மனித வாழ்க்கையின் மிகச்சிறப்பான ஒன்று இல்லறம். அந்த இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய மிக முக்கியத் தேவைகளாக இருப்பது ஒருவருக்கு ஒருவர் அன்பு பாராட்டுவதும், மதிப்பளிப்பதும் ஆகும்.
அதோடு கூட திறந்த மனதுடன் கூடிய உரையாடல் பண்பும் அவசியம். நேசித்தால் மட்டுமே போதுமா? இல்லை. நம்பிக்கையும் நேர்மையும் இருவரிடமும் இருக்க வேண்டும்.
அதேபோல இருவரிடமும் நல்ல புரிதலும் விட்டுக் கொடுக்கும் தன்மையும் இருந்தால் இல்வாழ்க்கை சிறக்கும்.
இவை அனைத்திற்கும் மேலாக உடல் ரீதியான நெருக்கமும் மன ரீதியான நெருக்கமும் மிக மிக அவசியமாகிறது.
இல்வாழ்க்கை சிறக்க ‘நான்’ என்ற எண்ணம் மறைந்து ‘நாம்’ என்ற உணர்வும் அவசியமான ஒன்றாகும். மேற்கூறிய விசயங்களில் எல்லாமே முக்கியத்துவம் வாய்ந்தவை என்றாலும், புரிதலும் உடல் ரீதியான நெருக்கமும் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன.
இதில் ஏதாவது குறை ஏற்பட்டால், அவர்களது இல்வாழ்க்கை கசப்பை நோக்கி நகரக்கூடிய சூழ்நிலை உருவாகும். இந்த இரண்டையும் வெகு சீராக வைத்துக்கொள்ள வேண்டியது இல்வாழ்க்கையின் மிகச்சிறந்த கடமையாகும்.
நன்றாகச் சிறப்பாகச் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கை தடுமாறுவதற்கும், இணையரிடையே புரிதல் குறைவதற்கும் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மனதில் உள்ள ஆசைகள், கவலைகள், எதிர்பார்ப்புகள் அல்லது ஏமாற்றங்கள் பற்றி வெளிப்படையாகப் பேசாமல் தாங்களாகவே அனுமானித்துக்கொள்வது முதல் காரணமாகிறது.
பணிச்சுமை, அதிகமான செல்பேசிப் பயன்பாடு, சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவழிப்பது போன்றவற்றால் ஒருவருக்கொருவர் நேரம் செலவிடாமல் இருப்பதும், “நான் சொல்வதுதான் சரி” என்ற தன்முனைப்பு (ஈகோ), இணையரின் நிலையிலிருந்து யோசிக்கத் தவறுவது, சுயநலமாக இருப்பது, விட்டுக் கொடுக்கும் தன்மை குறைவாக இருப்பதும் புரிதலைக் குறைக்கின்றன.
மேலும், இருவருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் வரும்போது பெற்றோர் மற்றும் உறவினர்களின் தலையீட்டை அனுமதிப்பதும் தவறாகும். இணையரை அவரின் இயல்போடு ஏற்றுக்கொள்ளாமல், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் மற்ற இணையர்கள் பகிரும் மகிழ்ச்சியான ஒளிப்படங்களைப் பார்த்து, அவற்றைச் சொந்த வாழ்க்கையோடு ஒப்பிட்டு ஏமாற்றம் அடைவதும், அதை எரிச்சலாகவும் கோபமாகவும் இணையரிடம் காட்டுவதும் பெரிய விரிசலை உண்டாக்கும்.
பிறரைப் போல நாமும் செலவு செய்ய வேண்டும் என்ற பேராசையால் ஆடம்பரச் செலவுகள் செய்ய நிர்பந்திப்பது, கட்டுப்பாடற்ற செலவுகளால் எதிர்காலம் பற்றிய பயத்தை ஏற்படுத்துவது, இருவரது வளர்ப்புச் சூழல் வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ள மறுப்பது போன்றவை மனக்கசப்பைத் தரும்.
வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ளாமல் ஒருவரே செய்வதால் ஏற்படும் மனச்சோர்வும், இணையர் செய்யும் சின்னச் சின்ன நன்மைகளையும் உதவிகளையும் பாராட்டாமல் விட்டு விலகுவதும் உறவை முறிக்கும் நிலைக்குக் கொண்டுசெல்லும்.
மிக அழகாகச் சென்று கொண்டிருக்கும் குடும்ப உறவு பிளவுபடுவதற்கும் பல காரணங்கள் உள்ளன.
பணி நெருக்கடி, பொருளாதாரக் கவலை ஆகியவற்றால் ஏற்படும் மனச்சோர்வு இல்லற உறவில் நாட்டத்தைக் குறைக்கிறது. உடல்ரீதியான பிரச்சினைகள், ஹார்மோன் குறைபாடுகள், தூக்கமின்மை, உடற்பயிற்சியின்மை, முறையற்ற உணவுப் பழக்கம், உடலுறுப்பு சார்ந்த தொற்றுகளை நேரத்தோடு கவனிக்காமல் விடுவது ஆகியவை உடலில் சோர்வை ஏற்படுத்தி ஆர்வம் குறையக் காரணமாகின்றன.
ஆரம்பகாலத்தில் இருந்த ஈர்ப்பு குறைவது, இருவரும் சுய பராமரிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பது, படுக்கையறைக்குள் நுழையும் செல்பேசி, தொலைக்காட்சி போன்ற தொழில்நுட்ப ஆதிக்கங்கள் (Technoference) உரையாடலைத் தடுத்து, இடைவெளியை அதிகமாக்குகின்றன. மேலும், இணையத்தில் தேவையற்ற பாலியல் காட்சிப் பதிவுகளைப் பார்த்து நேரத்தைக் கழிப்பதால் நிஜ வாழ்க்கையில் துணை மீதான ஈர்ப்பு குறைவதோடு, சாத்தியமில்லாத எதிர்பார்ப்புகள் உருவாகி ஏமாற்றம் தரும்.
மது, புகைப்பிடித்தல், போதைப் பழக்கங்களுக்கு அடிமையாவதாலும் இல்லறத்தில் விரிசல் ஏற்படுகிறது.
துணை தன் ஆரோக்கியத்திலோ, உடலையோ பராமரிக்காமல் அலட்சியப்படுத்துவதாலோ அல்லது தொடர்ச்சியாகத் இல்லற இன்பத்தை மறுப்பதாலோ, மற்றொருவருக்கு வெளியில் வேறு ஒருவர் மீது ஈர்ப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகின்றன.
உணவு, தூக்கம் போலத் உடலுறவும், அன்பான தொடுதலும் அடிப்படைத் தேவைகள். துணை அதை மறுக்கும்போது, “நாம் ஈர்ப்பு இல்லாதவர்களாக ஆகிவிட்டோமா?” என்ற தாழ்வு மனப்பான்மை வரும். அந்த நேரத்தில் வெளியில் யாராவது ஒருவரிடமிருந்து பாராட்டு கிடைக்கும்போது, மனது இயல்பாக அவர்களிடம் சாயத் தொடங்கும்.
ஈர்ப்பு எழுவது இயற்கை. ஆனால், அதைத் தொடர்வதும் தொடர்பில் இருப்பதும் தனிப்பட்ட ஒருவரின் குணநலன் மற்றும் ஒழுக்கம் சார்ந்தது.
சிலர் இணையரிடம் பலமுறை பேசியும் மாற்றமில்லாதபோது ஆசைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள்; சிலர் இணையரைச் சிறந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்று உடல் மற்றும் மனநலனைச் சரி செய்வார்கள். இணையருக்கு ஆரோக்கியக் குறைபாடு இருந்தால், “நிலைமை நீடித்தால் நம் உறவு பாதிக்கப்படும்” என்பதைப் புரியவைத்து, நல்ல மனநல மற்றும் மருத்துவ ஆலோசனைக்கு அழைத்துச் செல்வதே ஆரோக்கியமான தீர்வு.
குறிப்பாக 40+ வயதில் இல்லறம் என்பது வெறும் உடலுறவு மட்டுமே இல்லை; அது ஒருவருக்கொருவர் அன்பையும் புரிதலையும் காட்டுவதாகும். ஆணின் மன அழுத்தத்தைப் பெண்ணும், பெண்களின் மாதவிடாய் நின்றுபோகும் (Menopause) காலப் பிரச்சினைகளை ஆணும் புரிந்து கொள்ள வேண்டும்.
உடல் தேவையைத் தாண்டி, அன்பான தொடுதல், கைகளைப் பிடித்துக் கொண்டு நடப்பது, அடிக்கடி கட்டியணைப்பது, ஆதரவாய்த் தோளில் சாய்ந்து கொள்வது போன்ற சின்னச் சின்ன வெளிப்பாடுகள் உறவில் அதிக பாதுகாப்பையும் அன்பையும் தரும்.
உடல் குறைபாடு தன்னிடம் உள்ளது என்று தெரிந்ததும், தன் துணை மீது தேவையற்ற சந்தேகம் கிளப்புவது ஆபத்தான மனித உளவியல் கோளாறாகும். “என்னால் என் துணையைத் திருப்திப்படுத்த முடியவில்லையே, அதனால் அவர் என்னை விட்டு விலகி விடுவாரோ” என்ற தீவிரமான அச்சமே சந்தேகத்தின் முதல் விதையாகிறது. தன் பலவீனத்தை மருத்துவரிடம் சென்று சரி செய்யாமல், “என் துணைதான் நம்பிக்கையற்றவர்” என்று பழியைத் தூக்கிப் போடுவது உறவை முற்றிலும் அழித்துவிடும்.
இந்தக் குறைபாட்டை விட இந்தத் தேவையில்லாத சந்தேகமே மணமுறிவுக்கு (Divorce) முதன்மைச் காரணமாக அமைகிறது.
எனவே, குறைபாடுள்ள ஆண் அல்லது பெண் தன் குறைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். அதேபோல், இணையின் இயலாமையை துணை நன்கு புரிந்து கொண்டு, “உடல் உறவு கொள்ள முடியாவிட்டாலும் உன் மீதான என் அன்பு குறையாது” என்ற நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். சிறு மனக்கசப்புகளை வளர விடாமல் உடனுக்குடன் பேசித் தீர்த்துக் கொண்டால் மட்டுமே இல்லறம் சிறக்கும்.
