மேகதாது, ஆக. 16- மேகதாதுவிற்கு கள ஆய்வுக்குச் சென்ற பி.பி.சி. தமிழ் கள ஆய்வுக்குக் குழுவினர் தெரிவித்துள்ள தகவல்கள் வருமாறு:
“கைப்பேசிகள் அலைவரிசை கிடைப்பதில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வானுயர்ந்து நிற்கும் மரங்களைத் தவிர எதுவுமில்லை, ஆர்ப்பரித்து ஓடும் நதியின் ஓசை மட்டும் ரீங்காரமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது’
மேகதாது என்கிற பள்ளத்தாக்கு காட்சி முனைக்கு நேரில் சென்றபோது நிலவிய சூழலை இப்படித்தான் விவரிக்க முடியும்.
காவிரி – இந்தப் பெயருக்கு தமிழ் நாட்டில் அறிமுகம் தேவையில்லை.
இந்தக் காவிரி நதியின் குறுக்கே மேகாதுவில் அணை கட்டும் திட்டத்தை கருநாடக அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. காவிரி நதி நீர் சிக்கலைத் தீர்க்க இந்த அணை அவசியம் என்று கருநாடக அரசு கூறி வருகிறது.
“மேகதாது திட்டம் கருநாடகாவைவிட தமிழ்நாட்டிற்குத் தான் அதிகம் உதவும்,” என கருநாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சமீபத்தில் பேசியிருந்தார்.
ஆனால் இந்தத் திட்டம் வந்தால் தங்களுக்கான காவிரி நீர் பங்கீட்டில் பாதிப்பு ஏற்படும் என்பது தமிழ்நாட்டின் குரலாக இருக்கிறது.
மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாட்டில் தீவிர எதிர்ப்பு நிலவும் சூழலில் கருநாடகாவிலும் அதற்கு எதிர்ப்பு இருப்பதை பார்க்க முடிகிறது.
இதில் பல சிக்கல்கள் உள்ளதாகச் சுட்டிக்காட்டும் கருநாடகாவில் உள்ள சூழலியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.“
காவிரி நதி நீர் பங்கீட்டை ஒட்டிய மேகதாது அணை தொடர்பான விவாதங்களை பிபிசி தமிழின் கட்டுரை இவ்வாறு பதிவு செய்கிறது.
