வெளிநாட்டு நன்கொடை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒரே ஒரு பிஜேபி உறுப்பினர் தவிர  அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றம்!

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 12– தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெளிநாட்டு நன்கொடை திருத்த மசோதாவை எதிர்க்கும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டன.

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட (எஃப்சிஆர்ஏ) திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெறக் கோரி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று (11.8.2026) தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் பேசும்போது, ‘‘எஃப்சிஆர்ஏ விதிமுறைகள் தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சியையும், சிறுபான்மையினர் கல்வி நிறுவனங் களின் செயல்பாட்டையும் பாதிக்கும். இந்தச் சட்டத்தால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவார்கள். இந்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். இந்த மசோதா தொடர்பாக மாநில அரசுகளுடன் ஒன்றிய அரசு விரிவாக ஆலோசனை நடத்த வேண்டும்’’ என்றார்.

இதைத்தொடர்ந்து இத்தீர்மானத்தின் மீது அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் ஆதரித்துப் பேசினர்.

தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர் வெளிநடப்பு செய்தார். அதைத்தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக  பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.

பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த நிதியமைச்சரின் அறிவிப்பு

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்,
அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சி!

சென்னை, ஆக. 12- ‘ஓய்வூதியம் மற்றும் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்துத் தமிழ்நாடு நிதியமைச்சர் சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பு, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது’ என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பொ.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்துப் பரிசீலிக்கப்படும் எனத் தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.15,997.05 கோடியிலிருந்து ரூ.4,997.05 கோடியாகக் குறைத்து, ரூ.11,000 கோடியை அரசு நீக்கம் செய்துள்ளது.

மேலும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ரூ.3,000 கோடியும், பள்ளிக் கல்வித் துறை நிதி ஒதுக்கீட்டில் ரூ.4,007 கோடியும் குறைக்கப்பட்டுள்ளது.

ககன்தீப் சிங் பேடி, அய்ஏஎஸ் தலைமையிலான குழுவின் பரிந்துரையைச் சுட்டிக்காட்டி, ஒன்றிய அரசு கடன் வாங்க அனுமதித்தால் மட்டுமே டிஏபிஎஸ் திட்டத்தை அமல்படுத்த முடியும் எனக் கூறி அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்க முயல்கிறது.

ஒன்றிய அரசைச் சாடி ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் வஞ்சிப்பது ஏற்புடையதல்ல. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நலனுக்கு எதிராகச் செயல்படும் எந்தவொரு அரசாங்கத்தையும், வலுவான போராட்டங்களின் மூலம் மாற்றக்கூடிய வல்லமை ஊழியர்களுக்கு உண்டு என்பதை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, நிதியமைச்சரின் ஓய்வூதியம் தொடர்பான அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கான பூர்வாங்கப் பணிகளைத் தொடங்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய நிதியைத் தாமதமின்றி உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

முதுகலை ஆசிரியர்களின் தனிப்பட்ட கோரிக்கைகளைச் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தமிழ்நாடு அரசு உடனடியாக முன்வர வேண்டும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *