‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவின் 359 ஆவது நிகழ்வில் (காணொலி) ‘‘மலேசியா சிங்கப்பூரில் பெரியார்’’ புத்தக ஆய்வுரை – முனைவர் சுபாஷினி

சிறப்பு புத்தக சலுகைகள்

ஈப்போவில் நடைபெற்ற மாநாட்டில் ‘‘மதத்தின் பெயரால் ஏற்படும் கெடுதல்கள்’’ என்ற தலைப்பில் இரண்டு மணிநேரம் உரையாற்றினார் தந்தை பெரியார்!
மாநாடு நடத்துதல், தீர்மானம் நிறைவேற்றுதலைத் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, மலேசியாவிலும் அன்றே செய்திருக்கிறார்!

சிறப்புக் கட்டுரை

Contents
ஈப்போவில் நடைபெற்ற மாநாட்டில் ‘‘மதத்தின் பெயரால் ஏற்படும் கெடுதல்கள்’’ என்ற தலைப்பில் இரண்டு மணிநேரம் உரையாற்றினார் தந்தை பெரியார்! மாநாடு நடத்துதல், தீர்மானம் நிறைவேற்றுதலைத் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, மலேசியாவிலும் அன்றே செய்திருக்கிறார்!நாகப்பட்டினத்திலிருந்து ரஜுலா கப்பல்மூலம் பயணம்!ரஜுலா கப்பலில் பயணம் செல்வதற்கு, 279 ரூபாய் 30 சென்ட்பெரியாரோடு பயணம் செய்தவர்கள்!‘நமது மலாய் நாட்டு விஜயம்!’1972 ஆம் ஆண்டு வரை ரஜுலா கப்பலின் சேவை இருந்தது!பெரியாருக்கு, பினாங்கில் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தார்கள்!‘‘இந்தியர் நிலையும் பிற நாட்டார் நிலையும்!’’‘‘தமிழர் சீர்திருத்த மாநாடு!’’ ‘‘மதத்தின் பெயரால் ஏற்படும் கெடுதல்கள்’’‘‘நாடார்களின் முன்னேற்றம்!’’ஈப்போவில் உள்ள வெந்நீர் ஊற்று!

சிங்கப்பூர், ஆக.17   தந்தை பெரியார் அவர்கள், 1929, டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி தமிழ்நாட்டிலிருந்து மலாயாவுக்குப் புறப்படுகிறார். மலாயாவுக்குச் சென்ற வுடனேயே பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, ஈப்போவில் 22 ஆம் தேதி மாலை நான்கு மணிக்கு நடைபெற்ற மாநாட்டில் இரண்டு மணி நேர உரையை  பெரியார் அவர்கள், ‘‘மதத்தின் பெயரால் ஏற்படும் கெடுதல்கள்’’ என்ற தலைப்பில் வழங்குகிறார். அந்த மாநாட்டில் எட்டு தீர்மானங்கள் வாசிக்கப்படுகின்றன. ஆக, மாநாடு நடத்துதல், அதை தமிழ்நாட்டில் மட்டும் அவர் செய்யவில்லை. மலேசியாவுக்கு வந்தும்கூட மாநாடு நடத்துதல்; பிறகு அங்கே தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார் என்றார் முனைவர் சுபாஷினி அவர்கள்.

கடந்த 18.7.2026 அன்று சிங்கப்பூரில்  ‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவினரின் 359 ஆவது நிகழ்வாக ‘‘மலேசியா சிங்கப்பூரில் பெரியார்’’ புத்தகத்தின் ஆய்வுரையினை ஜெர்மனியிலிருந்து காணொலிமூலம், முனைவர் சுபாஷினி நிகழ்த்தினார்.

அவ்வாய்வுரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

நாகப்பட்டினத்திலிருந்து
ரஜுலா கப்பல்மூலம் பயணம்!

நாகப்பட்டினத்திலிருந்து இருந்து அவர் புறப்படும் பொழுது, இந்தக் கப்பலில் தான் போகிறார். ரஜுலா கப்பல். இந்த ரஜுலா கப்பல் என்பது ஒரு பயணத்துக்கான கப்பலாக இருந்தது அந்தக் காலகட்டத்தில். 1926 இல் தான் இந்தக் கப்பலை கட்டினார்கள். இந்தக் கப்பலில் ஏறக்குறைய லட்சக்கணக்கான தமிழ் மக்கள், மெட்ராசில் இருந்து, நாகப்பட்டினத்தில் இருந்து மலாயாவுக்குப் போயிருக்கிறார்கள். மலாயாவில் என்னென்ன துறை முகம் இருக்கிறது என்று  நாம் பார்த்தோம் என்றால், பினாங்கு, பிறகு அங்கிருந்து போர்ட்லேன் போவார்கள். பிறகு அங்கிருந்து கிள்ளானிலிருந்து சிங்கப்பூருக்குப் போவார்கள்.. பிறகு சிங்கப்பூரில் இருந்து திரும்பவும் கிள்ளான் வந்து, பிறகு பினாங்கு வந்து, பிறகு நாகப்பட்டினம் வந்து, மெட்ராசுக்குச் செல்வார்கள்.

ஆக, இந்த மாதிரி ஒரு பயணம் என்பது தொடர்ச்சியாக இருந்தது. இப்பொழுது நாம்  படத்தில் பார்க்கின்ற ரஜுலா கப்பல் –  நீங்கள் கற்பனை செய்துகொள்ளலாம். பெரியார் அவர்கள் சென்ற பொழுதும், இந்தக் கப்பலில், இந்த மாதிரிதான் அவர் பயணம் செய்திருந்தார். இது கப்பலில் இருந்து எடுத்த ஒளிப்படம்தான்; கப்பலுக்குச் செல்கின்ற மக்களைப் பற்றிய ஒரு ஒளிப்படம்.

ரஜுலா கப்பலில் பயணம் செல்வதற்கு,
279 ரூபாய் 30 சென்ட்

டிக்கெட் விலைகளையெல்லாம் பார்க்கலாம். ரெக்கார்ட்சைப் பார்க்கும் பொழுது அந்தக் கால கட்டத்தில், ரஜுலா கப்பலில் பயணம் செல்வதற்கு, 279 ரூபாய் 30 சென்ட். இதுதான் ஒருவித டயட் சாப்பாட்டோடு இருக்கிற கட்டணம். சாப்பாடு இல்லாமல் கட்டணம் 237 ரூபாய் 30 சென்ட்.  அது எத்தனை  பவுண்ட்ஸ் என்றால், 13 பவுண்ட்ஸ் அல்லது 11 பவுண்ட்ஸ். அட்டவணையின் கீழே பாருங்கள். ஒரு பவுண்ட்டுக்கு 21 ரூபாய். அந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்து பவுண்ட்  ஒரு பவுண்ட் 21 ரூபாய். ஆனால், இன்றைக்கு 123 ரூபாய்.

சிறப்புக் கட்டுரை

சிறப்புக் கட்டுரை

பெரியாரோடு பயணம் செய்தவர்கள்!

இந்தப் பயணத்தில் யார் யாரெல்லாம் பெரியாரோடு போனார்கள் என்றால், ‘திராவிடன்’ பத்திரிகையினுடைய ஆசிரியர் ஜே.எஸ்.கண்ணப்பன், பெரியாருடைய வாழ்விணையர் நாகம்மாள், எஸ்.இராமநாதன், பூவாலூர் பொன்னம்பலனார், மாயவரம் சி.நடராஜன், சாமி.சிதம்பரனார் ஆகியோர் பயணம் செய்தார்கள்.

நாகையில், பிரபல போட்டோகிராபர், ஜி.வி.நாயுடு அவர்கள் போட்டோ எடுக்கிறார். அந்தக் காலத்தில் அவர் மிக முக்கியமான ஒரு போட்டோகிராபராக இருந்திருக்கிறார்.  அதனால், அவர் பெயரைப் பதிந்தி ருக்கிறார்கள்.

‘நமது மலாய் நாட்டு விஜயம்!’

கப்பல், நாகப்பட்டினத்தில் இருந்து  15 ஆம் தேதி காலை 9.45 மணிக்குப் புறப்படுகிறது.  அவர்கள் பினாங்கு தீவுக்கு வந்து சேர்கின்றார்கள். பினாங்குக்கு வருவதைப் பற்றி, பெரியார் அவர்கள் 1929, டிசம்பர் மாதம், தனது ‘குடிஅரசு’ பத்திரிகையில் ஒரு கட்டுரை  எழுதுகிறார்.

‘நமது மலாய் நாட்டு விஜயம்’ என்ற தலைப்பில்,  ஏன் நாம் செல்கிறோம்? என்று, தெளிவாகக் கருத்தைச் சொல்கிறார். நான் எதற்காக இந்தக் கால கட்டத்தில் பயணம் செல்கிறேன்? நான் பயணம் செய்வதற்கான காரணம் என்ன?  என்று அவர் ஒரு விளக்கம் கொடுக்கின்றார்.  தமிழ்நாட்டில் இருக்கின்ற வாசகர்களுக்கும் அந்த விஷயம் தெரிய வேண்டும் இல்லையா?

பினாங்கு துறைமுகம் வந்துவிடுகின்றார்கள். பினாங்கு என்று சொல்லும்போது மலேசியாதான் நமக்கு ஞாபகம் இருக்கும்.  பினாங்கு என்று பார்த்தோம் என்றால், இந்தப் பகுதி  பினாங்கு  தீவுப் பகுதி. இந்தப் பகுதி பினாங்கினுடைய நிலப்பகுதி. ஆக, இது இரண்டும் சேர்ந்ததுதான் பினாங்கு ஆகும். அதாவது  மலேசியாவின் ஒரு பகுதி பினாங்கினுடைய நிலப்பகுதியும், இந்தப் பினாங்கு தீவோடு இணைந்து இருக்கும். இந்த பச்சை நிறத்தில் நான் குறிப்பிட்டிருப்பது துறைமுகப் பகுதி. ஆக, இந்தத் துறைமுகப் பகுதிக்குத் தான் கப்பலில் வந்து இறங்குகிறார்கள்.

சிறப்புக் கட்டுரை

சிறப்புக் கட்டுரை

1972 ஆம் ஆண்டு வரை
ரஜுலா கப்பலின் சேவை இருந்தது!

பினாங்கு 1920–1930 அந்தக் காலகட்டத்தில் எப்படி இருந்தது என்றால், அந்த துறைமுகப் பகுதியை நாம் பார்க்கிறோம். ரஜுலா கப்பல் கீழே இருக்கிறது. இந்தக் கப்பலில் தான் அவர் பயணம் செய்து போனார். ஒரே ஒரு ரஜுலா கப்பல் தான். அந்தக் கப்பல்  ஏறக்குறைய 1972 வரைக்கும் ஆபரேஷன் இருந்தது. இடைப்பட்ட காலகட்டத்தில ரஜுலா சேவையில் இல்லை. ஆனாலும், பிறகு மறுபடியும் அது உடைக்கிற வரைக்கும் அது பயணம் செய்தது.

பெரியாருக்கு, பினாங்கில் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தார்கள்!

ஆனால், அதிகமான பயணம்  1926 இல் இருந்து தொடங்கி 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் வரை இருந்தது என்று சொல்லலாம். ஆக, இது பினாங்கு உடைய அந்தக் காலகட்டத்து காட்சி. பெரியார் அவர்கள் பினாங்கு வந்த பிறகு, அவருக்கு எப்படிப்பட்ட வரவேற்பு இருந்தது? என்று நாம் பார்த்தோம் என்றால், அவரே எதிர்பார்த்திருப்பாரா என்று எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், அந்த சமயத்தில் மலேசியாவிற்கு அவர் வருவதற்கு மிகப்பெரிய எதிர்ப்பும் இருந்தது. அந்த எதிர்ப்பைப் பற்றியும் அவர் எழுதி இருக்கின்றார். அதற்கான தடைகள் எல்லாம் வந்து நிறைய பேர் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப்பற்றியும் அவர் சொல்கிறார். இப்படி இருக்கும் பொழுது, பினாங்கில் வந்து இறங்கும் பொழுது, அவருக்கு மிகப்பெரிய ஒரு வரவேற்பு. பெரிய பெரிய மாலைகளைப் போட்டு வரவேற்கின்றார்கள். பினாங்குக்கு வந்தவுடனேயே அவருக்கு நிறைய நிகழ்ச்சிகள். அதாவது, பினாங்கு இந்தியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. அந்தக் காலகட்டத்தில், பினாங்கு இந்தியர் சங்கம்  சிறிய அளவில், அந்த அமைப்பிற்கு ஒரு கட்டடம் இல்லாமல் இருந்தது. பிறகு, என்.கே.மேனன் அவர்கள், சிறந்த ஒரு வரவேற்பைக் கொடுக்கிறார். பிறகு மருத்துவர் சங்க வாழ்த்து; வாலிப சங்கத்தாருடைய வாழ்த்துகள் – அவற்றையெல்லாம் படிக்கிறார்கள்.

பிறகு, நமச்சிவாயப் பள்ளிக்குச் சென்று  பார்வை யிடுகின்றார்கள். அதாவது, வந்த உடனே ஓய்வு எடுத்தார்கள்; இரண்டு நாள் ஓய்வில் இருந்தார்கள்;  எவ்வாறு என்றெல்லாம் நம்மால் பார்க்க முடியவில்லை. பினாங்கு வந்த உடனே, அவருடைய சொற்பொழிவுகள் எல்லாம், அதே நாளில் 20 ஆம் தேதியே பினாங்கிலிருந்து நிகழ்ச்சி ஆரம்பிக்கின்றது.

‘‘இந்தியர் நிலையும் பிற நாட்டார் நிலையும்!’’

அதாவது பினாங்கு தீவிலிருந்து,  மலேசிய நிலப் பகுதிக்குச் செல்வது. மோட்டார் படகில் சென்றார். அங்கு சென்ற பிறகு, அந்தப் பள்ளியை பார்வை யிடுதல், பிறகு  கோலாப்பராய் பகுதியில், ஒரு கோப்பரா மண்டபத்தில், ‘‘இந்தியர் நிலையும் பிற நாட்டார் நிலையும்’’ என்ற தலைப்பில் பெரியார் அவர்கள் ஓர் உரை வழங்குகிறார். பிறகு, அங்கிருந்து தைப்பிங்க்குப் புறப்படுறார். அதாவது 20 ஆம் தேதி பினாங்கில் ஒரு நிகழ்ச்சி. அதற்கு பிறகு 21 ஆம் தேதி ஈபோவுக்கு போகிறார்.

சிறப்புக் கட்டுரை

‘‘தமிழர் சீர்திருத்த மாநாடு!’’

அங்கு ‘‘தமிழர் சீர்திருத்த மாநாடு’’ மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது. அங்கு சென்று, சிற்றுண்டி  எடுத்த பிறகு, சிறிய சொற்பொழிவு ஆற்றுகிறார். பிறகு, கோலபங்சார் பகுதியில் உள்ள  ராஜகோபால் நாயுடு வீட்டில் அவருக்கு விருந்து கொடுக்கப்படுகிறது. அங்கிருந்து ஈப்போவுக்கு ரயில் பிரயாணம் போகிறார். பிறகு பெரியாரை ரயில் நிலையத்தில் நிறைய பேர் வரவேற்கிறார்கள். எப்பொழுதுமே வரவேற்கும் பொழுது நிறைய கூட்டம் இருந்திருக்கிறது. அதைப் பார்க்கும்பொழுது ஆச்சரியமாக இருக்கும். ஏனென்றால், அந்தக் காலகட்டத்திலேயே ஒவ்வொரு சந்திப்புக்குமே  ஆயிரம், 2000, 5000 பேர் என்று கூடியிருக்கின்றார்கள்.

 ‘‘மதத்தின் பெயரால் ஏற்படும் கெடுதல்கள்’’

பிறகு, பினாங்கில் இரண்டு, மூன்று இடங்களில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, ஈப்போவுக்குச் சென்று,  22 ஆம் தேதி மாலை நான்கு மணிக்கு மாநாடு தொடங்குகின்றது. அந்த மாநாட்டில் இரண்டு மணி நேர உரையை  பெரியார் அவர்கள் வழங்குகிறார். ‘‘மதத்தின் பெயரால் ஏற்படும் கெடுதல்கள்’’ என்ற  தலைப்பில் வழங்குகிறார். அந்த மாநாட்டில் எட்டு தீர்மானங்கள் வாசிக்கப்படுகின்றன.

ஆக, மாநாடு நடத்துதல், அதை தமிழ்நாட்டில் மட்டும் அவர் செய்யவில்லை. மலேசியாவுக்கு வந்தும்கூட  மாநாடு நடத்துதல்; பிறகு அங்கே தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார் என்பதைப் பார்க்கிறோம்.

சிறப்புக் கட்டுரை

‘‘நாடார்களின் முன்னேற்றம்!’’

பிறகு 23 ஆம் தேதி, அதே ஈப்போ நகரத்தில், நாடார்கள் சங்கத்தினுடைய அழைப்பை ஏற்று நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.  மலாக்கா பெருமாள் நாடார் – அவருடைய தலைமையில், ஈப்போவில்  ஒரு பெரிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிறகு, பெரியார் அந்த நிகழ்ச்சியிலும் ஒரு மணி நேர உரை வழங்குகிறார். ‘‘நாடார்களின் முன்னேற்றம்’’ என்ற தலைப்பில் உரையாற்றிவிட்டு, சுயமரியாதை இயக்கத்திற்கு அவர்களது ஆதரவு எப்படி இருக்கிறது? குறிப்பாக சவுந்தரபாண்டியனார் அவர்களைப்பற்றி நமக்ககெல்லாம் தெரியும். மிக முக்கியமான ஒருவர்.  அவருடைய உதவியால் இயக்கம் எப்படி வலிமை பெற்றது என்பதைப்பற்றி  அந்த நிகழ்ச்சியில் பேசுகிறார். பிறகு, மாலை 6 மணிக்கு சிலோன் அசோசியேஷன்.

சிலோன் என்றால், சிறீலங்கா என்று  அர்த்தம். இலங்கையில் இருந்து வந்த  நிறைய தமிழர்கள் இருக்கின்றார்கள். அவர்களுடைய அந்தக் கூட்டம் ஒன்று நடக்கின்றது. அந்தக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்கிறார்கள். அந்தக் கூட்டத்திலும் தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றுகின்றார்.

ஈப்போவில் உள்ள வெந்நீர் ஊற்று!

பிறகு, 24ஆம் தேதி அன்று,  காலையில், ஈப்போவில் இருக்கின்ற  வெந்நீர் ஊற்று, அதை தந்தை பெரியார் அவர்கள் பார்வையிடுகிறார். அந்த வெந்நீர் ஊற்றைப் பார்க்கும்போதே மிக அழகாக இருக்கும். ஹாட் ஸ்பிரிங் என்று சொல்லுவோம் இல்லையா? எரிமலை இருக்கும் அந்தப் பகுதியில்  நீர்  நல்ல சூடாக இருந்துகொண்டே இருக்கும். மலேசியாவில் பல இடங்களில் இந்த மாதிரியான வெந்நீர் ஊற்றுகள் நிறைய இருக்கின்றன. அந்தப் பகுதியில் உள்ள மக்கள் முட்டையை எடுத்துக்கொண்டு போய், அந்நீரில் வேக வைப்பார்கள்.  தந்தை பெரியார் அவர்கள் அங்கே சென்று, நீராடிவிட்டு வந்திருக்கின்றார்.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *