‘சுதந்திரம்’, ‘விடுதலை’ என்பது
மண்ணுக்கு மட்டுமா? மக்களுக்கு வேண்டாமா?
இன்னமும் ஜாதியும், தீண்டாமையும் இருக்கும் நாடு எப்படி உண்மைச் சுதந்திர நாடாகும்?
ஆகஸ்ட் 15: எஜமானர்கள் மாறும் ‘‘மேட்ஓவர்’’ (Madeover) மட்டுமே என்று தந்தை பெரியார் ஏன் சொன்னார்? ‘சுதந்திரம்’, ‘விடுதலை’ என்பது மண்ணுக்கு மட்டுமா? மக்களுக்கு வேண்டாமா? இன்னமும் ஜாதியும், தீண்டாமையும் இருக்கும் நாடு எப்படி சுதந்திர நாடாகும்? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
1947 இல் பிரிட்டிஷ் ஆட்சி இந்திய நாட்டை விட்டு வெளியேறியது. காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்றது – அப்போதே அண்ணல் காந்தியார், ‘ஒரு கட்சியின் ஆட்சியாக அமைக்காமல், பிற கட்சி கருத்தியாளர்களானாலும், சிறந்த நிபுணர்களை அழைத்துப் பொறுப்பேற்கச் செய்து, இடைக்கால ஆட்சியை அமையுங்கள்’ என்று அறிவுரை கூறினார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் லஞ்சம் ஊழல் தலைதூக்க ஆரம்பித்ததை உணர்ந்து ‘இனி காங்கிரஸ் தேவையில்லை; அதைக் கலைத்து விடுங்கள்’ என்று சரியான அறிவுரை கூறினார்.
ஆனால், பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் அதை நடைமுறைக்குக் கொண்டுவரத் தயாராக இல்லை.
தந்ைத பெரியார், தனது முன்னோக்குப் பார்வையோடு கூறினார்!
தந்தை பெரியார் அவர்கள் – ‘‘ஆகஸ்டு 15 திராவி டர்களுக்குக் கிடைத்த உண்மையான சுதந்திரம் ஆக இது இருக்காது. பழைய எஜமானனுக்குப் பதில், புதிய எஜமானன் வந்து, ஆளுவோராக ஆக்கப்படும் ஆட்சி அதிகார ‘மேட் ஓவர்’ (Madeover) என்ற எஜமானர் மாற்ற நாளாகவோ, மகிழ்ச்சியற்ற நாளாகவோ தான் அது இருக்கும்’’ என்று தனது முன்னோக்குப் பார்வையோடு கூறினார்.
திடீரென்று தந்தை பெரியார் அப்படிப்பட்ட ஒரு முடிவை எடுத்து, இந்தக் கருத்தைக் கூறவில்லை. மற்ற பெரும்பாலோர் சுதந்திர நாளை ஆதரித்துக் கூறும்போது, எதிர்நீச்சல் கருத்தாகத் தந்தை பெரியார் ஏன் இதைத் ‘துக்க நாள்’ என்று எதிர்த்துக் கூறினார்; கூறவேண்டிய காரண, காரியம் என்னவென்று சிந்திக்காமலே, திடீர்த் ‘‘தேச பக்தர்களாகிவிட்ட சிலர்’’ உள்பட பலரும், தந்தை பெரியாரை – திராவிடர் கழகத்தினை வசைபாடுவதையே வழமையாக்கிக் கொண்டுள்ளனர்!
இந்தப் பிரச்சினையை – விருப்பு, வெறுப்பின்றி ஆராயவேண்டும்!
அப்படி ஏன் கூறினார்? ‘‘அந்த காங்கிரசுக்குத் தமிழ்நாட்டில் நீர்ப்பாய்ச்சி, காத்து, பட்டிதொட்டியெல்லாம் கதர்மூலம் காங்கிரஸ் சுதேசி இயக்கம், காந்தி புகழ் பரவிட – கைவலிக்க, கைராட்டினம், தக்ளியில் நூல் நூற்று, காங்கிரசை ஈரோட்டில் தனது தாழ்வாரத்தில் வளர்த்தார்’’ என்று திரு.வி.க. போன்ற தலைவர்கள் கூறியதை நினைவிற்கொண்டு, இந்தப் பிரச்சினையை – விருப்பு வெறுப்பின்றி ஆராயவேண்டும்.
ஒரு சமூக விஞ்ஞான இயக்கத்தைத் தொடங்கினார்!
உலகில் எங்குமில்லாத வர்ண தர்மம் – ஜாதிக் கொடுமையும், அதன் விளைவாகத் தீண்டாமை, நெருங்காமை, பார்க்காமை என்ற காட்டுமிராண்டிகளுக்குக் கூடத் தெரியாத ஒரு முறையை, வந்தேறிய ஆரியம், தனது வேத கால நாகரிகத்தின்மூலம் திணித்து, பெரும்பாலான உழைக்கும் மக்களை ‘மிலேச்சர்கள்’, ‘தஸ்யூக்கள்’, ‘சண்டாளர்கள்’, ‘சூத்திரர்கள்’, ‘அவர்ணஸ்தர்கள்’ என்றது – மகளிருக்கும் இதே வர்ண அடுக்குமுறை. அனைவருக்கும் கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் என்று மக்களைப் பிரித்து வைத்துப் பெரும்பாலான உழைக்கும், பாடுபடும் மக்களைத் தொடக்கூடாதவர்களாகவும், படிக்கக் கூடாதவர்களாவும், உடலுழைப்பைத் தவிர வேறு எந்தத் தொழிலையும், ‘‘பொறாமையின்றி செய்ய வேண்டிய நிரந்தர அடிமைகளாக்கி’’ வைத்திருக்கும் கொடுமை கண்டு, கொதித்தெழுந்து, அதற்குத் தக்க பரிகாரம் செய்ய முனைந்தார்.
காங்கிரசில் சுமார் 5 ஆண்டு காலத்திற்குக் கடு மையாக உழைத்து, உழைப்பு மட்டுமல்லாமல், சொந்தப் பொருளையும், அக் கொள்கைக்காக இழந்து, காங்கிரஸ் என்ற அமைப்பு, ‘தேசியப் போர்வை’யில் ஆரியர் ஆதிக்கத்தைக் காங்கிரஸ் கட்சிமூலம் நிலை நிறுத்திவரும் கொடுமையை அனுபவப்பூர்வமாக உணர்ந்தபடியால், ‘பார்ப்பனரல்லாதார் கட்சியான ஜஸ்டிஸ் கட்சி எனும் திராவிடக் கட்சியை எதிர்த்து, காங்கிரசில் சமத்துவம், சமூகநீதி ஏற்படும் என்று நம்பியது சரியான கருத்தல்ல’ என்பதை உணர்ந்து, சமத்துவத்திற்காக, சுயமரியாதைக்காகப் பதவி பற்றிக் கவலைப்படாத ஒரு சமூக விஞ்ஞான இயக்கத்தைத் தொடங்கினார்.
அதற்குமுன் காங்கிரசில் இருந்துகொண்டே சேரன்மாதேவி குருகுலம், வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி கண்டார். ஸநாதன வர்ண ஜாதியின் கொடுமையை முற்றாக உணர்ந்தும், புரிந்தும் கொண்டதால்தான், 1924 ஆம் ஆண்டிலேயே, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தபோது, துணிச்சலாக ஒரு கருத்தை வெளியிட்டார்.
Speaking at a public meeting at Salem, E. V. Ramaswami Naicker said they must settle the Brahmin question even while the British supremacy lasted, otherwise they would have to suffer under the tyranny of what he called “Brahmnocracy” என சேலத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியது, அது அக்கால ‘இந்து’ நாளேட்டில் வந்துள்ளது. (ஆதாரம்: A Hundred Years Of The Hindu, Page 337)
பிறகு, காங்கிரசைவிட்டு வெளியேறி, சுயமரியாதை இயக்கம் கண்ட பிறகும், படுதோல்விக்குப் பிறகு, நீதிக்கட்சி அவரால் புத்தெழுச்சிப் பெற வேண்டிய அவசியத்தை உணர்ந்து, அதற்கு வழிகாட்டியாக ஆனார்.
காங்கிரஸ் கோரும் சுய ஆட்சி, ‘தேசியம் என்ற பூச்சுப் பூசிய பார்ப்பனர் ஆட்சியே!’
இங்குள்ள பார்ப்பனர்கள் படித்த கூட்டமாக, காங்கிரஸ் ஆதிக்கத் தலைவர்களாக இருந்ததாலும், ஊடகங்களை தங்கள் வயப்பட்டதாக ஆக்கி வைத்திருக்கும் செல்வாக்குக் காரணமாகவும், பிரிட்டிஷ் அரசு பார்ப்பனர்களின் ஆதரவு முக்கியம் எனக் கருதி, நீதிக்கட்சியிடம் அவ்வளவு நெருக்கம் காட்டாத நிலையிருந்தது. அடுத்து ‘சுயராஜ்யம்’ என்ற பெயர் – பார்ப்பன உயர்ஜாதியின ‘சுக ராஜ்யம்’ ஆகிவிடுவதைத் தடுக்கவும், இவர்களைப்பற்றி பிரிட்டிஷார் சரி வர புரிந்துகொள்ளாதிருப்பதை மாற்றவும், ‘‘சைமன் கமிஷன் வரவேற்கப்படவேண்டும்; காங்கிரஸ் புறக்கணிப்பு நிலையை நீதிக்கட்சி எடுக்கக் கூடாது’’ என்று தக்க அறிவுரை கூறி, ‘Self rule will be nothing but Brahmin Rule’ காங்கிரஸ் கோரும் சுய ஆட்சி, ‘தேசியம் என்ற பூச்சுப் பூசிய பார்ப்பனர் ஆட்சியே’ என்பதை மக்களுக்கு விளங்க வைத்தார் தந்தை பெரியார்!
இந்தியாவுக்ெகன்று அமைக்கப்பட்ட புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுத் தலைவர் டாக்டர் அம்பேத்கரின் அரிய சட்ட ஞானம், கடுமையான உழைப்பைப் பெற்று உருவாக்கப்பட்ட நிலையில், அவ்வரைவுக் குழுவில் (இறுதிக் கட்டத்தின்படி) ஆறு பேரில் 4 பேர் பார்ப்பனர்களே (கே.எம்.முன்ஷி, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், டி.டி.கிருஷ்ணமாச்சாரி, சர்.என். கோபாலசாமி அய்யங்கார்) – பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரதிநிதி யாரும் கிடையாது.
‘ஜாதி ஒழிந்த இந்தியா’வாக நம் நாட்டை ஆக்க, டாக்டர் அம்பேத்கர் எவ்வளவு முயன்றும் அரசியலமைப்புச் சட்டத்தில் வெறும் ‘‘தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது; அதனை எந்த ரூபத்தில் கடைப்பிடித்தாலும், அது சட்ட விரோதம்’’ என்ற அளவில் மட்டுமேதான் சட்டப் பிரிவை அவரால் புகுத்த முடிந்தது.
அரசியலமைப்புச் சட்டத்தினை எரித்து,
3000 பேர் தமிழ்நாட்டில் சிறை சென்றனர்!
ஜாதியைப் பாதுகாக்கும் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தி, ஜாதியை ஒழிக்க வழி வகை காண, ஒன்றிய அரசுக்குக் கெடு கொடுத்து, அரசியலமைப்புச் சட்டத்தினை எரித்து, 3000 பேர் தமிழ்நாட்டில் சிறை சென்று, 3 ஆண்டுகள் வரை தண்டனையைப் பெற்று வரலாறு படைத்தனர்.
‘ஜாதி ஒழிந்த இந்தியா’ என்பதை மட்டுமல்ல, உண்மையாகவே தீண்டாமை ஒழிந்த இந்தியாவாகவும் நம் நாடு இல்லை என்பதற்கு, 50 ஆண்டுகளுக்கு முன்பு பாபு ஜெகஜீவன்ராம் அவர்களுக்கு நேர்ந்த அவமானமும், சில நாள்களுக்கு முன்பு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு திட்டமிட்டு ஏற்படுத்திய அவமானமுமே சான்றாகாதா?
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எல்லாம் வெறும் வாய்ப் பேச்சும், எழுத்தும்தானா?
தந்தை பெரியார் கேட்ட கேள்வி!
தந்தை பெரியார் இதனை முன்னோக்காகவே முற்றாகப் புரிந்தும், உணர்ந்த அனுபவத்தின் காரணமாகவும், ‘‘இது உண்மையான சுதந்திர நாள் அல்ல’’ என்று மனம் வெந்து கூறினார்.
‘‘‘சுதந்திரம்’, ‘விடுதலை’ என்பது வெறும் மண்ணுக்கு மட்டுமா? மக்களுக்கு சமத்துவ, சம வாய்ப்புமூலம் கிட்டியுள்ளதா?’’ என்ற சமத்துவ, மனிதநேய உணர்வின் நெருப்புப் பொறிதான், தந்தை பெரியார் கேட்ட கேள்வி!
‘பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை’ என்ற பாட்டு வரிகள், வெறும் பாட்டுக்காகத்தானோ?
தந்தை பெரியாரின் முன்னோக்கு இப்போது புரிகிறதா, சிந்தியுங்கள்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
15.8.2026
