ராமேசுவரம், ஆக. 13- உள்நாட்டுப் போரின்போது அகதிகளாக இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களை மீண்டும் தாயகம் திரும்புவதற்கு குடிவரவு ஒப்புதல் அளிக்க இலங்கை நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இலங்கையில் 1983ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் தொடங்கியபோது அந்நாட்டு ராணுவம் மற்றும் சிங்களவர்களால் தமிழர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். இதனால் இலங்கையில் இருந்து அகதிகளாக உலகம் முழுவதும் தமிழ் மக்கள் புலம்பெயரத் தொடங்கினர்.
கடந்த 1983ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டுக்கு 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 பேர் அகதிகளாக வந்துள்ளனர். அகதிகளுக்கான அய்க்கிய நாடுகள் உயர் ஆணையம் (UNHCR) தமிழ்நாடு மற்றும் இந்திய அரசின் மூலமாக சுமார் 2 லட்சத்து 12 ஆயிரம் அகதிகள் இலங்கைக்கு திரும்பிச் சென்றனர்.
தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் உள்ள 108 முகாம்களில் 58 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் தங்கியுள்ளனர். முகாமுக்கு வெளியே உள்ள காவல்நிலையங்களில் பதிவு செய்து இலங்கை தமிழர்கள் 34 ஆயிரம் பேர் தங்கி உள்ளனர். மேலும் ஒடிசாவின் மால்கன்கிரியில் உள்ள முகாமில் 60 பேர் தங்கி உள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து இலங்கையின் ஊடகத் துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
இந்தியாவில் முகாமில் தங்கி உள்ள இலங்கை அகதிகளுக்கான அய்க்கிய நாடுகள் உயர் ஆணையம் மூலமாகவும், சுயமாகவும் தாயகத்துக்கு (இலங்கைக்கு) திரும்ப விரும்புகிறார்கள். அவர்கள் இலங்கைக்கு மீண்டும் வருவதற்கு தேவையான குடிவரவு அனுமதிக்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி உள்ளது.
இலங்கைக்கு வர விரும்புவோர் 2006 ஜூன் ஒன்றாம் தேதிக்கு முன்னர் இலங்கையை விட்டுச் சென்றிருக்க வேண்டும். இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூலம் தம்மை இலங்கையர் எனும் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
அவர்கள் மீது கொலை, அரசுக்கு எதிராக துரோகம், குற்றங்களை மேற்கொள்ளாத ஆள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இவர்களுக்கு தற்காலிக வெளிநாட்டு கடவுச்சீட்டை வழங்கி இலங்கைக்கு வருகை தருவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
