குமுளி, ஆக.11- பாதுகாக்கப் பட்ட வனப்பகுதியான பெரியாறு அணையின் ட்ரோன் பதிவுகளை சமூக வலைதளங்களில் ரீல்ஸ் களாக பெரியகுளம் தவெக சட்டமன்ற உறுப்பினர் சபரி அய்ங்கரன் பதிவிட்டார். கேரள வனத்துறையின் புகார் அடிப்படையில் தமிழ்நாடு நீர்வளத் துறை விசாரணையை தொடங்கியுள்ளது.
முல்லை பெரியாறு அணை பெரியாறு புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் வெளியாட்கள் இங்கு எளிதாக செல்ல முடியாது. மேலும் இங்கு வரவும், ஒளிப்படம் எடுக்கவும் கெடுபிடியான விதிமுறைகள் உள்ளன.
இந்நிலையில் கடந்த ஆக.8-ஆம் தேதி கம்பம் பள்ளத்தாக்கு பகுதியின் முதல் போகத்துக்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்காக தேக்கடி வனப்பகுதி யான தமிழ்நாட்டு தண்ணீர் திறந்துவிடப்படும் மதகு பகுதியில் ஏராளமானோர் வந்திருந்தனர்.
ஆட்சியர் இரா.வைத்திநாதன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், கம்பம், பெரியகுளம் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெகநாத் மிஸ்ரா, சபரி அய்ங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது சபரிஅய்ங்கரனின் அய்டி விங்க் சார்பில் ட்ரோன் படக்கருவி பயன்படுத்தப்பட்டது. இதில் நீர் திறப்பு, பூ தூவுதல், கடந்து செல்லும் நீர் உள்ளிட் டவை காட்சிகளாக பதிவு செய்யப்பட்டன. மேலும், உயரத்தில் இருந்தபடி கழுகுப் பார்வையில் வனப்பகுதி மற்றும் அதில் நீர் கடந்து செல்லும் பாதை களும் பதிவு செய்யப்பட்டன.
பின்பு இந்தப் பதிவுகள் ரீல்ஸ்களாக பின்னணி இசை யுடன் சபரி அய்ங்கரனின் சமூக வலைதளங்களில் பதிவேற் றப்பட்டன.
இது குறித்து கேரள வனத் துறையினரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து கேரள வனத் துறையினர், தமிழ்நாடு நீர்வளத்துறையிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.
பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், எப்படி இதனை அனுமதிக்கலாம் என்று கூறி விவரம் கேட்டுள்ளனர்.
கேரள வனத் துறையினர் புகாரில் தமிழக தவெக சட்டமன்ற உறுப்பினர் விசாரணை நடத்தி வருவது தமிழ்நாடு – கேரள பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
