பெங்களுரு, ஆக. 16- உச்ச நீதிமன்றத்தில் காவிரி தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், கருநாடக அரசு கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்குத் திறந்துவிடப்படும் நீரின் அளவை அதிகரித்துள்ளது.
கே.ஆர்.எஸ். அணை
கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணையில் இருந்து விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் மற்றும் நீர்வரத்து தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கபினி அணை:
கபினி அணையில் இருந்து சுமார் 12,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
இவ்விரு அணைகளில் இருந்தும் சேர்த்து மொத்தம் 15,000 கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீர்வரத்து கணிசமாக அதிகரிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 17இல் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
காவிரி நீரை உடனடி யாகத் திறந்துவிட கருநாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு அரசு மற்றும் திமுக உள்ளிட்ட தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனுக்கள் வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரவுள்ள சூழலில், கருநாடக அரசு கூடுதல் காவிரி நீரைத் திறந்துவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
