நச்சு மரங்களை அகற்றும் வேலையை, அதன் வேர்களை நோக்கி நடத்துவோம்!

நாடு முழுவதும் கொந்தளிப்பான சூழல் எழுந்திருக்கிறது. ‘நீட்’ தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் குறித்தும், சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்தும் எந்த சரியான நடவடிக்கையும் எடுக்காத ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியத் தலைநகர் டில்லியில், ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டம், பேரணிகளில் பங்கேற்ற மாணவர்கள், இளைஞர்கள் மீது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. அரசும், டில்லியை நிர்வகிக்கும் இந்திய உள்துறையின் கட்டுப்பாட்டிலான காவல்துறையும், துணை ராணுவப் படைகளும் நிகழ்த்தியிருக்கும் தாக்குதலும், வன்முறைகளும் மக்களிடம் பெரும் தாக்கத்தை உருவாக்கியிருக்கின்றன.

சாதாரணமான அரசியல் போராட்டமல்ல; நாட்டின் எதிர்காலமான இளைஞர்களின் வாழ்வைப் பாழாக்கும் முறைகேடுகளும், மோசடிகளும் குறித்து அரசு முறையாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே, குறைந்தபட்ச பொறுப்புணர்வு கூட இல்லையே என்ற ஆற்றாமையும், கோபமும் தான் இளைஞர்களின் போராட்டமாக மாறியது. அவற்றுக்கான முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய மாணவர்களின் மண்டைகளை உடைத்து, அவர்கள் மீது வன்முறையை ஏவியிருப்பது அசட்டுத்தனமான அரசின் எதேச்சதிகாரமான நடவடிக்கையாகும். இதன் மூலம் தங்கள் உரிமைகளைப் பெறுவதற்காகவும், நாட்டின் அவலங்களுக்கு எதிராகவும் போராட வரும் இளைஞர்களை நசுக்கிவிடலாம் என்று ஒன்றிய பா.ஜ.க. அரசு கருதுகிறது.

வேலையின்மை, பொருளாதார நெருக்கடிகள், புலம்பெயர்ந்து பிழைப்பு தேட வேண்டிய அவல நிலை, விலைவாசி உயர்வு, பறிக்கப்படும் மானியங்கள், நிறுத்தப்படும் உதவித் தொகைகள் என்று அன்றாடம் இளைஞர்களும், மாணவர்களும் நேரடியாக இந்த அரசால் கொடுமைகளுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் நலனுக்கான நடவடிக்கைகளை எடுக்காமல், நசிந்துபோயிருக்கும் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான செயல்பாடுகளில் இறங்காமல், மடைமாற்றும் அரசியலையும், மதவாதத்தைத் தூண்டும் அரசியலையும், அதற்கான சட்டங்களை இயற்றுவதற்கு கட்சி தாவும் அரசியலையும் நடத்திக் கொண்டிருக்கிறது ஒன்றிய ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. அரசு!

பொதுப் பிரச்சினைகளுக்குப் போராட வருபவர்களை, குரல்கொடுக்க வருபவர்களை, தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்த நினைப்பவர்களை நாட்டின் உச்சநீதிமன்றமே கரப்பான்பூச்சிகள் என்று விளித்து அவர்களை நசுக்கப் பார்க்கிற போது, அதையே அடையாளமாகக் கொண்டு இளைஞர்கள் திரண்டிருக்கிறார்கள்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் நேற்றைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, அவர்களின் கோரிக்கைகள் முழுமையானதாக இல்லாமல் இருக்கலாம்; பிரச்சினைகளின் ஆழத்திற்குச் சென்று அதன் வேரைக் கண்டறியாத போராட்டங்களாக இருக்கலாம்; ஆனால், அவர்கள் அதன் விளைவுகளால் பாதிக்கப்பட்டவர்கள். அந்த உணர்ச்சி அவர்களைத் திரள வைத்திருக்கிறது. அவர்களுக்குத் தீவிரமான அரசியல் பார்வை இதுவரை இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இனி அவர்கள் அவற்றைத் தேடித் தெரிந்துகொள்வார்கள்.

இந்நாட்டின் இன்றைய அவல நிலைக்குக் காரணமான கார்ப்பரேட் – மதவாதக் கூட்டு அரசியல், அதன் பின்னணியில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ்., அது நிலைநிறுத்தப் பாடுபடும் பார்ப்பனிய – வர்ணாசிரம ஆதிக்கம். இவற்றுக்காகத் தான் இந்த ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்வது கடினமானதல்ல! மேலோட்டமான போராட்டங்கள், அரசின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு என்பதாக மட்டும் இந்தப் பிரச்சினை நீர்த்துப் போய்விடக் கூடாது.

‘நீட்’ என்ற ஒற்றைப் பிரச்சினையை எடுத்துக் கொண்டாலே, இதன் பின்னணியில் நடந்திருப்பவை என்ன? நாடு முழுவதும் வெவ்வேறு கல்வி முறைகளும், பாரபட்சமான கல்வி வசதிகளும் இருக்கும் நிலையில் ஒட்டுமொத்தமாக ஒரே தகுதித் தேர்வு என்று ஒன்றைக் கொண்டு வர முடியுமா? மாநிலங்கள் தான் பல்கலைக்கழகங்களை, மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கின என்னும் போது, அதில் யாரைச் சேர்க்க வேண்டும் – அதற்கென்ன தகுதி வேண்டும் என்பதை ஒன்றிய அரசு நிர்ணயம் செய்வதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி உரிமை உண்டா?

இத்தகையதொரு தேர்வு எங்கள் மாநிலங்களுக்குத் தேவையில்லை, நாங்களே அவற்றை நிர்வகித்துக் கொள்கிறோம் என்று பல மாநிலங்கள் தொடர்ந்து கோரியபோது, பொது நுழைவுத் தேர்வைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுசீராய்வு கோரி மாற்றியது யார்? மாநிலச் சட்டங்களை மீறும் வகையில் புதிய மருத்துவக் கவுன்சில் சட்டத்தைக் கொண்டுவந்து நீட்டைக் கட்டாயப்படுத்தியது யார்? அதற்குப் பிறகும் நீட்டுக்கெதிராக தமிழ்நாடு இரண்டு ஆட்சிக் காலங்களில் நான்கு சட்டங்களை நிறைவேற்றி, நான்கு முறை அனுப்பியபோதும், ஆளுநரைக் கொண்டும், குடியரசுத் தலைவரைக் கொண்டும் அவற்றை நிராகரித்தது யார்?

அரியலூரில் ஓர் அனிதா தொடங்கி, நாடு முழுக்க நூற்றுக்கணக்கான இளங்குருத்துகளின் உயிரைக் குடித்த பின்னும், கார்ப்பரேட்டுகளும், கோச்சிங் சென்டர்களும் கொழிப்பதற்காக இன்றும் ‘நீட்’ என்னும் கொடுவாளைக் கையிலேந்தி அலையும் கொலைகாரக் கூட்டம் எது? தேர்வுகளில் முறைகேடு, தேர்வு மய்யத்தில் முறைகேடு, பயிற்சி மய்யங்களில் முறைகேடு, கேள்வித் தாளில் முறைகேடு, மருத்துவக் கல்லூரி இடங்களில் முறைகேடு, ஆள்மாறாட்டம் என்று ஒட்டுமொத்தமாக முறைகேடுகளின் கூடாரமாக இருக்கும் ’நீட்’டை விடாப்பிடியாகத் திணிப்பது யார்? அதன் நோக்கம் என்ன? அதனால் நுழைவுத் தேர்வு என்னும் வளாகத்திற்குள்ளேயே நுழைய முடியாமல் தவிர்க்கப்பட்டுள்ள ஏழை, எளிய, கிராமப்புற, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் ஏக்கத்தின் தாக்கம் என்ன?

இப்படி எழும் கேள்விகளின் விடைகள் அவர்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்யட்டும். இவற்றைத் திணிக்க தேசியக் கல்விக் கொள்கை என்னும் பேராயுதத்தைக் கல்வித் துறையின் மீது ஏவுகிறதே ஒன்றிய அரசு, அதன் மீது மாணவர்கள், இளைஞர்களின் கவனம் திரும்பட்டும். அவற்றை ஒழித்து, புதுப் பாதை காணும் வரை ஓய மாட்டோம் என்னும் போர்க்குரல் ஒலிக்கட்டும்.

நீட், தேசியக் கல்விக் கொள்கை, அரிய வகை உயர்ஜாதி ஏழைகளுக்கு மட்டுமேயான இடஒதுக்கீடு என்று தொடரும் சமூகக் கொடுமைகளை, சமூக அநீதிகளை எதிர்த்துத் தொடர்ந்து போராடிவரும் திராவிடர் கழகம் மேற்கொள்ளும் பிரச்சாரங்களும், போராட்டங்களும் மாணவர்களிடம் சென்று சேரட்டும்!

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த வாரம் ஆறு இடங்களில் தொடங்கவிருக்கும் நான்குநாள் இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணம் இந்த விழிப்புணர்வை நாடு முழுக்கத் தோற்றுவிக்கட்டும்! காற்றில் படபடக்கும் திராவிடர் கழகக் கொடியுடன், கிராமங்கள், நகரங்கள், பட்டிதொட்டிகள் என பாய்ந்து செல்லும் கருப்புடை தரித்த நெருப்பு இளைஞர்களின் பரப்புரை மக்களுக்கு இந்தப் பிரச்சினையின் ஆழத்தை எடுத்துச் செ(ா)ல்லட்டும். தமிழ்நாட்டின் ஆண்டோர், ஆள்வோர் யாராயினும் இதில் ஒரே குரல் என்பதை அந்த வாகனங்களின் உறுமல் சத்தம் எதிரொலிக்கட்டும்!

‘நீட்’ என்னும் கல்வி சமூக அநீதி ஒழியட்டும் ஒழியட்டும்!

‘உயர்ஜாதியினருக்கான இடஒதுக்கீடு’ என்னும் சமூக அநீதி மாயட்டும்! மாளட்டும்!!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *