பெரியாரின் தனிச் செயலாளர் புலவர் இமயவரம்பன்!

புலவர் கோ.இமயவரம்பன் அவர்கள் தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் வேளாண் குடும்பத்தில் பிறந்தவர்.

வசதி படைத்த மிராசுதாரர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது மாமா திருவைகாவூர் பிச்சை பிரபலமான கம்யூனிஸ்ட் தலைவர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ‘புலவர்’ பட்டம் படிக்க வந்தபோது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொருளாதார ஆனர்ஸ் வகுப்பில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள் ஆயினர். ஆசிரியர் மூலம் தந்தை பெரியாரின் அறிமுகம் கிடைத்தது.

இவருக்கு திருமணம் செய்துவைக்க இவரது பெற்றோர் உறவுப் பெண்களை பார்த்து பேசிவிட்டு அழைத்த நிலையில் மறுத்து விட்டார். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், ஆசிரியர் கி.வீரமணி உள் பட பலர் வலியுறுத்தியும் புலவர் இசையவே இல்லை.

ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் திருமணத்திற்கு திருச்சி வந்தவர், அய்யாவுடனே தங்கி அவருடன் சுற்றுப் பயணம் செல்லத் தொடங்கினார் அய்யாவின் உதவியாளராக!

தந்தை பெரியாரை அவரது இறுதி நாட்களில் அன்னை மணியம்மையாருக்கு அடுத்து உரிமையுடன் பொறுப்புடன் கவனித்து வந்தவர்.

அய்யாவிடம் எந்த ஊதியமும் பெறாமல், வீட்டிலிருந்து பணம் வரவழைத்துத் தொண்டு செய்தவர். தந்தை பெரியாருடன் இணைந்த காலம் முதல் இறுதி காலம் வரை அவரது சிறுநீர் வாளியைச் சுமந்தவர்.

தந்தை பெரியாரின் மறைவிற்குப் பின் அன்னை மணியம்மையாரின் உதவியாளராக பணியாற்றினார். அன்னை மணியம்மையாரின் மறைவிற்கு பின் கழகத் தலைவர் ஆசிரியருக்கு உதவியாக கல்வி நிறுவனங்களுக்கு நிர்வாகி யாக, தாளாளராக பணியாற்றினார். குறிப்பாக அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தினை வளர்த்தெடுத்ததில் இவரது பங்களிப்பு மகத்தானது.

‘உண்மை’ ஏடு தொடங்கிய காலம் முதல் தன் இறுதி நாள்வரை அதன் ஆசிரியராகப் பணியாற்றியவர் எந்த ஊதியமும் பெறாமலேயே!

புலவர் தலைசிறந்த எழுத்தாளர் ஆவார். ‘விடுதலை’ ஏட்டில் எழுதியத் தொடரான, “பார்ப்பனர் சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும்’ என்னும் நூல் பார்ப்பனர்கள் செய்த சதிகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்திய தொடராகும். பின்னர் இது நூலாக வெளிவந்து பல பதிப்புகளைக் கண்டது. ‘உண்மை’ ஏட்டில் அவர் எழுதிய ‘வரலாற்றில் சதி’ மற்றும் ‘வரலாற்றில் குழந்தை மணம்’ ஆகிய கட்டுரைத் தொடர்கள் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் தொகுக்கப்பட்டு ‘வரலாற்றில் பெண் கொடுமைகள்’ என்னும் தலைப்பில் தனி நூலாக வெளிவந்துள்ளது. இந்நூல் உடன்கட்டை ஏறுதல் பழக்கம் வேதகாலம் முதல் இருந்ததையும், அதனைத் தடுக்க முஸ்லீம் மன்னர்களும் ஆங்கிலேய ஆட்சியாளர்களும் மேற்கொண்ட முயற்சிகளையும் ஆதாரத்துடன் விளக்குகிறது.

‘இந்திய வரலாற்றில் நரபலி’ என்னும் நூல் பல்வேறு தகவல்களைத் தரும் நூலாகும். மேலும், ‘விடுதலை’, ‘ஞாயிறு மலர்’, ‘உண்மை’ ஏடுகளிலும் பெரியார் பிறந்த நாள் மலர்களிலும் ஏராளமானக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

திருமணம் செய்து கொள்ளாமல் இயக்கத்திற்காகவே வாழ்ந்த புலவர் இமயவரம்பன் 9.8.1994 அன்று மறைவுற்றார்.

வாழ்க புலவர் இமயவரம்பன்!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *