புதுடில்லி, ஆக.16 யுஜிசி நெட் உள்ளிட்ட முக்கியத் தேர்வுகளுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் இன்று (16.8.2026) வெளியாகும் என தேசிய தேர்வு முகமை (NTA) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதி பெறவும், முனைவர் பட்டப் படிப்புகளில் (Ph.D.) சேரவும், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை (JRF) பெறவும் தேசிய தேர்வு முகமையால் ‘நெட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் இத்தேர்வின் நடப்பாண்டுக்கான முதல் கட்டத் தேர்வு கடந்த ஜூன் 22 முதல் 30 ஆம் தேதி வரையிலும், மறுதேர்வு ஜூலை 6 ஆம் தேதியும் நடைபெற்று முடிந்தது.
தேர்வு முடிவடைந்து விடைக் குறிப்புக்காகத் தேர்வர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், யுஜிசி நெட் தேர்வுக்கான விடைக் குறிப்புகள் ஆகஸ்ட் 16 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற தேர்வுகளின் விடைக்குறிப்புகளும் வெளியீடு: யுஜிசி நெட் தேர்வுடன் சேர்த்து பின்வரும் தேர்வுகளுக் கான தற்காலிக விடைக்குறிப்புகளும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன: அறிவியல் பிரிவுகளுக்கான சிஎஸ்அய்ஆர் நெட் விவசாயம் மற்றும் விலங்கு அறிவியல் பிரிவுகளுக்கான அய்சிஏஆர் ஏஅய்இஇஏ (பிஜி) மற்றும் ஏஅய்சிஇ (பிஎச்டி) முறையீடு செய்ய வாய்ப்பு:தேர்வர்கள் தற்காலிக விடைக் குறிப்பைச் சரிபார்த்து, அதில் ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது திருத்தங்கள் இருந்தால், குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் இணையதளம் வாயிலாக முறையிடலாம். பெறப்படும் முறையீடுகள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, இறுதி விடைக்குறிப்பு மற்றும் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
