‘‘எங்களைக் கொல்வதை நிறுத்துங்கள்!’’

4 Min Read

“எங்களைக் கொல்வதை நிறுத்துங்கள்!” என்று புதுடில்லியில் ஒலித்த அந்தக் குரல் மனித மனங்களை உலுக்கக் கூடியது. கழிவுநீர்க் கால்வாய்களையும், திடக் கழிவுத் தொட்டிகளையும் சுத்தம் செய்ய மக்களை கட்டாயப்படுத்தும் சட்டவிரோத நடைமுறையை ஒழிக்க வேண்டும் என்றும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும் என்றும் கோரி, கடந்த ஆகஸ்ட் 4 அன்று இந்தியத் தலைநகர் புதுடில்லியில் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் கூடி போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

கடந்த ஜூலை 21 அன்று, ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நாடாளுமன்றத்தில் அளித்த தகவலின்படி, ஜனவரி 2021 முதல் ஜூன் 2026 வரையிலான காலத்தில் கழிவுநீர்க் கால்வாய், திடக் கழிவுத் தொட்டிகளில் (செப்டிக்டோக் ஏற்பட்ட விபத்துகளில் 332 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சஃபாய் கர்மச்சாரி அந்தோலன்  என்ற அமைப்பு திரட்டிய அதே காலகட்டத்திற்கான தரவுகளின் படி, இந்த எண்ணிக்கை 593 ஆகும்.

“இவ்வளவு அதிகமான உயிரிழப்புகளை அப்பட்டமாக மறைப்பதும், 261 நபர்களையும் அவர்களின் குடும்பங்களையும் கணக்கில் காட்டாமல், மறைப்பதும், புறக்கணிப்பதும் அரசின் குற்றமாகும்; வெட்கக்கேடான செயலாகும்” என்ற அந்த அமைப்பின் குற்றச்சாட்டு, அரசுகள் தரும் புள்ளிவிவரங்கள் மீதான நம்பகத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் மிக முக்கியமான பிரச்சினையாகும். நாடாளுமன்றத்தில் உண்மைக்கு மாறான தகவலைத் தருவது, நாடாளுமன்றத்தின் சிறப்புரிமையை மீறும் செயலாகும்.

உயிரிழப்புகளைத் தடுப்பதற்குப் பதிலாக உண்மையை மறைத்து, பிரச்சினையின் தீவிரத்தை மறைக்க முயற்சி செய்வதா? இது எதிர்க்கட்சிகளால் முக்கியப் பிரச்சினையாக்கப்பட வேண்டாமா? இந்தத் தரவு மறைப்பை ‘தேசிய அவமானம்’ என்றும்,  ‘தீண்டாமைச் செயல்’ என்றும் அந்த அமைப்பு குற்றம்சாட்டுவதில் பிழையென்ன?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்று வலியுறுத்தும் கூறு 14, தீண்டாமை ஒழிக்கப்பட்டதாகக் கூறும் கூறு 17, தனி மனிதரின் உயிருக்கும், தனி மனித சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் தரும் கூறு 21, கொடித்தடிமைகள் போன்று கட்டாயமாக ஒருவரைப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்று தடுக்கும் கூறு 24 ஆகியவற்றை மீறும் அடிப்படை மனிதத்தன்மையற்ற செயல் இது!

மேலும் இந்தியாவில் “கையால் துப்புரவு செய்யும் தொழிலாளர்களாகப் பணியமர்த்துவதைத் தடைசெய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வுச் சட்டம், 2013” நடைமுறையில் இருக்கிறது; கழிவகற்றும் பணியை இயந்திரமயமாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பல வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது;  ஆனாலும் மனிதக் கழிவை மனிதர்களே அள்ளும் கொடுமை இன்னும் இந்த நாட்டில் இருக்கிறது; கழிவுநீர் தொட்டிகளில் நூற்றுக்கணக்கான மரணங்கள் ஆண்டுதோறும் நடந்துவருகின்றன என்றால்,  சட்டங்களும், நீதிமன்ற ஆணைகளும் இந்தப் பிரச்சினையில் உரிய தீவிரத்துடன் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று தானே பொருள்!

2026-ஆம் ஆண்டின் முதல் 207 நாட்களில் மட்டும் இப்பணியில் 113 பேர் உயிரிழந்துள்ளனர்; இதில் கடந்த மாதத்தில் (ஜூலை) மட்டும் 15 பேர் பலியாகியுள்ளனர் என்று கணக்குக் காட்டுகிறது சஃபாய் கர்மச்சாரி அமைப்பு.

இவ்வாண்டில் இதுவரை பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், அரியானா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கருநாடகா, டில்லி, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இத்தகைய உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

பல மரணங்களை விபத்துகள் என்றும், நச்சு வாயுத் தாக்குதல் அல்லது பணியிட அலட்சியம் என்றும் தவறாக வகைப்படுத்தப்படுவதால்,  அவற்றை இந்தக் கணக்கில் கொண்டு வராமல் தவிர்க்கிறார்கள். இதனால், பலர் பொறுப்பிலிருந்து தப்பிவிடுகிறார்கள் என்று குற்றம்சாட்டுகிறது தலித் ஆதிவாசி சக்தி அதிகார் மன்ச் (தசாம்) என்ற அமைப்பு. நச்சு வாயு கண்டறியும் கருவிகள், ஆக்சிஜன், சுவாச உபகரணங்கள், பாதுகாப்புக் கவசங்கள்,  கயிறுகள் போன்ற அடிப்படையான அவசரகால மீட்புப் பாதுகாப்புக் கருவிகள் இல்லாமலேயே, தொழிலாளர்கள் அடிக்கடி குறுகிய இடங்களுக்குள் அனுப்பப்படுகின்றனர். அதில் ஒருவருக்குப் பிரச்சினை எழும்போது, சக ஊழியர்களைக் காப்பாற்றுவதற்காக அடுத்தடுத்து தொழிலாளர்கள் முயலும்போது நிகழும் சங்கிலித் தொடர் மரணங்கள், உயிரிழப்புகளை மேலும் அதிகரிக்கின்றன.

குறிப்பாக ஜூன் 26 அன்று புதுடில்லியில் முண்ட்காவில் நடந்த நிகழ்வில் அருண், சந்தீப், சந்த் ஆகிய மூன்று தொழிலாளர்கள் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது உயிரிழந்தனர். கொஞ்சமும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அவர்களுக்கு வழங்கப்படாததுடன், மனிதக் கழிவைக் கையால் அள்ளக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர் என்று உண்மை அறியும் குழு கண்டறிந்தது.

‘இயந்திரமயமாக்கப்பட்ட சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளும்  சூழலுக்கான தேசிய நடவடிக்கை’ என்ற திட்டம் ’நமஸ்தே’ என்ற பெயரில் 2023  ஜூலை மாதத்தில் ஒன்றிய அரசால் தொடங்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டம் உயிரிழப்புகளைத் தடுப்பதில் தோல்வியடைந்துள்ளது, அத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன  என்று சுட்டிக் காட்டுகிறார் இக்கொடுமை களுக்கெதிராகத் தொடர்ந்து போராடி வரும் பெஜவாடா வில்சன் அவர்கள்.

இன்றும் இப்பணி தொடர்ந்து நீடிப்பதற்கு, அத் தொழில் ஜாதி அடிப்படையிலான தன்மையுடன் இருப்பதுதானே காரணம்! ஜாதி வெறியேறினால் மட்டுமல்ல; இயல்பிலேயே ஜாதி என்பது மனிதத் தன்மையற்றது என்பதற்கு வேறு சான்று ஏதாவது உண்டா?

சுதந்திரம் பெற்று 80-ஆம் ஆண்டைத் தொடப்போகிறோம் என்று பெருமை கொள்ளும் ஒரு நாட்டில் மனிதத் தன்மையற்ற இந்த இழிநிலை தொடரலாமா? இந்தப் படுகொலைகள் இனியும் அரங்கேறலாமா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *