சென்னை, ஆக.15– சென்னை திருவொற்றியூர் தாங்கல் வசந்த் நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷின் மகன் தனுஷ் (வயது 16). இவர் விம்கோ நகரில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று (14.8.2026) மாலை சுமார் 4.30 மணியளவில் பள்ளி அருகே உள்ள அஜாக்ஸ் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள காலி மைதானத்தில் தனுஷ் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தார். இதையடுத்து நிகழ்வு இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் தனுஷின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நிகர்வு இடத்திற்கு வண்ணாரப்பேட்டை காவல்துறை துணை ஆணையர் பாஸ்கரன், திருவொற்றியூர் உதவி ஆணையர் பால்ராஜ், காவல் ஆய்வாளர் அலெக்ஸ் உள்ளிட்ட காவல் துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், 2 நாட்களுக்கு முன்பு அதே பள்ளியில் பிளஸ்-2 மாணவர் ஒருவருக்கும், பிளஸ்-1 மாணவர் ஒவ்வொருவருக்கும் யார் மூத்தவர் (சீனியர்) என்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்தப் பள்ளியின் பிளஸ்-1 மாணவர், அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோருடன் சேர்ந்து தனுஷை அஜாக்ஸ் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள காலி மைதானத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த தனுஷ், நிகழ்வு இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து திருவொற்றியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பிளஸ்-1 மாணவர் உள்பட 10-க்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர்.
மெரினா கடற்கரையில்…
சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நீச்சல் குளம் பின்பகுதியில் இளைஞர் ஒருவர் தலை உள்பட உடல் முழுவதும் பலத்த காயங்களோடு நேற்று (14.8.2026) காலை கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அண்ணாசதுக்கம் காவல் துறையினர் இறந்து கிடந்த இளைஞரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார். விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் நேபாளத்தை சேர்ந்த சிறீராம்சாகா(27) என்பது தெரிந்தது.
இதுதொடர்பாக பீகாரை சேர்ந்த சன்னிசதா(26) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். சென்டிரல் ரயில் நிலையத்தில் ரயில் ஏறி அவசரமாக அவர் சொந்த ஊருக்கு தப்பி ஓட முயன்றபோது அவரை பிடித்தனர். விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் சிறீராம்சாகாவை சன்னிசதா அடித்து படுகொலை செய்தது உறுதியானது.
கும்மிடிப்பூண்டியில்…
அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள பாதிரிவேடு காவல்துறை எல்லைக்கு உட்பட்டது சாணாபுத்தூர் கிராமம். இங்கு வசித்து வரும் கூலித்தொழிலாளி ராஜா என்பவரின் மூத்த மகன் ரஞ்சன்(18). சாணாபுத்தூர் கிராமத்தில் வீட்டின் அருகே தனியார் வயல்வெளியில் உள்ள நினைவிடம் ஒன்றின் மீது நேற்று காலை ரஞ்சன் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையில் புகுந்து காவலாளிகளை தாக்கி கட்டிப்போட்டு ரூ.4 லட்சம் பொருள் கொள்ளை வழக்கில் கைதானவர்களில் ரஞ்சனும் ஒருவர் என தெரியவந்தது.
இந்த வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த காமேஷ்(22) என்பவரையும் பாதிரிவேடு காவல் துறையினர் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட ரஞ்சனும், காமேசும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் இரவு ரஞ்சன், காமேஷை மது குடிக்க அழைத்தார். இருவரும் வயல்வெளியில் நினைவிடங்கள் உள்ள இடத்துக்கு சென்றனர். அங்கு மது போதை தலைக்கு ஏறிய நிலையில், முன் விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் ரஞ்சனை, காமேஷ் சரமாரியாக வெட்டி கொன்றது தெரியவந்தது.

