என்ன கொடுமையடா இது? ஏழரை விழுக்காடு இட ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்கள் பெற்றவர்களில் 80 விழுக்காடு மாணவர்கள் இரண்டு முறைக்கு மேல் நீட் தேர்வு எழுதியவர்களாம்!

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக.17– அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் இடங்கள் பெற்றவர்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் 2, 3 மற்றும் 4-ஆவது முறையில் ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் ஆவார்கள்.

மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் அந்த படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் சேரும் எண்ணிக்கை சொற்ப அளவில் இருந்தது. அதாவது, ஒற்றை இலக்கத்திலேயே இருந்து வந்தது. எனவே அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவராகும் கனவு வீணாகி விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க முடிவு செய்து அது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அதன்படி, 2020-2021-ஆம் கல்வியாண்டு முதல் இந்த இடஒதுக்கீடு வந்தது. அதே ஆண்டில் 435 அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மருத்துவப் படிப்பில் காலடி எடுத்து வைத்தனர். அந்த வகையில் நடப்பாண்டில் 510 எம்.பி.பி.எஸ்., 104 பி.டி.எஸ். என மொத்தம் 614 இடங்களுக்கு அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசினர் பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஆர்வமுடன் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு இடங்களை தேர்வு செய்தனர். அவ்வாறு இடங்களை தேர்வு செய்த ஒவ்வொரு மாணவ-மாணவிகளின் பின்புலத்தில் பல சோகங்கள் நிறைந்திருக்கின்றன.

என்னதான் அரசு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கினாலும், நீட் தேர்வுக்காக ஏழைக் குடும்பங்கள் லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டியுள்ளது. அதோடு, இதற்காக ஆண்டுகளை விரையம் செய்ய வேண்டிய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுவதும் ஒவ்வொரு ஆண்டும் நீடிக்கத்தான் செய்கிறது. அப்படி நடப்பாண்டு வரை 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் இடங்களைப் பெற்றவர்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், 2, 3 மற்றும் 4-ஆவது முறையில் நீட் தேர்வை எழுதி தேர்ச்சி அடைந்தவர்களாக இருந்தனர். அதிலும் முதல் 10 இடங்களை பெற்றவர்களில் ஒருவர் 3-ஆவது முறையில் நீட் தேர்வை எழுதியும், மற்ற 9 பேர் 2 முறை நீட் தேர்வை எழுதியும்தான் மருத்துவப் படிப்பு கனவை நனவாக்கியுள்ளனர். இந்த நிலை 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மட்டுமின்றி, பொதுப் பிரிவிலும் இருக்கிறது. அந்த வகையில் நடப்பாண்டில் மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்காக விண்ணப்பித்தவர்களில் 23 ஆயிரத்து 319 பேர், 2, 3 மற்றும் 4-ஆவது முறை நீட் தேர்வை எழுதியவர்களாக இருக்கின்றனர்.

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பிற்கான முழுப் கட்டணத்தையும் அரசே ஏற்றுக்கொண்டு செலுத்திவிடுகிறது. இருப்பினும், நீட் தேர்வு பயிற்சிக்கு கடனை வாங்கியாவது தங்களுடைய பிள்ளைகளை படிக்க வைத்துவிடலாம் என ஏழை பெற்றோர் லட்சக்கணக்கில் செலவு செய்கிறார்கள். அதனை, தற்போது மருத்துவப் படிப்பிற்கான இடத்தை 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் உறுதி செய்துள்ள மாணவ-மாணவிகளின் ஆனந்தக் கண்ணீரும், மகிழ்ச்சியும் வெளிக் காட்டின. எனவே, அரசு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்குவதுபோல, நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளையும் பரவலாக நடத்த வேண்டும். குறிப்பாக, தமிழ்நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் அரசு, நீட் தேர்வில் இருந்து தீர்வு கிடைக்கும் வரையில் அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் ஆங்காங்கே இலவச அரசு நீட் பயிற்சி மய்யங்களைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *