‘நீட்’ தேர்வுக்கு எதிரான இரு சக்கர வாகனப் பேரணியை முடக்குவது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக.11 நீட் தேர்வுக்கு எதிரான இருசக்கர வாகனப் பேரணியை முடக்குவது ஏன்? என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்ற பெயரில் உயர் ஜாதியினருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்தும் தமிழ்நாடு முழுவதும் கடந்த ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2 வரை திராவிடர் கழகம் நடத்தவிருந்த இரு சக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்துக்குக் காவல் துறை அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்து, இரு சக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி அளிக்க தமிழ்நாடு காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு மாண்பமை நீதியரசர் வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஜெ.ரவீந்திரன், வாகனப் பேரணிக்கு அனுமதி கோரி அளித்த மனுக்கள் அனைத்தும் போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஜான் சத்யன், இந்த அரசு போராட்டங்களுக்கு எதிரானது அல்ல. இதுபோன்ற போராட்டங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது. பேரணி தொடங்க அனுமதி கோரியுள்ள இடங்கள் அனைத்துமே நெரிசல் மிகுந்த பகுதிகளாக இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. இந்தப் பேரணியில் பங்கேற்க ஒருவருக்கு அனுமதி கொடுத்தால், பின்னர் இந்த எண்ணிக்கை அதிகமாகி சட்டம் – – ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறினர்.

இதையடுத்து, ‘‘பேச்சுரிமை கருத்து ரிமை போல், போராடுவதும் மக்களின் அடிப்படை உரிமை. நீட் தேர்வுக்கு எதிரான இருசக்கர வாகனப் பேரணியை முடக்குவது ஏன்?’’ என காவல் துறைக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இந்த வாகனப் பேரணிக்கான  பெட்ரோல் செலவை அரசு வழங்கப் போவதில்லை? பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக் காரணங்களால் இவ்வாறு அனுமதி மறுத்தால் ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்?

மாநில அரசு குடிமக்களின் அடிப்படை உரிமையை நசுக்கக் கூடாது எனவும் தெரிவித்த நீதிபதி,  அனுமதி மறுத்தது தொடர்பாக சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார்.

பின்னர், பேரணிக்கு அனுமதி மறுத்தது குறித்து கூடுதல் விளக்கம் அளிக்க காவல் துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை ஏற்று,  விசாரணையை ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். மனுதாரர் சார்பில் வழக்குரைஞர்கள் த. வீரசேகரன், மு.சென்னியப்பன், திருப்பூர் பாண்டியன்,  ஜெ.துரைசாமி,  கே. வீரமணி, எஸ்.நாகநாதன், பா.மணியம்மை,  கே. பாலசுப்பிரமணியன்,  சோ.சுரேஷ், தளபதி பாண்டியன்,  துரை. அருண் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *