சென்னை, ஆக.16 இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா விண்ணப்ப நடைமுறைகளில் அமெரிக்க தூதரகம் முக்கிய புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி 17 வயது வரையிலான சிறுவர், சிறுமியர் அனைவரும் விசா நேர்காணலுக்குப் பெற்றோருடன் கட்டாயம் நேரில் வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய முறை: இதுவரை 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. பெற்றோர்கள் மட்டும் நேர்காணல் மய்யத்திற்குச் சென்று ஆவணங்கள் மற்றும் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தால் போதுமானதாக இருந்தது
புதிய முறை: தற்போது இந்த விதிவிலக்கு முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்தியாவில் பிறந்த கைக்குழந்தைகள் முதல் 17 வயது வரையிலான அனைத்துச் சிறுவர், சிறுமிகளும் பெற்றோருடன் தூதரகம் அல்லது விசா விண்ணப்ப மய்யத்திற்கு (VAC) நேரில் வரவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் பெற்றோர், நேர்காணல் தேதியைத் திட்டமிடும்போதே குழந்தைகளையும் அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இந்த புதிய விதிமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகத் தூதரகம் அறிவித்துள்ளது.
