புதுடில்லி, ஜூன் 21- தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கு 8.25 சத விகிதம் வட்டி வழங்குவதற்கு ஒன்றிய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தலைமையில் 2026 மார்ச் 2 அன்று நடைபெற்ற வருங்கால வைப்பு நிதி (இபிஎப் – ஈபிஎப்ஓ) அமைப்பின் மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தில் 8.25 சதவிகித வட்டி விகிதம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இந்த பரிந்துரைக்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, தற்போது 8.25 சதவிகித வட்டி வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வட்டிப் பணம் இந்த ஜூன் மாத இறுதிக்குள் 7 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களின் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும் என்றும் அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன்மூலம் இ.பி.எப். வட்டி விகிதம், மூன்றாவது ஆண்டாக 8.25 சதவிகிதமாகவே தொடர்கிறது. இதற்கு முன்னர் 2023-24 மற்றும் 2024-25 ஆகிய நிதியாண்டுகளி லும் இதே 8.25 சதவிகித வட்டி விகிதமே வழங்கப்பட்டது.
வழக்கமாக ஒன்றிய அரசு வட்டி விகிதத்தை அறிவித்த பிறகு, அது ஊழியர்களின் கணக்குகளில் வரவு ஆவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், தற்போது அறிமுகப்படுத்தியுள்ள மேம்படுத்தப்பட்ட புதிய டிஜிட்டல் தொழில்நுட்ப முறையினால் இந்த ஆண்டு வட்டிப் பணம் கணக்கிடப்பட்டு, மிக விரைவாக கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளது.
