இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை, உரிய படிப்புக்கேற்ற வேலையின்மை, வலுவான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மூலம் இளைஞர்களைத் தகுதிப்படுத்துதல் ஆகியவற்றில் இந்திய ஒன்றிய அரசு கவனம் செலுத்தவில்லை என்பது இன்றைய இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சினையாகும். உலகில் மக்கள் தொகை மிகுந்த நாடு என்ற வகையில் மிக முக்கியமான மனிதவளம் நிறைந்திருக்கும் இந்தியாவில், அதை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவதற்கான எந்தத் திட்டமிடலும் இல்லாமல், ஆட்டு மந்தைகளைப் போல அவர்களை ஜாதி, மத, பக்தி, சினிமா போதைகளுக்குள் தள்ளுவதைத் தான் அரசுகள் செய்துகொண்டிருக்கின்றன.
இந்தியத் தொழிலாளர் சந்தையின் நிலை, ‘வழக்கமான நிலை’ (நீண்ட கால ஆண்டுப் போக்குகள்) மற்றும் ‘தற்போதைய வாராந்திர நிலை’ (குறுகிய கால, அடிக்கடி மாறும் போக்குகள்) ஆகியவற்றின் மூலம் மதிப்பிடப்படுகிறது. கடந்த ஜூன் 2026, காலமுறை தொழிலாளர் வள ஆய்வுத் (Periodic Labour Force Survey – PLFS) தரவுகளின்படி, 15 வயது, அதற்கு மேற்பட்டவர்களுக்கான அகில இந்திய வேலையின்மை விகிதம் சுமார் 5.5% (நடப்பு வாரவிகிதம்) ஆக உள்ளது; இது கரோனா பெருந் தொற்றுக்குப் பிந்தைய பொருளாதார மாற்றங்களுக்குப் பிறகு நிலைமை கிட்டத்தட்ட இவ்வாறு தான் இருக்கிறது.
கிராமப்புறங்களில் இருக்கும் விவசாயப் பணிகள், பிற உடல் உழைப்புப் பணிகள் காரணமாக, அதிகத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தபடுகின்றனர். இதனால் வேலைவாய்ப்பின்மை சுமார் 5% ஆக உள்ளது. ஆனால், நகர்ப்புற அளவில் வேலையின்மை சுமார் 6.6% என அதிகமாக உள்ளது. போட்டி நிறைந்த வேலைவாய்ப்புச் சந்தையும், படித்த இளைஞர்களுக்குத் திறனுக்கேற்ற வேலை கிடைக்காததாலும் நகர்ப்புற இளைஞர்கள் அதிகச் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
இந்தியாவில் விவசாயம் இன்னமும் கூட அதிகத் தொழிலாளர்களைப் பயன்படுத்தும் மிகப்பெரிய பங்கைக் கொண்டிருக்கிறது. சுமார் 43%–44% அளவுக்குத் தொழிலாளர்கள் அதில் ஈடுபட்டுள்ளனர். உற்பத்தித் துறையில் ஈடுபடும் தொழிலாளர்கள் சுமார் 12.1% ஆக உயர்வு அடைந்துள்ளது. பிற சேவைகள் துறையில் சுமார் 13.1% ஆக தொழிலாளர் எண்ணிக்கை உயர்வு அடைந்துள்ளது. காலங்காலமாக, இந்தியத் தொழிலாளர் சந்தையில் சுயதொழில் செய்யும் தொழிலாளர்களும், முறைசாராத தற்காலிகத் தொழிலாளர்களாக இருப்போருமே அதிகம் இருந்து வந்துள்ளனர். தொடர்ந்து ஒரே தொழிலை முறையான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளைப் பெற்றுச் செய்வோர் அதிகப்பட வேண்டும். ஒவ்வொரு காலத்திலும் கிடைத்த வேலையைச் செய்வதும், அதன் மூலம் எதிலுமே திறனற்றவர்களாக, அனுபவமற்றவர்களாக, அத் துறையில் மேம்பட வாய்ப்பு அற்றவர்களாகவே பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர். இது இந்தியத் தொழிலாளர் வளத்தில் உள்ள மிகப்பெரிய சிக்கலாகும்.
அண்மைக்காலத்துக் குறியீடுகள், முறைசார்ந்த கட்டமைப்புகளை நோக்கி ஒரு மாற்றம் நிகழ்வதைக் காட்டுகின்றன. முறையான ஊதியம், அல்லது மாத ஊதியம் பெறும் வேலைவாய்ப்பின் பங்கு சுமார் 23.6% ஆக சற்று அதிகரித்துள்ளது; அதேவேளையில், சுயதொழில் வாய்ப்புகளின் பங்கு 56.2% ஆகக் குறைந்துள்ளது.
இதற்கு முக்கியமான காரணம், கடந்த 12 ஆண்டுகளில் நடந்த பா.ஜ.க. ஆட்சியின் பொருளாதார நெருக்கடிகளே! பண மதிப்பிழப்பு, டிஜிட்டல் பரிவர்த்தனைகள், ஜி.எஸ்.டி உயர்வு போன்றவை சுயதொழில் செய்வோரையெல்லாம் தொழிலாளர்களாக மாற்றியுள்ளது. தொழிலாளர்களைத் திறன் சார்ந்து வளர்க்க வேண்டும் என்பதும், சுயதொழில்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதும் முரணானவை அல்ல. சுய தொழில் செய்யும் தொழில் முனைவோரைத் தொழிலாளிகள் ஆக்கிவிடக் கூடாது. ஏற்கெனவே தொழிலாளர்களாக உள்ளோர் திறன் பெற வேண்டும் என்பது வளர்ச்சிக்கான திட்டமிடலே ஆகும். ஆனால், இதில் பா.ஜ.க. அரசு தவறியுள்ளது கிராமப்புறப் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 36% முதல் 38% வரை உள்ளதாக மாதாந்திர அறிக்கைகள் தெரிவிக்கின்றன; ஆனால் நகர்ப்புறப் பெண்களின் பங்கேற்பு விகிதம் குறைவாக, அதாவது 24% முதல் 25% வரை மட்டுமே உள்ளது. உயர்கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய விரிவாக்கத்திற்கு ஈடாக, உயர் திறன் தேவைப்படும் முறையான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை; இதனால் கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையே கடுமையான ஏற்றத்தாழ்வு நிலவுகிறது.
இந்தத் தரவுகளின்படி, நகர்ப்புற இளைஞர்களிடையே வேலை யின்மை விகிதம் சுமார் 13.6% என்ற உயர் நிலையில் உள்ளது. மேலும், 15 முதல் 25 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளிடையே வேலையின்மை விகிதம் கிட்டத்தட்ட 40% ஆக உயர்ந்துள்ளது; வெறும் கல்விச் சான்றிதழ்கள் மட்டுமே நிலையான வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதில்லை. அவர்களுக்குத் தொழில் வாய்ப்புகளை, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டமிடல் அரசிடம் இருக்க வேண்டும். கல்வித் துறையில் நெருக்கடி தருவதும், சமூகநீதிப்படி கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை மறுப்பதும் இந்திய வர்ணாசிரம முறையினால் நிகழும் பெருங்கேடுகள் அல்லவா?
இந்தியாவின் மக்கள் தொகை பரந்துபட்டதாக இருந்தும், ஒரு குறிப்பிடத்தக்க பகுதியினர் கல்வி, வேலைவாய்ப்பு அல்லது பயிற்சியில் இல்லாமல், பொருளாதாரச் செயல்பாடுகளில் பங்கேற்க முடியாமல் தடுக்கப்பட்டு உள்ளனர். 15–24 வயதுடையவர்களில் 21% பேரும், 15–29 வயதுடையவர்களில் 25% பேரும் கல்வி, வேலைவாய்ப்பு அல்லது பயிற்சி என எதிலும் ஈடுபடாத நிலையில் உள்ளனர். இவர்களில் பலர் தீவிரமான வேலை தேடும் முயற்சிகளிலிருந்து விலகிவிட்டதாலோ, முற்றிலும் விரக்தியடைந்ததாலோ பாரம்பரிய வேலையின்மைப் பதிவேடுகளில் இடம்பெறுவதில்லை என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியப் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் பாடத்திட்டங்களுக்கும், நவீனத் தொழில்துறைகள் எதிர்பார்க்கும் செயல்பாட்டுத் திறன்களுக்கும் இடையே ஆழமான கட்டமைப்பு இடைவெளி உள்ளது; இது பரவலான வேலைவாய்ப்புத் திறன் பற்றாக்குறைக்கு வழிவகுக்கிறது. இந்தியாவில் ஏற்படும் வேலைவாய்ப்பு வளர்ச்சியில் பெரும்பகுதி குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட, முறைசாரா வேலைகளாகவே உள்ளன.
ஆழமாக வேரூன்றிய பாலின ஏற்றத்தாழ்வுகளும், ஊதியம் பெறாத குடும்பப் பராமரிப்புச் சுமைகளும் பெண்களின் தொழிலாளர் வாய்ப்புகளைப் பெரிதும் குறைக்கின்றன என்கிறது புள்ளிவிவரம்.
விவரமறிந்த புள்ளிகளாக (சரியான நபர்கள்) நிர்வாகத்தில் இருப்போர் இருந்தால், இந்தப் புள்ளிவிவரங்கள் மாறும். இல்லை யேல், திறனற்ற தொழிலாளர்கள், சரியான ஊதியமற்ற தொழிலாளர் கூட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், வீணடிக்கப்படும் பெண்கள் என்னும் சரிபகுதி மனித வளம் என்றே நிலைமை தொடரும். விழிக்க வேண்டியது அரசும், மக்களும், அறிவார்ந்த சமூகமும்!
