தமிழ்நாட்டின் உரிமையை, வளர்ச்சியை, சமூகநீதியை, அமைதியை மனதில் கொண்டு தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிப்பீர்! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடிய 17-ஆம் சட்டப்பேரவைக்கான தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ளது. 106 ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கிய நீதிக்கட்சி ஆட்சிப் பயணத்தின் நீட்சியாக, ‘திராவிட மாடல் அரசு’ இது என்று அறிவித்து, சமூகநீதிக்கு முன்னுரிமை தந்து கடந்த அய்ந்தாண்டு காலத்தைச் சாதனைச் சரித்திர ஏட்டில் பதித்து வைத்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ‘‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்தச் சாதனைகளை முன்னிறுத்தியும், அடுத்த தலைமுறைக்கான திட்டங்களை மக்கள் முன்வைத்தும் களத்தில் தலை நிமிர்ந்து நிற்கிறார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், தே.மு.தி.க. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி, எஸ்.டி.பி.அய்., கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசம் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. மக்கள் நீதி மய்யம், ஆதித்தமிழர் பேரவை, ஆதித் தமிழர் கட்சி, தமிழர் தேசிய முன்னணி (பழ. நெடுமாறன்), தமிழ்ப்புலிகள் கட்சி உள்ளிட்ட எண்ணற்ற அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கின்றன.
தமிழ்நாட்டில் தனக்கு ஏற்கெனவே வாக்களித் தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற எந்தப் பாகுபாடும் இன்றி, “எங்களுக்கு வாக்களிக்காதவர்களும் கூட, இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று வருந்தும் வண்ணம் எனது ஆட்சி இருக்கும்” என்று தொடக்கத்தில் அறிவித்ததை, இறுதி வரைக்கும் நிலைநாட்டி மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! நிரூபித்தும் காட்டியுள்ளார் அவரது ஆட்சி மூலம்.
இந்தத் தேர்தல் பந்தயத்தில் ஜட்கா குதிரைகளும், சண்டிக் குதிரைகளும், பொய்க்கால் குதிரைகளும் போட்டியிடுகின்றன. ஆனால், எவராலும் விஞ்ச முடியாத ஆற்றல் மிகு செயல்வேகத்துடன் விரையும் பந்தயக் குதிரையாக மட்டுமல்ல, எந்தத் தடைகளையும் தாண்டும் “போர்க் குதிரைப் படை”யாக முன்னிற்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தான்! இரட்டை என்ஜின் ஆட்சிகளைவிட சாதனைகள்!
ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ்.சின் அடிமைகளாகவே தங்களை வரித்துக் கொண்டுவிட்ட ‘அமித்ஷா தி.மு.க.’வும், அதனுடன் தங்களை அடகுவைத்துக் கொண்டுவிட்டதுடன் தமிழ்நாட்டையும் காட்டிக் கொடுக்கத் துணிந்துவிட்ட கூட்டணியும், திடீர் குபீர் அரசியல்வாதியாகி, இன்னும் நடிகர்-ரசிகர் மனநிலையைத் தாண்டாத கும்பலும், ஆர்.எஸ்.எஸ்.சின் மறைமுக அடியாட்களுமாக பா.ஜ.க.வின் ஏ டீம், பி டீம், சி டீமாகத் தேர்தல் களத்தில் வலம் வருகின்றனர்.
மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்! தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள்! குறிப்பாக மகளிரின் உறுதியான ஆதரவு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக்குக் கிடைத்துள்ளது என்பதைக் கள நிலவரங்கள் உணர்த்துகின்றன. நாமே நேரில் கண்ட சாட்சியாக இருக்கிறோம்.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் வெற்றி ஒரு வரலாற்றுத் தேவை – காலத்தின் கட்டாயம். தமிழ்நாட்டை எப்படியாவது கபளீகரம் செய்துவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசை எதிர்த்து நின்று போராடுவதற்குக் கொள்கைத் தெளிவும், துணிவும், உறுதியும் மிக்க ஓர் எஃகு நெஞ்சம் தேவை! துரோகப் புத்திக்கு இடம்தராத ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்றே கட்டமைக்கப்பட்ட பெரும்படை ஒன்று தேவை! அது திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்பதிலும், அதன் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் அந்தப் படையை நடத்தத் தகுதியான தலைவர் என்பதிலும், தமிழ்நாடு மட்டுமல்ல… இந்தியாவில் உள்ள எவருக்கும் எள்ளளவும் அட்டியில்லை.
அந்த வெற்றியைக் கொஞ்சமும் குறையாமல் கொண்டு வந்து சேர்ப்பது தான் இந்த 36 மணி நேரத்தில் நாம் செய்ய வேண்டிய பணி! கவனஞ் சிதறக் கூடாது.
கடமை முன்னிற்கும் போது கண் துஞ்சாது, கவனம் சிதறாது களப் பணி ஆற்ற வேண்டும்!
தமிழ்நாட்டின் வாக்காளப் பெருமக்களே,
நமது வாழ்வை, அமைதியை, வளர்ச்சியை, சமூகநீதியை, மகளிர் உரிமையை, கல்வி வளர்ச்சியைப் பாதுகாக்க உதயசூரியன், கை, முரசு, பானை, கதிர் அரிவாள், அரிவாள் சுத்தியல் நட்சத்திரம், ஏணி ஆகிய சின்னங்களுக்கு வாக்களிப்பீர்! தமிழ்நாடு திராவிட மண் – சமூகநீதி மண் – மதச்சார்பற்ற மண் – ‘‘பெரியார் மண்’’ – சுயமரியாதை மிக்க திராவிட மண் என்பதை நிரூபிப்பீர் என்று திராவிடர் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

