மின்சாரம்


உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வார் ‘தேவபூமி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஷ்ராவண் மாதத்தில் கங்கை நீரை எடுத்துச் செல்வதற்காகக் சுமார் 5 கோடி பக்தர்கள் வருகை தந்தனர். கடந்த 12ஆம் தேதி சிவராத்திரி வழிபாட்டுடன் யாத்திரை நிறைவுபெற்றது.
இந்நிலையில், ஹரித்வாரின் கங்கை நதிக்கரைகளிலும், தெருக்களிலும் பெருமளவில் பிளாஸ்டிக் பொருட்கள், பயன்படுத்தப்பட்ட உடைகள், சிறுநீர் கழித்த பாட்டில்கள் குப்பைகளாக சிதறிக் கிடக்கின்றன. குறிப்பாக, ஹரித்வாரின் மிக முக்கிய நதிக்கரையான ‘ஹர் கி பவுரி’ பகுதி பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கழிவுகளால் கடுமையாகச் சுகாதாரச் சீர்கேடு அடைந்துள்ளது.
கையுறை, முகக்கவசம் இன்றித் துப்புரவுப் பணியாளர்கள் இவற்றை அள்ளும் காணொலிகள் தற்போது வெளியாகி உள்ளூர் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. கங்கை நீர் சேகரிக்க நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்து வரும் பக்தர்கள், ‘புனித’ நதிக்கரையை இப்படிச் சீரழித்துச் செல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஹரித்வார் மாநகராட்சி ஆணையர் நந்தன் குமார் கூறுகையில், “சிவராத்திரி முடிவடைந்ததும், நதிக்கரைகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் சாலைகளைத் தூய்மைப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் விடிய விடிய ஈடுபட்டனர். இதுவரை 7,000 டன்னுக்கும் அதிகமான குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன” என்றார்.
ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் மட்டுமல்லாமல், கங்கையின் பிறப்பிடமான கங்கோத்ரிக்கும்
57,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சென்றுவந்துள்ளனர். பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்ட கங்கோத்ரியிலும் டன் கணக்கில் பிளாஸ்டிக் மற்றும் துணிக் கழிவுகள் வீசப்பட்டுள்ளன. இந்நிலையில், புனிதத் தலங்களின் தூய்மையையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வகையில் அரசு கடுமையான விதியை நடைமுறைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– “இந்து தமிழ் திசை”, 14.8.2026
– – – – –
கங்கை நீர் முரண்பாடுகள் பார்ப்பனர்களும், பார்ப்பனரல்லாத மக்களும்
ஆன்மீக நம்பிக்கை என்பதும், அதனை நடைமுறைப்படுத்தும் முறைகளும் மக்களின் சமூக நிலைக்கு ஏற்ப எவ்வாறு மாறுபடுகின்றன என்பதற்கு சிவனுக்குக் கங்கை நீரால் ‘அபிஷேகம்’ செய்யும் வழிபாட்டு முறையில், இருவேறு சமூகக் குழுக்களிடையே காணப்படும் முரண்பாடுகள் சான்றாக மாறியுள்ளன.
பல நாள் நடைப்பயணமும் கட்டுப்பாடுகளும்
பார்ப்பனர் அல்லாத பெரும்பான்மை மக்கள், கடுமையான விரத முறைகளைப் பின்பற்றுகின்றனர்.
மைல்கள் கணக்கில், பல நாள்கள் கால்நடை யாகவே சென்று கங்கை நீரைக் கலசங்களில் எடுத்து வருகின்றனர்.
இந்தத் வழிபாட்டு மாதத்தில், தங்கள் வீடுகளில் திருமணம், பூப்புனித நீராட்டு விழா உள்ளிட்ட எந்தவொரு சுப நிகழ்ச்சிகளையும் நடத்துவதில்லை.
தமிழ்நாட்டில் ஆடி மாதத்தில் நல்ல காரியங் களைத் தவிர்க்கும் வழக்கம் போல, இந்த ஆன்மீகக் காலத்திலும் தங்கள் சொந்த மகிழ்ச்சிகளையும், கொண்டாட்டங்களையும் தள்ளிவைத்து முழுமையான கட்டுப்பாட்டுடன் வாழ்கின்றனர்.
அதேவேளையில், இத்தகைய கடினமான விரதங்களோ அல்லது நீண்ட நடைப்பயணங்களோ இன்றி ஆன்மீகக் கடமைகளை நிறைவேற்றும் பார்ப்பனர்களின் முறை வேறுபட்டதாக உள்ளது.
பார்ப்பனர்கள், ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து, மந்திரங்களை ஓதுவதன் மூலம் அதனை ‘கங்கை நீராக’ மாற்றம் செய்வதாக நம்புகின்றனர்.
அந்த நீரைக் கொண்டு ஊரில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று குடும்பத்தோடு எளிதாக ‘அபிஷேகம்’ செய்து தங்கள் வழிபாட்டை முடிக்கின்றனர்.
இந்த ஆன்மீகச் சடங்கை முடித்த கையோடு, தங்கள் இல்லத்துத் திருமணங்கள் மற்றும் இதர ‘சுப’ நிகழ்ச்சிகளை எந்தவிதத் தடையும் கட்டுப்பாடும் இன்றித் தொடர்ந்து நடத்துகின்றனர்.
என்னே மூடத்தனம்!

– – – – –
பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்திற்காக இந்திய மக்களை அறியாமைக்குழியில் பல்லாயிரம் ஆண்டுகளாக ஆழ்த்தி வருகிறார்கள். புண்ணியம் என்று ஆசை காட்டியும் பாபம் என்று அச்சுறுத்தியும் மக்களை மடமையினின்றும் மீள வழி இல்லாமல் செய்து வருகிறார்கள். கல்வி, வேறு நாடுகளில் அறிவைப் பரப்பும் சாதனம்; ஆனால் இங்கு மூடநம்பிக்கைக்குத் துணை போகிறது. ரேடியோ, டி.வி. போன்றவை மக்களை மேலும் பகுத்தறிவுள்ளவர்களாக ஆக்க மேலை நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த விஞ்ஞான சாதனங்கள் நம் நாட்டில் மக்களை மேலும் மடையர்களாக்கவே பயன்படுத்தப்படுகின்றன.
பசுவை கோமாதா என்றும, மாட்டு மூத்திர வகையை பஞ்ச கவ்யம் என்றும, பெருச்சாளியை கணபதியின் வாகனம் என்றும், யானையை பிள்ளையாரின் அவதாரம் என்றும், புவியை அய்யப்பனின் வாகனம் என்றும, மயிலை முருகனின் வாகனம் என்றும், சேவலை அவனது வெற்றிக்கொடி என்றும், காகத்தை சனிபகவான வாகனம் என்றும் பலகாலம் திரும்பத் திரும்பச் சொல்லிச் சொல்லி கல்வி அறிவற்ற சூத்திர பஞ்சமர்களை அஞ்சி அஞ்சிச் சாகும்படி செய்து வருகிறார்கள் பார்ப்பனர்கள்.
இத்தகைய முழு மூடநம்பிக்கைகளில் ஒன்றுதான் கங்கை புனிதமான நதி என்று பார்ப்பனர்கள் புளுகுவதும்.
சாக்கடையெல்லாம் கங்கையில்
கங்கை என்றும் புனித ஆறு யாராலும் களங்கப் படுத்த முடியாதது; கங்கை நீர் எந்தக் கிருமியாலும் அசுத்தப்படுத்த முடியாது என்ற மூடநம்பிக்கை மக்களிடைய உள்ளது.
இது உற்பத்தியாகும் இடத்திலிருந்து கடலில் கலக்கும நிலை வரையில் 2,525 கி.மீ. தூரம் பாய்கிறது.
‘பாபம் போக்கும்’ காசி நகரத்தின் சாக்கடை நீர் முழுதும் கங்கையில் தான் நாள்தோறும் கலக்கிறது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் காசியில் மட்டும் 20 மில்லியன் காலன் சாக்கடை நீர் கங்கையில் கலக்கிறது. நாள்தோறும் 400 பிணங்கள் கங்கைக் கரையில் எரிக்கப்பட்டு, கங்கை நதியில் கரைக்கப்படுகின்றன. ஆண்டுதோறும், பயன்படுத்தப்பட முடியாத 9,000 கிழட்டுப் பசுக்கள் கங்கையில் வீசி எறியப்படுகின்றன. காசியில் 2 லட்சம் மக்கள் பட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலில் உண்டாகும் ரசாயனக் கழிவு நீர் முழுவதும் கங்கையில்தான் நாள்தோறும கலக்கிறது.
இப்படிச் சாக்கடை நீரும், ரசாயனக் கழிவு நீரும், செத்த மனிதர்களும், ஆடு மாடுகளும் மிதக்கும் ‘புனித’ கங்கை நீரைத்தான் செம்புகளில் அடைத்து, நாடு முழுதும் மக்கள் எடுத்துச் செல்கிறார்கள். நாள் ஒன்றுக்கு இந்தச் சாக்கடை கங்கையில் 70 ஆயிரம் பேர் மோட்சத்திற்குப் போவதற்காக நீராடுகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், காசிவாசிகளிடமிருந்து கலக்கப்பட்ட சாக்கடை நீரைத்தான் குடிக்கிறார்கள்.
இதன் விளைவாகத்தான் 1927, 1963, 1970 ஆகிய ஆண்டுகளில் காசியிலும் சுற்றுப்புறங்களிலும் மிகக் கொடுமையான தொற்று நோய்கள் வெடித்துப் பரவின.
கங்கோத்ரியிலேயே கலப்படம்
பாவம் போக்கும் காசியில்தான் கங்கை இந்தப் பாடுபடுகிறது என்று நினைக்காதீர்கள். அதன் உற்பத்தி இடமான கங்கோத்ரியில் இதைவிட அதிகமான அசிங்கம் கலக்கிறது. அங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் அனைவருக்கும் கக்கூசாகப் பயன்படுவது இந்தப் புனித கங்கைதான்!
இந்தச் சாக்கடைக் கங்கையின் யோக்யதையை இந்திய அரசின் இன்னொரு புள்ளி விவரமும் அம்பலப்படுத்துகிறது. இந்தியாவில் குழந்தைகள் மரணம் 1000க்கு 94 சதவீதமாகும். ஆனால் காசியையும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் குந்தை மரண விகிதம் 1000க்கு 133.94 ஆகும். இதற்குக் காரணம் ‘கங்கை மாதாவின்’ சாக்கடை மகிமைதன்.
காசியை அடுத்து, கங்கையை மேலும் சாக்கடை ஆக்குவது காஜியாபாத் நகரிலுள்ள பொதுத்துறை நிறுவனங்களாகும். இந்நகரிலுள்ள தொழிற்சாலைகளிலிருந்து கழிவுப் பொருள்களில் ‘ஓபியம்’ மிக உயர்ந்த அளவில் உள்ளது. இந்தப் பகுதியில் ஓடும் பங்கை நீரைத் தொடர்ந்து குடிக்கும் குரங்குகள் கூட போதைப் பழக்கத் திற்கு அடிமைப்பட்ட மனிதர்களைப் போல ஆகி விடுகின்றன என்றால் இந்த நீர் மனித உபயோகத்திற்கு லாயக்கானதா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
