குழந்தைகளை அடிமையாக்கும் இன்ஸ்டாகிராம்.. அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கு-அனல் பறக்கும் வாதம்!

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

கலிபோர்னியா. ஆக. 21- குழந்தைகளை நீண்டநேரம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்த வைக்க,. அவர்களை அந்த தளங்களுக்கு அடிமையாக்கும் வகையில் தளங்களை உருவாக்கியதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை தொடங்கிய முதல் நாளே இதில் அனல் பறந்தது.

இந்த காலத்தில் திரும்பிய பக்க மெல்லாம் சமூக வலைத்தளம் தான். நமது அன்றாட வாழ்க்கையில் கணிசமான பகுதியை சமூக வலைத்தளங்கள் ஆக்கிரமித்துவிட்டன என்றே சொல்லலாம். குறிப்பாக சிறார்கள் சமூக வலைத்தளங்களுக்கு மிக அதிகமாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு இருந்து கொண்டு தான் இருக்கிறது.

அடிமையாக்கும் வகையில்!

இதற்கிடையே குழந்தைகளை வேண்டும் என்றே சமூக வலைத்தளங் களுக்கு அடிமையாக்கும் வகையில் மெட்டா நிறுவனம் தனது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களை வடிவமைத்துள்ளதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது. நிறுவனங்கள் பலவும் எப்படி தங்கள் சமூக வலைத்தளங்களை டிசைன் செய்கின்றன என்பதையே மாற்றி அமைக்கும் இந்த வழக்கின் விசாரணை அமெரிக்காவில் தொடங்கியுள்ளது.

மெட்டா நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்காவின் 29 மாகாணங்கள் இணைந்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளன. குழந்தைகளின் மனநலத்தை பாதிக்கும் வகையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வடிவமைக்கப்பட்டதாகவும், குழந்தைகளின் தனிப்பட்ட தகவல் களை முறையற்ற வகையில் சேக ரித்து பயன்படுத்தியதாகவும் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது. கலிபோர்னியா, கொலராடோ, கென்டக்கி மற்றும் நியூ ஜெர்சி ஆகிய உள்ளிட்ட 29 மாகாணங்கள் இந்த வழக்கை தொடர்ந்துள்ளன.

வியாபார நுணுக்கமே!

வழக்கு விசாரணையின் போது கலிபோர்னியா துணை அட்டர்னி ஜெனரல் மேகன் ஓ’நீல், “பயனாளர்களை அதிக நேரம் தங்கள் தளங்களில் வைத் திருப்பது, அவர்களது டேட்டாவை சேகரிப்பது, தளங்களின் பாதுகாப்பு தொடர்பான உண்மைகளை பொது மக்களிடம் இருந்து மறைப்பதை தான் மெட்டா தொடர்ந்து செய்து வருகிறது. சொல்லப்போனால் மெட்டாவின் வியாபார அணுகுமுறை, நுணுக்கமே இவை. குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளம் வயதினரை குறிவைத்தே இதை செய்துள்ளனர்” என்றார்.

பேஸ்பேக் மற்றும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தும் இளைஞர்களிடையே பதற்றம், மனச்சோர்வு மற்றும் தற்கொலை போன்ற பிரச்சினைகள் அதிகரிப்பதாக அமெரிக்க மாகாணங்கள் குற்றம்சாட்டியுள்ளன. இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை மெட்டா நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

மறுப்பு

மெட்டா தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பால் ஷ்மிட், “சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தும் சிலருக்கு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அனைத்து இளைஞர்களும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதால் பாதிக்கப்படுவதாக சொல்வது ஏற்கும் வகையில் இல்லை. இதை எந்தவொரு ஆய்வும் நிரூபிக்கவில்லை. நாங்கள் எங்கள் நிறுவனத்தை மேம்படுத்தவே விரும்புகிறோம். ஆபத்தானதாக மாற்ற விரும்பவில்லை” என்றார்.

இந்த வழக்கில் மெட்டா நிறுவனத் திற்கு எதிராக தீர்ப்பு வந்தால் சமூக வலைத்தளங்கள் மொத்தமாக மாறும். குறிப்பாக எவ்வளவு லைக்ஸ் என்பது மறைக்கப்படும்.. நாம் ஸ்க்ரால் செய்யும் போது தொடர்ந்து புதிய போஸ்ட்களை காட்டும் Infinite Scroll வசதியும் நிறுத்தப்படும், இளம் வயதினர் தினசரி இவ்வளவு நேரம் தான் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முடியும் என்ற நேர கட்டுப்பாடு கொண்டு வரப்படும். 13 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும். இப்படி ஒரு நீதிமன்ற தீர்ப்பால் ஒட்டுமொத்த சமூக வலைத்தளமும் மாறும் என்பதால் இந்த வழக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

பரபரப்புக் குற்றச்சாட்டு

இந்த வழக்கில் மெட்டா நிறுவனத்தின் முன்னாள் பாதுகாப்பு பொறியாளர் ஆர்டுரோ பெஜார் முதல் சாட்சியாக ஆஜராகியுள்ளார். மெட்டாவில் குழந்தைகளை பாதுகாக்கும் கருவிகள் போதுமானதாக இல்லை என்றும் இது அந்த நிறுவனத்துக்கே தெரியும் என்றும் அவர் நீண்ட காலமாக குற்றம்சாட்டி வருகிறார். பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் போதிய பாதுகாப்பு வசதிகளை கொண்டு வர அந்நிறுவனம் கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். 13 வயதிற்கு குறைவானவர்கள் சமூக வலைத்தளங்களில் இருப்பதை கட்டுப்படுத்தவும் மெட்டா நடவடிக்கை எடுக்கவில்லை என பெஜார் குற்றஞ் சாட்டினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *