புதுடில்லி, ஆக. 12– மாணவர்கள் இடை நிற்றல் காரணமாக பெரும் எண்ணிக்கையில் நாடுமுழுவதும் தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளனவா? சென்ற இரண்டு ஆண்டுகளில் இப்படி மூடப்பட்ட பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை என்ன? இது தொடர்பாக மாநில வாரியான விவரங்கள் என்ன? இந்த நிலைமையை சரி செய்ய ஒன்றிய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் விவரங்கள் என்ன? என நாடு தழுவிய அளவில் ஆரம்பக் கல்வி நிலையங்கள் போதிய மாணவர்கள் இல்லாத காரணத்தினால் மூடப்பட்டுவரும் கவலைக்குரிய பிரச்சினை குறித்து திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்கள் ஒன்றிய கல்வி அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு ஒன்றிய பள்ளிக்கல்வி இணை அமைச்சர் நேற்று முன்தினம் (10.8.2026) மக்கள வையில் எழுத்துப் பூர்வமாக விடை அளித்தார்.
அதில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் பள்ளிக்கல்வி தொடர்பான அனைத்துப் பொறுப்புகளும் மாநில அரசுகளின் வசம் உள்ளது. எனவே, கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு பிளஸ் என்ற தலைப்பில் நிறுவப்பட்டுள்ள தளத்தில் அனைத்து மாநிலங்களும் பள்ளிகள் மற்றும் மாண வர்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
9,946 அரசு தொடக்கப் பள்ளிகள் மூடல்!
இவ்வாறு மாநிலங்களும் ஒன்றிய நிலப்பகுதி அரசுகளும் பதிவேற்றியுள்ள தகவல்கள், புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் கடந்த 2024-2025 ஆம் ஆண்டில் எட்டுலட்சத்து எண்பத்தி ஒன்ப தாயிரத்து எண்ணூற்று ஆறு (8,89,806) ஆக இருந்த அரசு ஆரம்பப் பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை, சென்ற 2025 –2026 இல் எட்டு லட்சத்து எழுபத்தி ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பது (8,79,940) ஆக குறைந்து உள்ளது. அதாவது, நாடு முழு வதும் 9,946 (ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தாறு) பள்ளிகள், (கிட்டத்தட்ட 10,000 பள்ளிகள்) இடை நிற்றல் காரணமாக சென்ற ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் மூடப்பட்டன.
இதில், ஆந்திராவில் ,1446 பள்ளிகள், கருநாட காவில் 615 பள்ளிகள், மத்திய பிரதேசத்தில் 1,043 பள்ளிகள், மேகாலயாவில் 2,174 பள்ளிகள், ராஜஸ்தானில் 473 பள்ளிகள், தெலங்கானாவில் 1,861 பள்ளிகளும், மேற்கு வங்காளத்தில் 587 பள்ளிகளும் என அதிக எண்ணிக்கையில் ஆரம்ப அரசுப் பள்ளிகள் மூடப்பட்ட மாநிலங்கள் ஆகும்.
இடைநிற்றல் பிரச்சினை!
பி.எம்.சிறீ திட்டத்தின் கீழ் முன் மாதிரி சிறப்புப் பள்ளிகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் வாயிலாக பள்ளிகளில் இடைநிற்றல் பிரச்சினையை எதிர்கொள்ள ஒன்றிய அரசு தனது பல்வேறு திட்டங்கள் மூலம் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்குதல், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் இடைநிற்றலைக் குறைக்கவும் புதிய பள்ளிகளைத் திறக்கவும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உறைவிடப் பள்ளிகள் அமைக்கவும், பிரதமர் பழங்குடி நியாய மகா அபியான் பெருந்திட்டத்தின் (பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான்) கீழ் தங்கும் விடுதிகள் கட்டவும் மாநில அரசுகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இதன் விளைவாக 2018-2019 ஆம் ஆண்டில், கிராமப்புறங்களில் 96.49 என்ற அளவில் இருந்த பள்ளிக் கல்வியை அணுகும் விகிதாச் சாரம் (Gross Access Ratio GAR) 2025- 2026 இல் 98.14 என மேம்பட்டுள்ளது.
இவ்வாறு ஒன்றிய பள்ளிக் கல்வி மற்றும் எழுத்த றிவுத் துறையின் இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி தனது விரிவான பதிலில் தெரிவித்தார்.
