சென்னை, ஆக 20- நூறுநாள் வேலைத் திட்டத்துக்கு இந்தாண்டு ரூ.39,609 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் என்.ஆனந்த் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று (19.8.2026) நடைபெற்ற ஊரக வளர்ச்சி, நீர்வளம், சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் வருமாறு:
அய்.பெரியசாமி (திமுக): மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்துக்கு 100 நாட்கள் வேலை திட்டம் என்று பெயர் இருந்தாலும், அதிகபட்சம் 52 நாட்கள்தான் வேலை அளிக்க முடியும்.
தற்போது, 125 நாட்கள் வேலை என்றும், 60 சதவீதம் ஊதியம் அவர்கள் தருவதாகவும், 40 சதவீதம் மாநிலம் தர வேண்டும் என்றும் ஒன்றிய அரசு கூறியுள்ளது. இந்நிலையில், தற்போது, 150 நாட்கள் வெற்றித் திட்டமாக நீங்கள் அறிவித்துள்ளீர்கள். ஆனால், எல்லோருக்கும் 150 நாட்கள் வேலை அளிக்க முடியுமா என்றால் முடியாது. இது பேப்பரில்தான் உள்ளது. இந்த திட்டம் எந்த அளவுக்கு நடைபெற முடியும் என்பது தெரியவில்லை.
அமைச்சர் என்.ஆனந்த்: இத்திட்டத்துக்கு ரூ.12,643 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு ரூ.7,586 கோடி வழங்குகிறது. முதலமைச்சர் ரூ.5,057 கோடி ஒதுக்கியுள்ளார். 125 நாட்கள் வேலை செய்யும் அனைவருக்கும் 150 நாட்கள் வேலை அளிப்போம். இதை செய்ய முடியுமா, பணம் இருக்கிறதா என்பதை பார்த்து ஒவ்வொரு திட்டத்தையும் முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.
அய்.பெரியசாமி: நான் குற்றச்சாட்டாகக் கூறவில்லை. இப்போது ரூ.12,643 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது ஊதியமும் உயர்த்தப்பட்டுள்ளது. நாங்கள் ரூ.13 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டபோது, ஒருவருக்கு 50 நாட்கள்தான் வேலை அளிக்க முடிந்தது.
100 நாட்கள் வேலை கொடுக்க இன்னும் ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும். ஒன்றிய அரசு தனது பங்கு ரூ.7 ஆயிரம் கோடியையும் ஒதுக்குகிறதா என்பதே தெரியவில்லை. 100 நாட்கள் வேலைக்கு ரூ.25 ஆயிரம் கோடி தேவைப்படும்.
நிதிச் சுமை அதிகரிக்கும். தமிழ்நாட்டில் மழைப்பொழிவு குறைந்து, வறட்சியாக உள்ளது. எங்கள் மாவட்டத்தில் 86 சதவீதம் பெண்கள்இத்திட்டத்தைத்தான் நம்பியுள்ளனர். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, இறுதியாக பதிலளித்த அமைச்சர் ஆனந்த், ‘‘2025-2026-ஆம் ஆண்டில் இத்திட்டத்துக்கு 29,465 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது ரூ.39,609 கோடியை முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார்’’ என்றார்.
