ஒடுகத்தூர், ஆக.10 தமிழ்நாட்டில் போதிய மழை இல்லாத காலங்களில் கழுதைகளுக்குத் (பஞ்சகல்யாணம், பஞ்சகல்யாணி) திருமணம் செய்து வைத்தால் நல்ல மழை பொழியும் என்று மூடத்தன நிகழ்வு இன்றளவும் அணைக்கட்டு, ஒடுகத்தூர் பகுதி களில் கடைப்பிடிக்கப்பட்டு வரு கிறதாம்.
ஒடுகத்தூர் சுற்றுப்பகுதிகளில் கடும் வறட்சியும், தண்ணீர்ப் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. இதனால் பயிர்கள் முற்றிலும் காய்ந்து போய் விட்டது. எனவே விவசாயிகளின் நன்மைக்காகவும், மழை வேண்டியும், தண்ணீர் பற்றாக்குறை போக்கவும் வேலூர் மாவட்டம், ஒடுகத்தூரில் கழுதை களுக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கப்பட்டதாம்.
இதற்காக கடந்த 2 நாள்களுக்கு முன்பு திருமண அழைப்பிதழ் அச்சிட்டு சுற்றியுள்ள கிராமங்களில் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்பிறகு 9.8.2026 அன்று காலை ஆண் கழுதைக்கு மணமகன் அலங்கார மும், பெண் கழுதைக்கு மணமகள் அலங்காரமும் செய்து மேலதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனவாம்.
பின்னர், ஒடுகத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள பிள்ளையார் கோயிலில் பெண் அழைப்பு வேறு நடைபெற்றதாம். தொடர்ந்து பேரூ ராட்சி அலுவலகத்தில் உள்ள எல்லையம்மனுக்கு சிறப்புப் பூஜைகளும் செய்து மணப்பந்தல் அமைத்து அங்கு மணக்கோலத்தில் இரு கழுதைகளையும் அழைத்து வந்தனராம்.
தொடர்ந்து, பந்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பின்னர், கழுதைகளுக்கு பால், மஞ்சள், குங்குமத்தால் சிறப்பு சம்பிரதாயங்கள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாக பூஜை கள் செய்து பார்ப்பன அர்ச்சகர் மந்திரங்கள் முழங்க, கூடியிருந்த ஏராளமான பொதுமக்கள் மத்தியில் மழை வேண்டி கழுதைகளுக்குத் கல்யாணம் நடத்தி வைக்கப்பட்ட தாம்.
அப்போது, ஏராளமான பொது மக்கள் ‘மொய்’ எழுதி ‘ஆசிர்வாதம்’ பெற்று சென்றனராம். பின்னர், திருமணம் செய்து வைக்கப்பட்ட கழுதைகள் மணக்கோலத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்று ஆங்காங்கே உள்ள எல்லை கோயில்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாம்!
