உலகத் தரத்திலான ஆராய்ச்சி வசதிகள், நவீன ஆய்வகங்கள், முன்னணி பல்கலைக் கழகங்கள் மற்றும் தொழில்கல்வி நிறுவனங்களின் வலுவான ஒத்துழைப்பு ஆகியவற்றால், கிழக்கு ஆசிய நாடுகள் இன்று அறிவியல் மேற்படிப்பிற்கான முக்கிய கல்வி மய்யங்களாக உருவெடுத்துள்ளன. குறிப்பாக சிங்கப்பூர், தென் கொரியா, ஜப்பான், சீனா மற்றும் தைவான் ஆகிய நாடுகள், உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பன்னாட்டு மாணவர்களை ஈர்த்து வருகின்றன.
முன்னணி படிப்புகள்
இந்த நாடுகளில் உயிரித்தொழில்நுட்பம், நுண்ணுயிரியியல், உயிர் மருத்துவ அறிவியல், உணவு அறிவியல், வேதியியல், பொருள் அறிவியல், செயற்கை நுண்ணறிவு, செமி கண்டக்டர், பேட்டரி தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் பொறியியல் போன்ற துறைகளில் உலகத் தரத்திலான முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
உலகளவில் சிறந்த ஆராய்ச்சி பல்கலைக் கழகங்களாகத் திகழ்கின்றன. உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் கிழக்கு ஆசிய நாடுகளின் 22 பல்கலைக்கழகங்கள் இடம்பெறுவது, கூடுதல் சிறப்பு.
முழு நிதியுதவி
பன்னாட்டு மாணவர்களை ஈர்க்க பல நாடுகள் முழுமையான கல்வி உதவித்தொகைகளை வழங்கு கின்றன. அவற்றில் ஜப்பானின் மெக்ஸ்ட் உதவித்தொகை (MEXT Scholarship), தென் கொரியாவின் குளோபல் கொரியா உதவித்தொகை (Global Korea Scholarship), சிங்கப்பூரின் சிங்கா உதவித்தொகை, சீன அரசாங்கத்தின் சி.எஸ்.சி. உதவித்தொகை, ஹாங்காங்கின் பி.எச்.டி. பெலோஷிப் உதவித்தொகை, தைவானின் எம்.இ.ஏ. உதவித்தொகை ஆகியவை மிகவும் பிரபலமானவை.
இந்த உதவித்தொகைகள் கல்விக் கட்டணம், மாதாந்திர வாழ்வாதார உதவித்தொகை, மருத்துவக் காப்பீடு, விமானக் கட்டணம் மற்றும் பல சந்தர்ப்பங்களில் ஆராய்ச்சி செலவுகளையும் உள்ளடக்கிய முழுமையான நிதி ஆதரவை வழங்குகின்றன.
உதவித்தொகை பெற என்ன செய்ய வேண்டும்?
உயர்ந்த மதிப்பெண்கள் மட்டும் போதுமானதல்ல. சிறந்த ஜி.பி.ஏ., ஆய்வு அனுபவம், ஆராய்ச்சி இன்டர்ன்ஷிப், எஸ்.சி.ஜி./எஸ்.சி.ஜி.இ. அல்லது ஸ்கோபஸ் இதழ்களில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், தேசிய மற்றும் பன்னாட்டு மாநாடுகளில் பங்கேற்பு ஆகியவை விண்ணப்பத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும்.
மேலும் துறைசார் திறன்களுடன், கேட், கேம், எப்.இ.ஏ., சி.எப்.டி. சி.என்.சி. புரோகிராமிங், 3டி பிரிண்டிங், பைதான், C++ போன்ற தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெற்றிருப்பது சேர்க்கை மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை அதிகரிக்கும்.
ஆய்வும், அங்கீகாரமும்…
“வெளிநாட்டில் மேற்படிப்பு மேற்கொள்ளும்போது பன்னாட்டு பேராசிரியர், ஆராய்ச்சியாளர்களுடன் பழகவும், அவர்களது எதிர்கால ஆய்வுகளில் பங்கேற்கவும் வாய்ப்பு கிடைக்கும். உங்களுடைய ஆய்வுக்கட்டுரைகளை பன்னாட்டு கருத்தரங்குகளில் வெளியிடலாம். இதன்மூலம் ஸ்டான்போர்டு எல்சியேவியர் வெளியிடும் உலகின் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் இடம்பெற முடிந்தது. இதுவரை 50-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை பன்னாட்டு அரங்கில் வெளியிட்டிருக்கிறேன். 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளேன். உதவித்தொகையுடன், ஆராய்ச்சியாளர்களுக்கு இதுபோன்று ஊக்கம்தான் அவசியம்” என வெளிநாட்டு மேற்படிப்பின் நன்மைகளை ஆரோக்கியராஜ் பகிர்ந்துகொண்டார்.
இதனுடன், தெளிவான ஸ்டேட்மெண்ட் ஆப் பர்ப்பஸ் (SOP), வலுவான லெட்டர்ஸ் ஆப் ரெக்கமெண்டேஷன் (LOR) மற்றும் ஆங்கில மொழித் திறன் சான்றிதழ்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
படிப்புக்குப் பிறகு வேலைவாய்ப்பு
மேற்படிப்பு முடித்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள், அரசு ஆராய்ச்சி நிறுவனங்கள், உயிரித்தொழில்நுட்ப நிறுவனங்கள், மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள், உணவு மற்றும் வேளாண்மை நிறுவனங்கள், மருத்துவ ஆராய்ச்சி மய்யங்களில் சிறந்த வேலைவாய்ப்புகள் உள்ளன. ஆராய்ச்சி துறையின் உயர் மட்டத்தில் பணியாற்றவும் முடியும்.
— பேராசிரியர் ஆரோக்கியராஜ்,
செஜாங் பல்கலைக்கழகம், தென்கொரியா
