தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் கோரிக்கைகள்

3 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, ஆக 21- ‘காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தினை 152 அடியாக உயர்த்த வேண்டும். நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தென் மண்டல முதலமைச்சர்கள் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், தென் மண்டலக் குழுவின் 31-ஆவது கூட்டம், நேற்று (20.8.2026) கோவளத்தில் நடைபெற்றது. இந்த தென் மண்டலக் குழுவில், ஆந்திரப் பிரதேசம், கருநாடகா, கேரளம், தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களும், புதுச்சேரி, அந்தமான் & நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களும் உறுப்பினர்களாக உள்ளன.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தென் மண்டலக் குழுவின் தலைவராகவும், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் துணைத் தலைவராகவும் உள்ளனர். இந்தக் கூட்டத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கருநாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார், கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன், தெலங்கானா துணை முதலமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், “நீல பொருளாதார மேம்பாட்டுக்கு அண்டை மாநிலங்களுடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம். தென் மண்டல மாநிலங்களின் வளர்ச்சிக்கு கடல்சார் பொருளாதரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதில் ஒருங் கிணைந்த செயல்பாட்டால் துறை முகம், சரக்கு போக்குவரத்து, மீன்வளம், கடல் சுற்றுலா ஆகியவை மேம்படும்.

இணைந்து செயல்படத் தயார்

சரக்கு கப்பல் போக்குவரத்து விரிவாக்கம் மூலம் போக்குவரத்து செலவு குறைவது தொழில்துறையை மேம்படுத்தும். 1,076 கிலோ மீட்டர் கொண்ட கடல் வழிப் போக்கு வரத்து, சுற்றுலா வளர்ச்சிக்கு மாநி லங்களுடன் இணைந்து செயல்பட தயார்.

போதைப் பொருளை ஒழிப்பதில் ஒருங்கிணைந்த செயல்பாடு தேவை. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகள் மதிக்கப்பட வேண்டும். கீழ்நிலை நீர் பிடிப்பு மாநிலங்களின் சட்டபூர்வ உரிமைகள், மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். நதிநீர் மேலாண்மைக்காக உருவாக்கப்பட்ட அமைப்புகளின் முடிவுகள் அமல்படுத்தப்பட வேண்டும். முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தினை 152 அடியாக உயர்த்த நீதித்துறை உத்தர வுப்படி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பரஸ்பர நம்பிக்கை, அறிவியல் ஆதாரங்கள் சட்டத்தின் மீதான மதிப்போடு நதிநீர் பிரச்சினையை அணுக வேண்டும்.

‘நீட்’ தேர்வுக்கு விலக்கு
அளிக்க வேண்டும்

பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்க வேண்டும். மருத்துவ படிப்பு களுக்கான நீட் நுழைவுத் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும். தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது என்ற சட்டபூர்வ உறுதிமொழி தேவை. தொகுதி மறுவரையறையால் எந்த ஒரு மாநிலத்தின் பிரதிநிதித்துவம் குறையாது என ஒன்றிய அரசு சட்டபூர்வ உத்தரவாதம் தர வேண்டும். போதைப் பொருள்களின் இணைய விற்பனையை தடுக்க சட்ட விதிகளை கடுமையாக்க வேண்டும். மாநிலங்களுக்கிடையே உளவுத் தகவல்களை பகிர்வதன் மூலம் தென் மாநிலங்கள் இணைந்து செயல்பட வேண்டும்.

தென் மாநிலங்களில் ஒருங் கிணைந்த தொழிற்பேட்டைகளை அமைக்க வேண்டும். கருநாடகாவின் பொம்மச்சந்திரா – ஓசூர் வரை மெட்ரோவை நீட்டிக்கும் திட்டம் சிறந்த உள்கட்டமைப்பாக இருக்கும்.

நாட்டின் பொருளாதாரத்தில் தென் மாநிலங்கள் 30 சதவீதம் பங்களிப்பை வழங்குகின்றன. எனவே தென்மாநிலங்களின் செயல் திறன், வளர்ச்சி, முதலீடுகளை கருத்தில் கொண்டு நியாயமான நிதி பகிர்வை வழங்க வேண்டும். ஜிஎஸ்டி வரம்புகளை தீர்மானிக்கும் நெகிழ்வுத் தன்மையை மாநிலங்கள் மீண்டும் பெறவேண்டும்” என்று தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *