டுகளை விட ஒரு படி மேலே சென்று, தனது 2026-ஆம் ஆண்டுக்கான அறிக்கையில், “மதச் சுதந்திர மீறல்களில் முக்கிய பங்காற்றியதற்காக, அதன் அதிகாரிகளுக்கு எதிராகத் தனிப்பட்ட தடைகள் விதிக்கப்பட வேண்டிய அமைப்பாக ஆர்.எஸ்.எஸ்.அய் நேரடியாகக் குறிப்பிட்டுள்ளது பன்னாட்டு மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம். அது மட்டுமல்ல, அமெரிக்க நாடாளுமன்றச் சட்டத்தால் உருவாக்கப்பட்டு, இரு அரசியல் கட்சிகளாலும் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஓர் ஆணையத்தின் பார்வையில், இந்த அமைப்பின் செயல்பாடுகள் ‘தண்டனைக்குரிய மத ரீதியான துன்புறுத்தல்’ என்ற நிலையை எட்டியுள்ளன.
பாஜக ஆளும் மாநிலங்களில் தேவால யங்கள் எரிக்கப்படுகின்றன; பாதிரியார்கள் தாக்கப்படுகிறார்கள்; மசூதிகளும் மதரஸாக்களும் “ஆக்கிரமிப்புகள்” என்ற பெயரில் இடிக்கப் படுகின்றன. குஜராத் முதலமைச்சராக இருந்தபோது 2002-இல் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கே கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலத்திற்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டிருந்தது என்று அடுக்கடுக்காக ஆதாரங்களுடன் காத்திருக்கும் அமெரிக்காவில் ஏதாவது சால்ஜாப்புகள் பேசி, தடை விதிக்காதவாறு தடுப்பதற்குத் தானே பறந்து போகிறார் மோகன் பாகவத்!
அமெரிக்கா மட்டுமல்ல… உலகமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. ‘சைவம் பேசும் ஓநாய்களைப் பற்றிய ஈசாப் கதைகளை’ உலகம் ஏற்கெனவே நிறையக் கேட்டிருக்கிறது. மிலேச்சர்களான யவனர்களின் ஈசாப் வேண்டாம் என்றால், பார தேசத்தின் கதையையே எடுத்துக் காட்டுவோம். பஞ்ச தந்திரக் கதைகளின் நீல நரிக் கதையையும், அதன் சாயம் வெளுத்த கதையையும் நாம் பல முறை படித்திருக்கிறோம் என்பது ஆர்.எஸ்.எஸ். தலைவருக்குப் புரியட்டும்!
