சென்னை, ஆக.16 இருசக்கர வாகனங்களில் செல்லும்போது காவல்துறையினரும் கட்டாயம் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிய வேண்டும் என்றும், இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மண்டல காவல்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சாலை விபத்துகளிலிருந்து தப்பிக்க கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்படுவதோடு, மீறுபவர்கள் மீது காவல்துறையினரால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், சட்டத்தை அமல்படுத்த வேண்டிய சில காவல்துறையினரே தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்வது தொடர்கதையாக இருந்தது.
இதனைப் பொதுமக்கள் சிலர் காட்சிப் பதிவு எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்ததால், காவல்துறைக்கு பெரும் அவப்பெயர் ஏற்பட்டு வந்தது. இதனைத் தவிர்க்கும் பொருட்டும், சாலை விபத்துகளைத் தடுக்கும் நடவடிக்கையாகவும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அனைவருக்கும் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்றால், அவர்களின் வாகனம் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும். பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தைப் திரும்பப் பெற வேண்டுமானால், சம்பந்தப்பட்ட காவலர் தரப்படுத்தப்பட்ட புதிய ‘அய்எஸ்அய்’ (ISI) முத்திரை கொண்ட தலைக்கவசத்தைச் வாங்கிச் சமர்ப்பித்தால் மட்டுமே வாகனம் ஒப்படைக்கப்படும். காலையில் பணிக்கு வரும் காவல்துறையினர் தலைக்கவசம் அணிந்து வருவதை உயர் அதிகாரிகள் தீவிரமாக உறுதி செய்ய வேண்டும். தலைக்கவசம் அணியாமல் வரும் காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அவர்களுக்கு அன்றைய நாள் ‘ஆப்சென்ட்’ போடப்படும். சாலையில் தலைக்கவசம் அணியாமல் பயணிக்கும் காவல்துறையினரைக் கண்டறிந்தால், சாதாரண பொதுமக்களைப் போலவே அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட வேண்டும். காவல்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
சுதந்திர நாள் விழாவில்
பள்ளி நுழைவுவாயில் கூரை இடிந்து விழுந்து சிறுவன் பலி ; இருவர் கவலைக்கிடம்!
சம்பல், ஆக.16 நாடே 78-ஆவது சுதந்திர நாளில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ள சோகச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம், அஸ்மோலி பகுதிக்குட்பட்ட மதலா கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் சுதந்திர நாள் விழா கொண்டாட்டங்கள் நடைபெறவிருந்தன. இதற்காகப் பள்ளிச் சிறுவர், சிறுமியர் காலை முதலே திரண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக, பள்ளியின் முதன்மை நுழைவு வாயிலின் மேல்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி ஒரு சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மேலும், பலத்த காயமடைந்த இரு குழந்தைகள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு எந்த அளவுக்குப் பலவீனமாக உள்ளது என்பதற்குச் சான்றாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது. பாழடைந்த நிலையிலிருந்த பள்ளி கட்டடத்தைச் சீரமைக்காமல் விட்டதே இந்த உயிரிழப்புக்குக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்துவது மட்டுமே சுதந்திரம் ஆகாது; கிராமப்புறக் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான கல்வியும், தரமான உள்கட்டமைப்பும் வழங்குவதே உண்மையான சுதந்திரம். அறிவுக் கோயிலாகக் கருதப்படும் பள்ளிகளிலேயே குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது, நமது நிர்வாக அமைப்பின் அலட்சியத்தையும், உடனடி உள்கட்டமைப்பு சீர்திருத்தத்தின் அவசியத்தையும் உணர்த்துகிறது. குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிராம சபைக் கூட்டத்திற்கு
கருப்புச் சட்டை அணிந்து வந்த பொது மக்கள்!
நீலகிரி, ஆக.16 நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் சுதந்திர நாளையொட்டி நடந்த கிராம சபை கூட்டத்தில், பல்வேறு சட்டங்கள் வாழ்வாதார பாதிக்கப்படுவதாக கூறி பொதுமக்கள் கருப்புச் சட்டை மற்றும் போர்டு அணிந்து வெளிநடப்பு செய்தனர்.
அப்போது த.வெ.க. நிர்வாகிகள் உட்பட பொதுமக்களும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இருப்பினும் அதிகாரிகள் மற்றும் த.வெ.க.வினர் முன்னிலையில் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. அரசின் சட்டங்களை கண்டித்து பொதுமக்கள் வெளிநடப்பு செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
