உஜ்ஜைனி, ஆக.17– கோயிலுக்குச் சென்றுவிட்டு வெளியே வரும்போது, ஆயிரக்கணக்கான செருப்புகளுக்கு நடுவே தங்களது செருப்பைத் தேடிக் கண்டுபிடிப்பது என்பது பலருக்கும் பெரும் சவாலான விஷயமாகும். இந்தப் பிரச்சினைக்கு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ‘சாட்ஜிபிடி’ மூலம் ஓர் இளைஞர் தீர்வு கண்டுபிடித்து அசத்தி யுள்ளார்.
கோவா மாநிலத்தைச் சேர்ந்த இளை ஞர் சுபாங் போர்க்கர். இவர் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள மகாகாலேஸ்வரர் கோயிலுக்கு வழிபாடு செய்யச் சென்றிருந்தார். வழிபாடு முடிந்து வெளியே வந்தபோது, கோயில் வாசலில் உள்ள செருப்பு வைக்கும் அடுக்கில் கூட்ட நெரிசலால் அவரது ‘க்ளாக்ஸ்’ வகை செருப்பு எங்குள்ளது என தெரியாமல் திணறினார். சைபர் பாதுகாப்பு நிபுணரான சுபாங், செருப்பைக் கண்டுபிடிக்க தனது கைத் தொலைபேசி மூலம் வினோத முயற்சி ஒன்றை மேற்கொண்டார்.
உடனடியாக தனது கைத் தொலை பேசியில் ‘சாட்ஜிபிடி’ செயலியைத் திறந்த அவர், தனது செருப்பு எப்படி இருக்கும் என்ற பழைய ஒளிப்படத்தையும், அங்கு வரிசையாகக் கிடந்த நூற்றுக்கணக்கான செருப்புகளையும் ஒளிப்படம் எடுத்துச் சாட்ஜிபிடியில் பதிவேற்றினார். மேலும், தான் உஜ்ஜைன் மகாகால்கோயிலில் இருப்பதாகவும், இந்தக் கூட்டத்தில் தனது செருப்பைக் கண்டுபிடித்துத் தருமாறும் அந்த செயற்கை நுண்ணறிவு சாட்ஜிபிடியிடம் உதவி கோரினார். இதையடுத்து, செருப்பு அடுக்கின் வெவ்வேறு பகுதிகளைக் சுபாங் ஒளிப்படம் எடுத்து அனுப்பியதும், சாட்ஜிபிடி தொழில்நுட்பம் அந்தப் படங்களை மிக தீவிரமாக ஆய்வு செய்தது.
இறுதியில், ஒரு குறிப்பிட்ட வரிசையில் இருந்த செருப்பை அடையாளம் காட்டி, அதுதான் சுபாங்கின் செருப்பு என்பதைத் துல்லியமாகச் சுட்டிக்காட்டியது. சாட்ஜிபிடி காட்டிய இடத்திற்குச் சென்ற சுபாங், தனது செருப்பைப் பத்திரமாக மீட்டார். ‘‘தொலைந்த எனது செருப்பைக் கண்டுபிடிக்க சாட்ஜி பிடியைப் பயன்படுத்தினேன்” என்ற தலைப்பில், இந்த சுவாரசியமான ஏஅய் பரிசோதனை காட்சிப்பதிவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கூட்ட நெரிசல் மிகுந்த கோயில் வாசலில் செருப்பைக் கண்டுபிடிக்கக் கூட கடவுள் பயன்படமாட்டார் என்பதை உணர்ந்து, செயற்கைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார் சுபாங்.
கொஞ்சம் பகுத்தறிவைப் பயன்படுத்தி யிருந்தால், இதற்குக் கூட பயனில்லாத கோயிலுக்கு ஏன் செல்லவேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்குமே!
