புதுடில்லி, ஆக.18 ‘தற்போ துள்ள மக்களவை தொகுதிகள் அடிப்படையிலேயே மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துங்கள்’ என்று பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிர்இடஒதுக்கீடு அமலாக்க மசோதாவுக்கு எதிர்க் கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் என்று சுதந்திர நாள் உரையில் பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், அவருக்கு காங்கிரஸ் இவ்வாறு பதிலளித் துள்ளது.
டில்லி செங்கோட்டையில் 15.8.2026 அன்று சுதந்திர நாள் உரையாற்றிய பிரதமா், ‘தேசியக் கொடியின் நிழலில் நின்றபடி எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். மக்களவை, பேரவைகளில் நமது தாய்மார்கள், சகோதரிகளுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கி கவுரவிக்க நாம் ஒன்றிணைவோம். அப்போதுதான், அவா்கள் நாட்டின் கொள்கைகளில் சிறப்பாக பங்களிக்க முடியும். இது காலத்தின் கட்டாயம்’ என்றார்.
அவரது இந்தக் கருத்துகள் தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் 16.8.2026 அன்று பிடிஅய் செய்தியாளரிடம் கூறியதாவது: மகளிர்இடஒதுக்கீடு கடந்து வந்த பாதையை நாம் புரிந்து கொள்வது முக்கியம். உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 73, 74-ஆவது திருத்த மசோதாக்கள் கடந்த 1993-இல் நிறைவேற்றப்பட்டன. இந்த சட்டப் பிரிவுகளுக்கு அடித்தளமிட்டு, கருவியாக செயல்பட்டவா் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி.
கடந்த 2023-இல் மக்களவை, பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென காங்கிரஸ் அப்போதே வலியுறுத்தியது. தற்போதுள்ள மக்களவை பலத்தின் (543) அடிப்படையில் மகளிருக்கான இடஒதுக்கீட்டை (182) அமலாக்க வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன.
அதேநேரம், கடந்த ஏப்ரலில் திடீரென நாடாளுமன்றத்தில் மகளிர்இடஒதுக்கீடு விவகாரம் உள்நோக்கத்துடன் எழுப்பப்பட்டு, 2023-ஆம் ஆண்டின் சட்டம் தொடா்பான அறிவிக்கையும் வெளியிடப்பட்டது. ஒன்றிய அரசை பொருத்தவரை, மகளிர் இடஒதுக்கீட்டை தொகுதி மறுசீரமைப்புடன் இணைக்க வேண்டும் என்பது மட்டுமே ஒரே நோக்கம். இதற்கான மசோதாவை நிறைவேற்ற அவா்களுக்கு மூன்றில் இருபங்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கவில்லை. அந்த பெரும்பான்மை ஒருபோதும் கிடைக்காது.
எனவே, செங்கோட்டையில் இருந்து எதிர்க்கட்சிகளுக்கு ‘உபதேசம்’ செய்து, நாடகம் ஆடுவதற்கு பதிலாக தற்போதுள்ள தொகுதிகளின் அடிப்படையில் மகளிர் இடஒதுக்கீட்டை பிரதமா் மோடி அமல் படுத்த வேண்டும் என்றார்ஜெய்ராம் ரமேஷ்.
